Advertisement

தினந்தோறும் 32கி.மீட்டர் தூரம் ஓடுவேன் நானே ...


தினந்தோறும் 32கி.மீட்டர் துாரம் ஓடுவேன் நானே ...

சென்னை மெரினா கடற்கரையின் காந்தி சிலை அருகே, அதிகாலைப் பொழுது ஆயிரக்கணக்கான பேர் ஒட்டம்,நடை,யோகா என்று பல்வேறுவிதமான உடற்பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களில் ஒரே ஒருவர் மட்டும் தனித்து தெரிந்தார்.காரணம் மேல்சட்டை இல்லாத வெற்று உடம்புடன் கால்சட்டை மட்டும் அணிந்து, எவ்வித காலணியும் அணியாமல் வேர்க்க விறுவிறுக்க ஒடிக்கொண்டிருந்தார்.யார் அவர் என்பதை தெரிந்து கொண்டபோது பலவித ஆச்சரியங்களுக்கு அவர் சொந்தக்காரராக இருந்தார்
ஜெ.விஸ்வநாதன்(55) சென்னை ரயில்வேயின் உயரதிகாரி.

தினமும் அதிகாலை 3.30 மணிக்கு நுங்கம்பாக்கம் ரயில்வே அதிகாரிகள் குடியிருப்பில் ஆரம்பிக்கும் இவரது மாராத்தான் ஒட்டம் சென்னையின் முக்கிய ரோடுகள் வழியாக சென்று மெரினாவை மையமாக வைத்து சில சுற்றுகள் தொடர்ந்துவிட்டு திரும்ப தன் குடியிருப்பை அடையும் போது 32 கிலோமீட்டர் துாரம் முடிந்திருக்கும்,கிட்டத்தட்ட மூன்றே முக்கால் மணிநேரம் ஆகியிருக்கும்.
இவரது இந்த நீண்ட துார மாரத்தான் ஒட்டம் நாள் தவறாமல் நடந்து வருகிறது. அது கொட்டும் மழையாக இருந்தாலும் சரி உடம்பை உருக்கும் குளிராக இருந்தாலும் சரி.மழை நேரத்தில் ஒடுவது என்பது உண்மையில் இன்னும் சந்தோஷமான விஷயம் இவருக்கு.

இவரது இந்த மாரத்தான் ஒட்டத்திற்கான பின்னனி காரணம் என்ன?
காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு எளிய வாழ்க்கை மேற்கொண்ட இவர் தனக்கு இருக்கும் ஒரே கெட்ட பழக்கமான சிகரெட் புகைத்தலை விட்டுவிட முடிவு செய்தார்.

சிகரெட்டை துாக்கி எறியும் ஆரம்பகட்ட நிலையில் துாக்கம் வராமல் சில நாள் தவிப்பு ஏற்படும் ஆகவே நல்ல துாக்கத்திற்கு உடல் களைத்து போகும்வரை நடங்கள் முடிந்தால் ஒடுங்கள் என்ற ஆலோசனை கிடைத்தது.
இதன் காரணமாக ஒட்டத்தை ஆரம்பித்தார் அதுவரை எவ்வித உடற்பயிற்சியும் இல்லாமல் இருந்தவர் ஆரம்பத்தில் மூன்று கிலோமீட்டர் துாரம் மட்டும் ஒடிக்கொண்டிருந்தார் இது சுமாரான பலன் கொடுத்தது.இன்னும் சிறப்பான பலன் கிடைக்கவிரும்பி ஒட்ட துாரத்தை கூட்டிக்கொண்டே சென்றார் இன்றைய தேதிக்கு சென்னையில் தினமும் 32 கிலோமீட்டர் துாரம் ஒடுகிறார்.

ஆரம்பத்தில் ஒடுவதற்காக காலணி டிசர்ட் தொப்பி கண்ணாடி குடிநீர்பாட்டில் என்று சராசரிஒட்டப்பயிற்சியாளராகத்தான் இருந்தார் ஆனால் ஒவ்வொன்றையும் இது எதற்கு தேவையில்லாமல் என்று தொப்பி காலணி டிசர்ட் என்று விட்டுவிட விட்டுவிட ஒடுவதில் நிறைய சந்தோஷமும் சுதந்திரமும் கிடைத்தது.இப்போது கதரிலான கால்சட்டை மட்டுமே, மேல்சட்டையை இடுப்பைச் சுற்றி கட்டிக்கொண்டு இருப்பார் அதை கழற்றி அவ்வப்போது வியர்வையை துடைத்துக்கொள்வதுடன் சரி.
கடந்த 17 ஆண்டுகளாக தொடரும் இவரது ஒட்டப்பயிற்சி பணி நிமித்தமாக டில்லி,ஹீப்ளி உள்ளீட்ட எந்த இடங்களுக்கு சென்றாலும் தடைபட்டதில்லை.பணிமாறுதல் காரணமாக சென்னை வந்து கடந்த மூன்று ஆண்டுகளாக இங்கு ஒடிக்கொண்டிருக்கிறார்.எவ்விதத்திலும் யாரும் தனக்கு இடையூறு தராதது போன்ற காரணங்களால் சென்னையில் ஒடுவது மிகவும் பிடித்திருக்கிறது என்கிறார்

நல்ல துாக்கத்திற்காக ஆரம்பித்த இந்த ஒட்டம் எனக்கு நல்ல ஆரோக்கியத்தையும் சுறுசுறுப்பையும் நாள் முழுவதும் தருகிறது நான் எனக்கான சந்தோஷத்திற்காக மனத்திருப்திக்காக ஆரோக்கியத்திற்காக ஒடுகிறேன் ஒடுவேன் ஒடிக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி முடித்த விஸ்வநாதனிடம் மேலும் சில சுவராசியமான விஷயங்கள் உண்டு.
காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர் என்பதால் எவ்வளவு எளிமையாக வாழமுடியுமோ அவ்வளவு எளிமையாக வாழ்கிறார்.ராஜ்கோட்(குஜராத்)காந்தி ஆஸ்ரமத்தில் வாங்கிய ராட்டையால் வீட்டில் நுால் நுாற்று அதில் வரும் நுாலைக்கொண்டு தைத்த சட்டை வேட்டியைத்தான் பெரும்பாலும் அணிந்து கொள்கிறார்.பாரீஸ் நாட்டிற்கு அலுவலக ரீதியாக பயணம் சென்ற போதும் கதர்தான் இவரது உடையாக இருந்தது.

உலகமே ஆன்ட்ராய்டு ஆப்பிள் என்ற ஹைடெக் போனில் பயணம் செய்து கொண்டிருந்தாலும் இவர் வைத்திருப்பது பழைய கால பட்டன் ரக அலைபேசியே.பேசவும் கேட்கவும் இது போதுமே என்கிறார்.

அடுத்தவர்கள் வாழ்க்கையோடும் அவர்களது பொருளாதாரத்தோடும் ஒப்பிட்டு வீட்டில் மணைவியாக இருப்பவர் எப்போது போர்க்கொடி துாக்குகிறாரோ அங்கே சாய்கிறது மனநிம்மதியும் அன்பும் ஆரோக்கியமும் ஆகவே என் வீட்டு அமைதிக்கும் என் சுதந்திரமான சிந்தனைக்கும் எளிய வாழ்க்கைக்கும் காரணம் எல்லாவிதத்திலும் என்னோடு ஒத்துப்போகும் என் மனைவி பானுதான் முக்கிய காரணம் என்று தன் துணைவியாரைப்பற்றி பெருமையுடன் குறிப்பிட்டார். பசுவிடம் அதிகம் பால்பெறுவதற்காக ஊக்கமருந்து ஊசி போடுகிறார்கள் என்பது தெரிந்த நாள்முதல் பால் பொருட்களை தவிர்ப்பவர்.அதே போல தேன் உள்ளீட்ட சில பொருட்களையும் தவிர்ப்பதாகவும் கூறுபவர்,''யார் வேண்டுமானாலும் என்னைப் போலவோ அல்லது என்னைவிட அதிகமான துாரமோ ஒடமுடியும் முதலில் 3 கி.மீ.,துாரம் வரை சீரான மூச்சுப்பயிற்சியுடன் ஒடிப்பழக வேண்டும் பின் வார வாரம் சிறிது சிறிதாக துாரத்தை அதிகரித்தபடியே போனால் பின் எவ்வளவு துாரம் வேண்டுமானாலும் ஒடலாம்.

ஒட்டப்பயிற்சியில் ஈடுபடுவதால் விசேஷ உணவு எதுவும் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை வழக்கமான உணவையே சாப்பிடலாம்.உங்கள் உடம்புக்கு என்ன தேவை எவ்வளவு தேவையோ அவ்வளவு சாப்பிட்டால் போதும்.இதய நோய் மூட்டுவலி போன்ற பிரச்னை உள்ளவர்கள் ஓடுவதற்கு முன் மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது என்கிறார்.
மேலும் சந்தேகங்களுக்கு விஸ்வநாதனை மெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் மெயில் முகவரி:vishy34@gmail.com.

---எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement
 

வாசகர் கருத்து (5)

 • afsar - Chennai,இந்தியா

  உங்களை நான் பார்த்திருக்கிறான் பெரிதாக ஒன்றும் நினைக்கவில்லை அப்போது.இப்போது உங்களை பற்றி படிக்கும் பொது வியப்பாக இருக்கிறது.ஹட்'ஸ் ஒப் சார்

 • Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா

  அருமை சார். பாராட்டுகள். நாள் வாழ்த்துக்கள். இப்பேற்பட்ட மக்கள் இருந்தால் நாட்டில் ஒற்றுமையும், அமைதியும் கண்டிப்பாக எல்லோர்க்கும் கிடைக்கும்.

 • திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா

  இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதர். ஆச்சர்யம் தான். இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை.

 • Milirvan - AKL,நியூ சிலாந்து

  வியப்பாக இருந்தது.. ஏனோ தெரியவில்லை பெருமையாகவும் இருந்தது.. நிறைந்த வாழ்வு வாழ மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..

 • MaRan - chennai,இந்தியா

  சூப்பர் சார்,, உங்கள் மனைவியாரின் கள்ளம் கபடமற்ற சிரித்த முகம் தான் உங்கள் வெற்றிக்கு காரணம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement