Advertisement

நிறைய முதல்வர்கள்; ஒற்றை தமிழகம்!

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்கு பின், நாமும் முதல்வராகி விடலாம் என, பல சினிமா கதாநாயகர்கள் கனவு கண்டு கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, ஜெ., மரணத்திற்கு பின், சில நடிகர்களுக்கு, அந்த கனவு நிறையவே வந்திருக்கிறது.

ஜெ., உயிருடன் இருந்த போது, வாயை திறக்காத சில கதாநாயக நடிகர்கள், இப்போது, பேப்பர்கள் கிழிய, அறிக்கை விடுகின்றனர்; ஆவேசமாக, சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர்.
குறிப்பாக, கமல், ரஜினி, விஜய், விஷால் போன்றோர், இந்த பட்டியலில் இருக்கின்றனர். இன்னும் கொஞ்ச நாள் போனால், சிம்பு, தனுஷ் கூட, அந்த பட்டியலில்,
தங்களை சேர்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!

நடிகர்களும், இந்நாட்டு குடிமக்கள் தான்; அவர்களும், இந்த சமூகத்தில் ஒருவர் தான் என்பதில், மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இவர்களுக்கு வந்துள்ள திடீர் வீரமும், திடீர் பொதுநல விருப்பத்தையும் தான், மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.சென்னையில் மின்சாரம் தாக்கி, இரு சிறுமியர் இறந்ததற்கு, 'அரசு சரியில்லை; நிர்வாகம் சரியில்லை' என, அறிக்கை விடுகின்றனர், கமலும், விஷாலும்!அவர்கள் கருத்து, நியாயமானதே. அதில், மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இதே, கமல் மற்றும் விஷால், 2015ல், சென்னையில் தானே இருந்தனர்... செம்பரம்பாக்கம் ஏரி திடீரென திறக்கப்பட்டதால், எத்தனை பெரிய பாதிப்பு சென்னை மக்களுக்கு எற்பட்டது... எத்தனை பேர் இறந்தனர்?
அப்போது எங்கே போயினர்,

கமலும், விஷாலும்... ஏன், அப்போது குரல் கொடுக்கவில்லை?வெறும், எதிர்ப்பு அரசியலை மட்டும் தான் நடிகர்களும், எதிர்க்கட்சிகளும், இப்போது செய்து கொண்டிருக்கின்றன. இது மட்டுமே, ஒருவரை முதல்வராக்கி விடாது.மக்களுக்காக, அவர்கள் என்ன திட்டம், கொள்கை வைத்துள்ளனர் என, முதலில் சொல்ல வேண்டும்; அதை, மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டும் தான், கமல், ரஜினி அல்லது மற்றொரு நடிகரால், முதல்வராக முயற்சிக்கவே முடியும்.'அண்ணன் எப்ப சாவான்; திண்ணை எப்ப கிடைக்கும்...' என, காத்திருந்த கதையாக, ஜெ., இறந்ததும், நடிகர் பட்டாளமே முதல்வர் கனவில் மிதக்கிறது.
என்னவாகும் தமிழகம்!எடுத்த உடனே, எம்.ஜி.ஆர்., முதல்வராகி விடவில்லை. தன் படங்களில், தன் கருத்துக்களை மக்கள் மனதில் பதிய வைத்தார். அரசியலில் நீண்ட காலம் இருந்து, தி.மு.க., வளர்ச்சிக்காக பாடுபட்டு, கணக்கு கேட்டதற்காக வெளியேற்றப்பட்டு, புதுக்கட்சி துவக்கி, முதல்வரானார்.ஜெயலலிதாவுக்கும், முதல்வர் பதவி எளிதில் கிடைத்து விடவில்லை. கட்சியின் தலைமைக்காக, சத்துணவு திட்டம் பற்றி, ஊர்ஊராக பிரசாரம் செய்தார். கொள்கை பரப்பு செயலர் பதவி, முதலில் கிடைத்தது.

எம்.ஜி.ஆர்., மரணம், அ.தி.மு.க., பிளவு, சட்டசபையில் சேலை கிழிய போராட்டம் நடத்தியது என, எப்போதும், யாருக்காகவும் ஜெயலலிதா வாய் மூடிக்கிடந்ததே இல்லை; பயப்படவும் இல்லை.
கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் கூட, சட்டசபைக்கு தனியாக வந்து, பல குற்றச்சாட்டுகளுக்கு, ஜெ., பதில் தந்திருக்கிறார். 'சிறைக்குச் சென்றால், பெட்டி பாம்பாக அடங்கி விடுவார்' என, சிலர் கணக்கு போட்டனர். ஆனால், அவர், சீறும் பாம்பாகவே வெளியே வந்தார்.இறக்கும் வரை, தைரியமான பெண்ணாக, மக்கள் மனதில் தன்னை பதிய வைத்தார், ஜெயலலிதா. அப்போதைய பிரபலங்களான, ஆர்.எம்.வீரப்பன் முதல், நெடுஞ்செழியன் வரை, பலரை சமாளித்து தான், அரசியலில் ஜொலித்தார்.ஆனால், இப்போது முதல்வராக விரும்பும் குறிப்பிட்ட சில நடிகர்கள், ஜெயலலிதாவுக்கு பயந்து, வாயே திறக்காமல் இருந்தனர். இது தானே, உண்மை!எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ., போல, நடிகர்களாக இருந்து முதல்வரானவர்களை உதாரணமாக வைத்து, முதல்வர் பதவிக்கு வர ஆசைப்பட்டால், முதலில் கொஞ்சம்
தைரியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள், நடிகர்களே!அதற்காக, விஜயகாந்த் மாதிரி, தொண்டர்களின் தலையில் குட்டுவது; 'மைக்'கை பிடித்து அடிப்பது; நாக்கைத் துருத்தி, திட்டுவது என, இருக்கும் பெயரை கெடுத்து கொள்ளக் கூடாது.மக்கள் பிரச்னைக்காக, உங்கள் ரசிகர்களுடன் களத்தில் இறங்கி போராடுங்கள். குறை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்காமல், உங்கள் ரசிகர் மன்றங்களை பயன்படுத்தி, குளம் துார்வாருதல், மழைநீரை அகற்றுதல் என, பொது பணிகளில் ஈடுபடுங்கள்.அப்போது, மக்கள் முடிவு செய்வர், தங்களை யார் ஆள வேண்டும்; யார் தங்களின் முதல்வராக வர வேண்டும் என்று. அதை விடுத்து, 'ஜெயலலிதா இல்லை; கருணாநிதிக்கு வயதாகி விட்டது. தமிழக அரசியல் களத்தில் குதித்தால் முதல்வராகி விடலாம்' என நினைத்தால், பலன் பூஜ்ஜியமாக தான் இருக்கும்!இ.எஸ்.லலிதாமதி சமூக நல விரும்பி
eslalitha@gmail.com

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (13)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement