Advertisement

குறைதீர் கூட்டங்களும், தீக்குளிப்புகளும்!

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில், குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்த, கூலித்தொழிலாளி இசக்கிமுத்து, குடும்பத்தோடு தீக்குளித்தார். அவரது மனைவியும், ஐந்து வயது, ஒன்றரை வயது பெண் குழந்தைகளும் தீயில் கருகி இறந்து போயினர். காலமெல்லாம் வாழ வேண்டிய பிஞ்சு குழந்தைகள், அப்பா வாங்கிய கந்து வட்டி கடனுக்கு, காவு வாங்கப்பட்டது, சோகத்திலும் சோகம்.

கலெக்டர் அலுவலகங்கள் முன்னிலையில் தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்கள், சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. கடந்த ஒரு மாதத்தில், நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மூன்று தீக்குளிப்பு முயற்சிகள் நடந்துள்ளன.
தமிழகம் முழுக்க, இந்த தற்கொலை மிரட்டல் முயற்சிகள் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கின்றன. மதுரை கலெக்டர் அலுவலகத்தில், மனு அளிக்க மண்ணெண்ணெய் கேனுடன் அடிக்கடி வருகிறார்கள். கடந்த ஆண்டு ஒருவர் இறந்தே போனார்.
இந்த தீக்குளிப்புகள் இரண்டு ரகம். ஒன்று கோரிக்கைகள் நிறைவேறவில்லை; எத்தனை போராடியும் எதுவும் நடக்கவில்லை. வாழவே முடியவில்லை என்று விரக்தியின் எல்லைக்கே சென்று தீக்குளித்து உயிரை மாய்ப்பது. இது தான் நெல்லையில் நடந்தது.
இரண்டாவது ரகம் அரசு அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க நடத்துவது. அதை, 'தீக்குளிப்பு நாடகம்' என்றும் சொல்லலாம். கலெக்டர் அலுவலகம் போன்று, பொது இடத்தில் தீக்குளிக்க முயற்சித்தால், அதிகாரிகள் கவனத்திற்கு அவர்களது கோரிக்கைகள் செல்லும் என்ற எதிர்ப்பார்ப்பு; தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை. எப்படி இருந்தாலும், எந்த பிரச்னைக்கும் தீக்குளித்து உயிரை மாய்ப்பது தீர்வல்ல என்று, இவர்களுக்கு யார் சொல்வது? என்றாலும், ஏன் கலெக்டர் அலுவலகங்கள் முன்பு, தீக்குளிப்பு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன என்று சிந்திக்க வேண்டிய நேரமிது.

இருதரப்பு புகார் : நெல்லை இசக்கி முத்து சம்பவத்தை எடுத்துக் கொள்வோம். 'அசலை விட அதிகம் தந்துவிட்டேன்; என்றாலும் கந்துவட்டி கேட்டு கொடுமைப்படுத்துகின்றனர்' என்று அச்சம்புதுார் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்துள்ளார். நம்மூர் போலீஸ் ஸ்டேஷன்களில், காசே தரமுடியாத, சாதாரண ஏழைக்கு கிடைக்கின்ற வரவேற்பை, சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. மீண்டும் மீண்டும் இவர், போலீஸ் ஸ்டேஷன் வாசலை மிதித்தபோது, எதிர்தரப்பிடமும் புகார் வாங்கினர் போலீசார். இப்போது யார் மீது நடவடிக்கை எடுப்பர்... பணபலம் உள்ளவர் தந்த புகார் தான், வழக்கமாக, 'பேசும்!' நல்லவேளை இங்கு அது நடக்கவில்லை. இருதரப்பு புகாரும் கிடப்பில் போடப்பட்டன.
எனவே, இசக்கிமுத்து, நான்கு முறை கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். எனினும் கந்துவட்டி மிரட்டல் தொடர்ந்தது. குடும்பத்தை இழுத்து வந்து தீக்கிரையாக்குகிறார். இது சமூகத்தின் மீது, அதிகார வர்க்கத்தின் மீது அவர் கொண்ட கோபம், அவரது விரக்தி, இயலாமை ஆகியவற்றின் வெளிப்பாடு. மெத்தனமான அரசு நிர்வாகத்தின் மீதும், அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீதும் கோபத்தை காட்ட தீக்குளிப்பு தீர்வல்ல! என்றாலும் ஒரு சாமான்யனின் புகார் மீது அதிகாரிகள் காட்டும் அலட்சியம், கோப்புகள் நகர்வதில் நிலவும், இழுவையான சிகப்பு நாடா முறைகள் தான், இது போன்ற மரணங்களுக்கு வழிவகுக்கின்றன.

கலெக்டர்களே தெய்வம் : இன்னும் நம்மூர் கிராமங்களில், கலெக்டர் தான், 'கண்கண்ட தெய்வம்!' அவரிடம் மனு அளித்தால் போதும், தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. அதை, கனிவுள்ள பல கலெக்டர்கள் நிரூபித்தும் உள்ளனர். சரி, கலெக்டரை எப்படி பார்ப்பது, எப்படி மனு அளிப்பது? இதற்காக தான் உருவானது மனுநீதி நாள், குறைதீர்க்கும் கூட்டங்கள். இந்த கூட்டங்கள் எப்படி நடந்தது, நடக்கிறது என்று பார்ப்போம்!
அண்ணாதுரை முதல்வராக இருந்த போது, பொது இடத்தில் குறைதீர்க்கும் மனுக்களை வாங்கினார். பின்னர், கருணாநிதி முதல்வரானதும் ஆங்காங்கே மனுநீதி நாள் நடத்தப்பட்டு மனுக்கள் வாங்கப்பட்டன. எம்.ஜி.ஆர்., முதல்வரான போது, ஒவ்வொரு வாரமும், திங்கள் கிழமை மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டங்கள் நடத்துவதை கட்டாயமாக்கினார். பொதுமக்களிடம், கலெக்டர் மனுக்கள் வாங்க வேண்டும். மாவட்ட பொறுப்பில் உள்ள, அனைத்து துறை அதிகாரிகள் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். அதிகாரிகள் திங்கள் கிழமை வெளியூர் 'கேம்ப்' போகக்கூடாது என்று உத்தரவிட்டார்.
இதன் நோக்கம், பொதுமக்கள் மனுக்கள் தந்தவுடன், அங்குள்ள சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம், கலெக்டர் அதுகுறித்து உடனடி விளக்கம் கேட்பார். துறை அதிகாரியின் பதில், மனுதாரருக்கு உடன் தெரிந்து விடும். தனது கோரிக்கை நியாயமானதா, நடக்குமா, நடக்காதா, தீர்வு என்ன என்பது எல்லாம் அங்கேயே தெரிந்து விடும்.

இப்போது எப்படி : ஆனால் இப்போது எல்லாம், கூட்டங்கள் எப்படி நடக்கின்றன... பல மாவட்டங்களில் கலெக்டருக்கு பதிலாக, டி.ஆர்.ஓ.,வே கூட்டம் நடத்துகிறார்; அல்லது கலெக்டரின் நேர்முக உதவியாளர் நடத்துகிறார். பல மாவட்டங்களில், 12:௦௦ மணிக்கு, இடையில் வந்து அமர்ந்து, ஒரு மணி நேரம், பெயருக்கு மனுக்களை பார்க்கிறார் கலெக்டர்.
இதற்கும் காரணம் உண்டு; கலெக்டர்களுக்கும் பணிப்பளு. டெங்குவிற்கு சாக்கடைகளை சோதனை செய்வது முதல், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் வரை கவனிக்கின்றனர். மந்திரிகள் மாவட்டத்திற்கு வந்தால், அவர்கள் கூடவே செல்ல வேண்டும். முதல்வரும், கவர்னரும் வந்தால், வரவேற்க, வழியனுப்ப, பூங்கொத்து கொடுக்க என்று அவர்களுக்கும் வேலைகள் பல.
சரி, பிற துறை அதிகாரிகளாவது கூட்டத்திற்கு வருகிறார்களா? துணை இயக்குனர் வருவதற்கு பதில் உதவி இயக்குனர், ஆர்.டி.ஓ.,வுக்கு பதில் தாசில்தார், போலீஸ் எஸ்.பி.,க்கு பதில் டி.எஸ்.பி.,அல்லது அவருக்கு பதில் இன்ஸ்பெக்டர், சி. இ.ஓ.,வுக்கு பதில் டி.இ.ஓ., என்ற அளவிலையே குறைதீர் கூட்டங்கள் நடக்கின்றன.
குறைதீர் கூட்டங்களில் அதிகாரிகள் குறட்டை விட்டதும், அரட்டை அடிப்பதும், அலை பேசியில் பேசிக்கொண்டிருந்ததும் நாளிதழில் புகைப்பட செய்தியாக வந்துவிட்டன.
இப்படி ஏனோதானோ என்று குறைதீர்க்கூட்டங்கள் நடக்கின்றன. அப்படியே மனுக்கள் பெறப்பட்டாலும் என்ன நடக்கிறது... உதாரணமாக கந்துவட்டி மிரட்டல் புகார் என்றால், கலெக்டர் அதை, எஸ்.பி.,க்கு அனுப்புவார்.
எஸ்.பி., 'விசாரிக்கவும்!' எனக்குறிப்பு எழுதி, டி.எஸ்.பி.,க்கு அனுப்புவார். டி.எஸ்.பி., அதை சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு அனுப்புவார்.
மனு அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை என்ற புகார், முதலில் மனு அளித்த இடத்திற்கே திரும்பி வந்து விடுகிறது. கடைசி வரை வழக்கு பதிவாகாது. தீர்வு கேட்டு, நாயாய் அலைபவர், கடைசியில் அதிகாரிகளின், ஊடகத்தின் கவனத்தை ஈர்க்கவோ அல்லது விரக்தி அடைந்தோ, தீக்குளிப்பு முயற்சியை கையிலெடுக்கிறார்.

என்ன தான் தீர்வு : சின்ன, சின்ன அடிப்படை பிரச்னைகளுக்கெல்லாம் மாவட்ட தலைநகரில் கலெக்டரிடம் மனு அளிப்பதை பொதுமக்கள் தவிர்க்கலாம். உள்ளூரிலையே உள்ளாட்சி அமைப்புகளில் புகார் தரலாம். அரசின் நிதியுதவி கேட்பது, நிறைவேறாத தனிப்பட்ட கோரிக்கைகளை கலெக்டர் கவனத்திற்கு எடுத்துச் செல்லலாம்.
காவல்துறை சார்ந்த மனுக்களை, கலெக்டர் கவனத்திற்கு கொண்டு வருவதை விட, எஸ்.பி.,க்களிடம் தரலாம். சில மாவட்டங்களில், எஸ்.பி.,க்கள், இப்போதும் குறைதீர்ப்பு கூட்டங்களை நடத்தி வருகின்றனர். நில அபகரிப்பு, கந்துவட்டி கொடுமை புகார்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வாரந்தோறும், எஸ்.பி.,க்கள் குறைதீர்ப்பு கூட்டங்கள் நடத்துவதை அரசு கட்டாயமாக்கலாம். தீர்வு காண வேண்டிய மனுவை, தாசில்தார் தள்ளிப் போடாமல், அவரே தீர்வு தரலாம். வழக்கு பதிவு செய்ய வேண்டியதை, இன்ஸ்பெக்டர், சப் - இன்ஸ்பெக்டர்கள் கட்டப் பஞ்சாயத்து செய்யாமல், அவர்களே தீர்வு தரலாம். இப்படி தாமதம் இல்லாமல் தீர்வு கிடைத்தால், சாமான்யன் தீக்குளிக்க, ஏன் கலெக்டர் அலுவலகத்தை தேடுகிறான்!

ஜி.வி, ரமேஷ் குமார்
பத்திரிகையாளர்
rameshgv1265@gmail.com

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    இந்த நிகழ்வில் இறுதியாக கணவனும் மனைவியும் ஒன்றே ஒன்றிற்காகத்தான் தங்கள் இன்னுயிரை மாய்த்திருக்கிறார்கள். அரசின் கவனத்தை ஈர்ப்பது, அதனால் இவர்களை போல கந்து வட்டியால் துன்புறும் லட்சோப லட்ச ஏழைகளுக்கு நிம்மதி கிட்ட வேண்டும் என்பதற்காக என்று தான் கொள்ள வேனும். தற்கொலைக்கான தார்மீக காரணம் அதுவே.

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    முதலில் போலீஸ் நிலையம் எஸ் பி என்று சென்று விட்டு தான் இறுதியாக கலெக்டர் அலுவலகத்திற்கு பலமுறை சென்றிருக்கிறார். பொதுமக்கள் குறை தீர்ப்பதற்கென்றே அமைக்க பட்ட தினத்தில் அதற்காக அனைத்து அலுவலர்களும் வந்திருக்கும் நாட்களில் வெறுமனே புகாரை மட்டுமே பெற்று அதை சம்பந்த பட்டவர்களுக்கு அனுப்பி விட்டேன் என்று சொன்னது தவறல்லவா? அதிகாரிகள் மனு நீதிநாளன்று மக்களை சநதித்து அவர்களின் குறைகளை காதுகொடுத்து கேட்கிறார்களா? இல்லவே இல்லை. அன்று மனுக்களை கொடுத்தல் அதன் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்ற அளவில் தான் உள்ளது.அதில் அவர்கள் எடுக்கும் நடவடிக்கை என்ன ரேஷன் கார்டு தருவது, ஜாதி சான்றிதழ் தருவது தான். இதை கீழ்மட்டத்திலேயே செய்திருக்க முடியும். அதை தான் அவர்கள் மனு நீதிநாளில் செய்கிறார்கள். கந்து வட்டி கொடுமை போன்ற கலெக்டர் அவர் மேற்பார்வையில் விசாரிக்க வேண்டிய நிகழ்வில் அவர் அதை பார்க்காதது வேதனை. கலெக்டர்களுக்கு மாஜிஸ்திரேட் என்ற பதவி அதிகாரம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement