Advertisement

டீ கடை பெஞ்ச்

டிரான்ஸ்பர் போட்டதால், டி.ஜி.பி., மாற்றம்?

''பொறுமையா செயல்படணும்ன்னு சொல்லி இருக்காங்க...'' என, பெஞ்ச் விவாதம் துவக்கினார்
அந்தோணிசாமி.''யார் சொல்லி, யார் கேக்க போறாவ... இங்கே பொலிட்டிக்கல் பீல்டுல, எல்லாருமே அவசரம்னா காட்டறா...'' என்றார்
குப்பண்ணா.
''இவர் பாலிட்டீஷியனா இருந்து, இப்போது கவர்னரா வந்திருக்கிறவர்... புரோஹித்தைச் சொல்றேன்... ''டில்லியிலேர்ந்து கிளம்பும்போதே, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்திச்சுட்டு தான் வந்திருக்காரு... மத்த ஸ்டேட்ஸ் மாதிரி இல்லே தமிழ்நாடு... அங்கே பாலிடிக்ஸ் வேற மாதிரி இருக்கு...
''எதைச் செய்ய நினைச்சாலும், எங்ககிட்டே கேட்காம செய்யாதீங்க... மனசுக்குத் தோணினா மாதிரி பேசிட முடியாது... கவனமா செயல்படணும்... வாயை விட்டுட்டு, வம்புல மாட்டிறாதீங்கன்னு, ஏகத்துக்கும், 'அட்வைஸ்' செஞ்சு
அனுப்பிச்சிருக்காருங்க...'' என்றார் அந்தோணிசாமி.''சதய விழா,
'சென்டிமென்ட்'டால, அ.தி.மு.க.,காரங்க தயக்கம் காட்டுறாங்க பா...'' என, அடுத்த தகவலைத் துவக்கினார்
அன்வர்பாய்.''என்ன வே விவகாரம்...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.''தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலை கட்டிய, ராஜராஜ சோழன், சதய நட்சத்திரத்தில் பிறந்ததால், அவரது பிறந்தநாளை சதய விழாவா, வருஷா வருஷம் அரசு கொண்டாடுது...
''இந்தாண்டு, 1,032வது பிறந்த நாள், 29, 30ம் தேதிகள்ல வருது... இந்த விழாவுக்கான தலைவரை நியமிக்கணும்... போன வருஷம், தஞ்சாவூர், எம்.எல்.ஏ.,வா
இருந்து, இப்ப தகுதி நீக்கம் ஆகி இருக்குற ரெங்கசாமி தான் தலைவரா இருந்தாரு...
''இந்த ஆண்டு அந்த பதவியில இருந்து, விழாவை கொண்டாடப் போறது யாருங்கறதுல, ஒரு குழப்பம்... தலைவரா இருந்தா, அடுத்து, கட்சிப் பதவி, ஆட்சிப் பதவி போயிடுமோங்கற பயம்...
''ஆக மொத்தம், தஞ்சை கோவிலுன்னாலே எல்லாரும் பீதியாயிடுறாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.
''மின் வாரியத்துல, விஜிலன்ஸ், டி.ஜி.பி.,யா இருந்தவரை, 'பொசுக்'குனு மாத்திட்டாவ வே...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் அண்ணாச்சி.
''என்ன விவகாரம் ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.''தமிழ்நாடு மின் வாரியத்தில், மூணு வருசத்துக்கு மேலே, ஒரே இடத்துல பணியில இருக்கக் கூடாது வே... ஆனா, நிறைய பேர், அஞ்சு வருசத்துக்கு மேலே நீடிக்காவ...
''இதைப் பார்த்துட்டு, சமீபத்தில, விஜிலன்ஸ், டி.ஜி.பி.,யா இருந்த மகேந்திரன், சம்பந்தப்பட்டவங்களை, 'டிரான்ஸ்பர்' செஞ்சாரு...
''மத்த எல்லா வேலைகளும், 'ப்ராம்ப்ட்'டா நடந்துச்சு... 'மின் வாரியம் இனி தலை நிமிர்ந்து நிக்கலாம்'ன்னு, நேர்மையான ஊழியர்கள் சந்தோசப்பட்டாவ...''ஆனா, மகேந்திரனை, 'பொசுக்'குனு, வேற துறைக்கு மாத்திட்டாவ வே... என்ன காரணமோ...'' என்றார் அண்ணாச்சி.
குப்பண்ணாவும், அண்ணாச்சியும், தீபாவளி துணிமணி வாங்க, கடைக்குக் கிளம்புவதாகக் கூறிச் சென்றனர்; மற்ற இரண்டு நண்பர்களும், வீட்டுக்கு நடையைக் கட்டினர்.

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • sundaram - Kuwait,குவைத்

    மின்வாரியத்துல யாருக்கும் டிரான்ஸ்பர் போடற அதிகாரம் டி ஜி பிக்கு கிடையாதே தலைமை பொறியாளருக்குத்தானே இருக்குன்னு குப்பண்ணா சொன்னதும் நியூஸ் போடறவாளுக்கு காசு கொடுத்தா எதைவேனும்னாலும் போடுவாளேன்னு அண்ணாச்சி சொன்னார்.

  • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா

    அனைத்துத் துறையிலயும் மூன்று வருஷத்துக்கு மேல இருக்குறவங்களை எல்லாம் தூக்கியடிக்கணும்.....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement