Advertisement

நிறம் மாறும் விமர்சனத்தால் தரம் தாழும் அரசியல்

கருத்து சுதந்திரம் என்ற பெயரில், சமூக வலைதளங்களில், பெண்கள் மற்றும் தனிநபர்கள் மீதான, தரம் தாழ்ந்த விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.
பொது வாழ்க்கையில் உள்ளவர்கள், விமர்சனத்துக்கு ஆளாவது புதிதல்ல. விமர்சனத்தை ஏற்க முடியாதவர்கள், பெரிய பதவிகளுக்கோ, பொது வாழ்க்கைக்கோ, தகுதியானவர்களாக இருக்க முடியாது. பொது வாழ்வில் ஈடுபட்டு உள்ளவர்களையோ அல்லது தனிப்பட்ட ஒருவரையோ, ஆக்கபூர்வமான விமர்சனங்கள் தான், அவர்களிடம் உள்ள நிறை, குறைகளை, சீர்துாக்கி பார்த்து, அதற்கேற்ப செம்மைப்படுத்த உதவும்.
'பேஸ்புக், டுவிட்டர்' போன்ற சமூக வலைதளங்கள் வந்த பின், பொது வாழ்வில் உள்ளவர்களை, பொது வெளியில் மனம் போன போக்கில் விமர்சிப்பது அதிகரித்தது. அவை, பொதுமக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால், அரசியல் கட்சிகள், சமூக வலைதளத்தில் வெளியாகும் விமர்சனங்களை எதிர்கொள்ளவும், தங்கள் தரப்பு கருத்தை பதிவிடவும், தகவல் தொழில்நுட்ப பிரிவை துவங்கின.
காலப்போக்கில், 'மீம்ஸ்' எனப்படும், திரைப்பட காட்சி மற்றும் வீடியோ பதிவுகளை கலந்து, விமர்சிக்கும் பாணி அதிகமாக பரவியது. தமிழகத்தில், அதற்கு தப்பாத தலைவர்களே இல்லை எனலாம். குறிப்பாக, வைகோ, எச்.ராஜா, சீமான், விஜயகாந்த் போன்ற சிலர், கடுமையான கேலி, கிண்டல்களுக்கு ஆளாகி உள்ளனர்.
எனினும், சமீபகாலமாக, அரசியல் கொள்கைகள், கருத்துக்களை விமர்சிக்கும் நிலை மாறி, தனிநபர்களின் தோற்றம், சமூகப் பின்னணி ஆகியவற்றை, விஷமத்தனத்துடன் விமர்சிக்கும் போக்கு அதிகரித்து உள்ளது.
குறிப்பாக, பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள பெண்களை, தரம் தாழ்ந்து விமர்சிக்கும் போக்கு அதிகரித்துள்ளது. உதாரணத்திற்கு, பா.ஜ., மாநில தலைவர், தமிழிசையை, அவரது தோற்றத்தை வைத்து விமர்சித்திருப்பது, பலரை முகம் சுளிக்க வைத்து உள்ளது.
அவர், 'வி.சி., கட்சியினர், கட்டப் பஞ்சாயத்து செய்கின்றனர்' என, கருத்து தெரிவித்த பின், அவர் மீதான தனிப்பட்ட தாக்குதல்கள் அதிகரித்தன. தமிழிசையின் நிறத்தையும், சிகை அலங்காரத்தையும் குறித்த, மிக கீழ்த்தரமான விமர்சனங்கள் வெளியாகின. போலீசில், பா.ஜ.,வினர் புகார் செய்துள்ளனர்.
பா.ஜ.. முன்னாள், எம்.பி., தருண் விஜய், 'தென் மாநிலத்தவர்கள் போன்ற கறுப்பு நிறத்தவருடன், கோதுமை நிறமுடைய, நாங்கள் ஒற்றுமையாக வாழ்வது, சகிப்புத்தன்மைக்கு சான்று' என, ஏற்க முடியாத கருத்தை முன்வைத்த போது, தென் மாநிலத்தவர்கள் கொதித்தனர்; 'நெட்டிசன்'கள் திட்டி தீர்த்தனர்.
ஆனால், அதே நெட்டிசன்களில் பலர், சுயவெறுப்பு காரணமாக, தமிழிசையின் நிறத்தை வைத்து கேலி செய்வது, அவர்களது மனக்கண்களில் ஏற்பட்டிருக்கும் பழுதை காட்டுவதாக உள்ளது.
அது போன்ற விமர்சனங்கள், யார் மீது தொடுக்கப்பட்டாலும், கடுமையாக எதிர்ப்பது, நம் அனைவரது கடமை. காவல் துறை கடிவாளம் போடும் என, காத்திருப்பது பயன் தராது.
கண்ணியத்துடன் கூடிய கருத்து சுதந்திரம் மட்டுமே ஆக்கபூர்வமானது என, அனைவரும் உணரும் போது தான் தீர்வு கிடைக்கும்.
எஸ்.சசிதரன்
சமூக நல விரும்பி
இ - மெயில்:sasidharanchennai@gmail.com

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Paranthaman - kadappa,இந்தியா

    உடல் நிறத்தை வைத்து மனிதரை தரம் பிரிப்பதும் சிவந்தவர்கள் உயர்ந்தவர்கள் எனவும் கறுப்பானவர்கள் தாழ்ந்தவர்கள் என சொல்வதும் முட்டாள்தனம். சிவந்த நிறத்தவர் அனைவரும் யோக்கியர்களா. கரிய நிறத்தவர்கள் மட்டமானவர்களா. கிருஷ்ணரும் சிவனும் சிவந்த நிறத்தவர்களா. பீடபூமியில் உள்ளவர்கள் அங்கு வெயில் தாக்கம் குறைவு என்பதால் சற்று சிகப்பாகவும் தாழ்ந்த நிலப்பரப்பு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால் அங்குள்ளவர்கள் சற்று கருப்பாகவும் உள்ளனர். உண்ணும் உணவு முறைகளிலும் உடல் நிறம் மாறும். உணவு பண்டங்களில் சூட்டை தருபவையும் குளிர்ச்சியை தருபவையும் இரண்டும் சமமாக உள்ளவையும் உள்ளன. ஆகவே அதை உடலில் உணவாக ஏற்கும் விகிதாச்சார அடிப்படையில் உடல் நிறம் மாறலாம். அவரவர் வாழும் நாகரிக முறைகளில் மட்டும் ஏற்ற தாழ்வுகள் கற்பிக்கப்படுகின்றன.

  • Ramamoorthy P - Chennai,இந்தியா

    பொது வெளியில் இப்போது தரம் கெட்டவர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதே இதன் காரணம். மற்றும் கருத்தை சந்திக்க முடியாதவர்கள் தங்கள் பலவீனத்தை இப்படித்தான் காட்டுவார்கள்.

  • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

    நானும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறேன். ...சுய தோற்றத்தை விமரிசிப்பது ஏற்புடையாதாக தெரியவில்லை தான். ...மஞ்சள் துண்டு என்று ஒருவரை அழைப்பது தவறு என்று சொல்லிவிட முடியாது ....ஆனால் தவிர்க்கலாம். ...வூரில் ஒருவர் மட்டும் மீசை வைத்திருந்தால் ..மீசைக்காரர் என்று சொல்வது வழக்கம். ,,ஒரே பெயரில் 2 பெயர் இருந்து ஒருவர் மட்டும் மீசை வைத்திருந்தால் ...மீசைகாரர் ஒன்றும் கோபித்து கொள்வதில்லை. அவருக்கு அது பெருமையாக கூட இருக்கலாம் ...தமிழிசையின் தோற்ற்றத்தை குறை கூறுவதை குறிப்பாக குறிப்பிட்டிருக்கிறீர்கள் ,,அப்படி அவர்கள் எப்படி அழைத்தார்கள் என்று தெரியவில்லை. ...தமிழிசை மருத்துவம் படித்தவர் ...அளவுக்கு மீறி போகும் பொது பத்திரிக்கைகளே அதை பிரசுரிக்கமாட்டார்கள் .....ஒரு தடவை அவரை கரகாட்டக்காரி என்று அழைத்திருந்ததை படித்திருந்தேன் ...கரகாட்டம் தமிழ்நாட்டு கலை........தவறு என்று தெரிந்தால் ,,,தவறை செய்தவர்களே வெட்கப்படட்டும் என்று விட்டுவிடுவதே நல்லது. ...இந்த அரசியல்வாதிகளும் சாமியார்களும் சட்டத்திலிருந்தே தப்பித்து விடுகிறார்கள் விமர்சினங்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் ,,,இல்லை என்று தான் தெரிகிறது....துப்பினால் துடைத்து கொள்வேன் மாதிரி தான். ...தி மு க,ஆ திமுக மாதிரி ...,....வேறு எந்த கட்சிகளும் தம்நிழ்நாட்டை சூறையாடவில்லை......மக்கள் நலன் ஒன்றே முக்கியம் ...ஜெயலலிதாவும் பல விமரிசனங்களுக்கும் உள்ளானார் ..தமிழ் நாட்டின் உயர்ந்த பதவியை அடைந்தார். ...வைரம் பட்டை தீட்ட தீட்ட தான் ஜொலிக்கும் ,சந்தனம் அரைக்க அரைக்க தான் மணக்கும் என்ற மனப்பான்மையோடு சமுதாய பணியை தொடருவது ...தான் தேவை ..தமிழிசை அழகான பெயர். மருத்துவம் படித்திருக்கிறார். அவர் யார் என்பது அவருக்கு தெரியும் யாரையும் ..வ்விட ......மக்களில் பலர் ..சூழ்நிலை காரணமாக ,படிப்பு குறைவாலும் ,பணக்குறைவாலும்.இன்னும் யைக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள் ....அவர்கள் மீதும் எந்த தவறும் இல்லாமலே ........தன்னை பற்றி அதிகம் நினைக்காமல் ,அவர்களை பற்றி நினைத்து சமுதாய பணி செய்வதே நல்ல அரசியல்வாதிகளுக்கு நலம் .....மேடையிலே பெண் அரசியல்வாதிகளை பச்சை பச்சையாக பேசி கேட்டிருக்கிறேன் ......ராதாரவி அரசியலுக்கு புதிதாக வந்தபோது தற்போது இரும்பு பெண்மணி என்று புகழப்படுபவரை ,..வர்ணித்து பார்த்திருக்கிறேன். ..அப்போது அவர் த் இ மு க .....இப்போது அவைகள் மாறியிருக்கலாம் ..அப்படி மாறாவிட்டால் ..தமிழன் இன்னும் காட்டுமிராண்டி தான் ...பகுத்தறிவு அற்றவன்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement