Advertisement

டீ கடை பெஞ்ச்

'தெர்மாகோல்' மந்திரி நல்லவரா, கெட்டவரா?

''எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்னு, முதல் மரியாதை சினிமா வசனம் மாதிரி, ஆவேசமா கேட்டிருக்காங்க ஓய்...'' என, விஷயத்தை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''விளக்கமா சொல்லுங்க...'' என்றார்அந்தோணிசாமி.
''பரோல்ல வந்த சசிகலா, இளவரசி மகளோட ஆத்துல தங்கியிருந்தப்ப, 'எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்... என்னையும், தினகரனையும் கட்சியை விட்டு நீக்க, பா.ஜ., மேலிடம் காரணமா அல்லது கட்சிக்காரா காரணமான்னு முதல்வர்ட்ட கேளுங்க'ன்னு ஆவேசப்பட்டிருக்காங்க ஓய்...
''உடனே, பழனிசாமியின் உதவியாளருக்கு, இளவரசியின் வாரிசு ஒருத்தர், மூணு தடவை போன் போட்டு, 'சசிகலா பேச விரும்பறாங்க'ன்னு சொல்லியிருக்கார்... முதல்வர் தரப்புல, அதை நிராகரிச்சுட்டா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
''ஸ்டாலினையே ஏமாத்த பார்க்குறாங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு தாவினார் அன்வர்பாய்.
''அட... யாரு வே அது...'' என்றார்அண்ணாச்சி.
''தி.மு.க.,வுல புதிய உறுப்பினர் சேர்க்கையை துவங்கும்படி ஸ்டாலின் உத்தரவு போட்டிருக்காரே... நிர்வாகிகள், வீடு வீடா போய், புது உறுப்பினர்களை சேர்க்கணும்னும் சொல்லியிருக்காரு பா...
''உறுப்பினர் கார்டு இருக்கிறவங்க ஓட்டு போட்டு, கிளை நிர்வாகிகளை தேர்வு செய்வாங்க... கிளை நிர்வாகிகள், அடுத்தடுத்த கட்ட நிர்வாகிகளை தேர்வு செய்வாங்க... 'இனி, தேர்தல் மூலம் தான் நிர்வாகிகள் நியமனம்'னு ஸ்டாலின் சொல்லிட்டாரு பா...
''இது, சில மாவட்ட செயலர்களுக்கு பிடிக்கலை... அதனால, புது உறுப்பினர்களை சேர்க்காம, தங்களது உறவினர்களின் பசங்களை, புதுசா சேர்த்த மாதிரி பதிவு பண்ணிட்டு இருக்காங்க பா...'' என்றார் அன்வர்பாய்.
''இவர் பாம்பா, பழுதான்னு தெரியாம பரிதவிக்காவ வே...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தாார் அண்ணாச்சி.
''யாரை சொல்றீர் ஓய்...'' என்றார்குப்பண்ணா.
''கூட்டுறவு அமைச்சர் ராஜுவை தான், கட்சிக்காரங்க சந்தேகமா பார்க்காவ... வைகை அணையில, 'தெர்மாகோல்' மிதக்க விட்டப்பவே, இவர் புகழ், சீனா வரைக்கும் பரவுச்சே...
''அதுல இருந்தே, மீடியாக்களிடம் வாய்க்கு வந்தபடியே எதையாவது பேசிட்டே இருக்காரு... சமீபத்துல கூட, 'சசிகலா தான், அ.தி.மு.க., ஆட்சி அமைய பாடுபட்டார்'னு கொளுத்தி போட்டு வாங்கி கட்டிக்கிட்டாரு வே...
''இதனால, ராஜு கலந்துக்குற விழான்னாலே, 'டிவி' சேனல்காரங்க, குவிஞ்சிடுதாவ... அதனால, 'இவர், தன்னை பிரபலப்படுத்திக்க இப்படி ஏட்டிக்கு போட்டியா பேசிட்டு திரியுதாரோ'ன்னு கட்சி நிர்வாகிகள் சந்தேகப்படுதாவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.
நாளிதழ்களை பெரியவர்கள் புரட்ட, அரட்டைக்கு தற்காலிக, 'பிரேக்' விழுந்தது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement