Advertisement

டீ கடை பெஞ்ச்

நடராஜனுக்காக ஓடியாடி உழைத்த அரசு டாக்டர்கள்!


''ஆ... ஊன்னா, ஜாமின்ல வர முடியாத வழக்குகளை போடுதாவ வே...'' என்றபடியே பெஞ்சுக்கு வந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த ஊருலங்க...'' என கேட்டார் அந்தோணிசாமி.
''திருநெல்வேலி போலீஸ்காரங்களை தான் சொல்லுதேன்... சில வாரங்களுக்கு முன்ன, மகேந்திரகிரி இஸ்ரோ மையம் சம்பந்தமா செய்தி வெளியிட்டதா, மூணு பத்திரிகைகாரங்க மேல, ஜாமின்ல வர முடியாத பிரிவுகள்ல வழக்கு போட்டாவ வே...
''காந்தி ஜெயந்தி அன்னிக்கு, டவுன்ல இருக்கிற அவர் சிலைக்கு மாலை போட, பைக்குல ஊர்வலமா வந்த, தே.மு.தி.க.,காரங்க மேலயும், ஜாமின்ல வர முடியாத பிரிவுகள்ல வழக்கு போட்டிருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.
''ஒருவேளை, இப்படி வழக்கு போடுவோம்னு மிரட்டியே, வசூலை அதிகப்படுத்த பிளான் போடுறாங்களோ பா...'' என்ற அன்வர்பாயின், 'கமென்ட்'டை கேட்டு சிரித்தபடியே, ''டெங்கு பத்தி மூச்சு விடக் கூடாதுன்னு மிரட்டி வச்சிருக்காருங்க...'' என, அடுத்த விஷயத்திற்கு வந்தார் அந்தோணிசாமி.
''அந்த காய்ச்சல் தானே, எல்லா பக்கமும் பீதியை கிளப்பிண்டு இருக்கு... இப்படி சொன்னது யாரு ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''திருவள்ளூர் மாவட்டத்துல, 'டெங்கு' பாதிப்பு அதிகமா இருக்கு... மாவட்டத்துல, 10க்கும் மேற்பட்டவங்க இறந்து போயிட்டாங்க... நிறைய பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை எடுத்துட்டு
இருக்காங்க...''அதனால, அரசு டாக்டர்கள், நர்ஸ்கள், லேப் டெக்னீஷியன்களிடம், 'டெங்கு இருக்குன்னு யார்கிட்டயும் சொல்ல கூடாது... நோயாளிகளின்
உறவினர்களிடம், சாதாரண காய்ச்சல், வைரஸ் காய்ச்சல்ன்னு சொல்லி, 'அட்மிட்' பண்ணிட்டு, டெங்கு சிகிச்சையை குடுங்க...
''முக்கியமா, மீடியாக்களிடம் பேசிடவே கூடாது'ன்னு மாவட்ட சுகாதார அதிகாரி ஒருத்தர் வாய்ப்பூட்டு போட்டு வச்சிருக்காருங்க...'' என முடித்தார் அந்தோணிசாமி.
''வாங்கோ தயாளன்... நேத்தே உம்மை எதிர்பார்த்தேன்...'' என, நண்பரை வரவேற்று அமர செய்த குப்பண்ணா, ''நடராஜனுக்காக சின்சியரா வேலை பார்த்திருக்கா ஓய்...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார்.
''சசிகலா வீட்டுக்காரரை சொல்றீங்களா...'' என விசாரித்தார் அந்தோணிசாமி.''ஆமாம்... இவருக்கு, கிட்னி, கல்லீரல் மாற்று ஆப்பரேஷன் பண்ணியிருக்காளோல்லியோ... தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில, மூளைச்சாவுன்னு அறிவிக்காத கார்த்திக்னு ஒரு வாலிபரை, ஏர் ஆம்புலன்ஸ்ல சென்னைக்கு கொண்டாந்து, அவரது உறுப்புகளை எடுத்து, நடராஜனுக்கு பொருத்தியிருக்கா ஓய்...
''சசிகலாவின் அண்ணன் மகனுக்கு சொந்தமான தனியார் மருத்துவமனை, தஞ்சாவூர்ல இருக்கு... இங்க வேலை பாக்கற டாக்டர்கள் நிறைய பேர், தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில டாக்டர்களா இருக்கறவா தான்...
''இவா தான், கார்த்திக் பற்றிய விபரங்களையும், அவரோட மருத்துவ அறிக்கைகளையும், டீடெய்லா சேகரிச்சு, சென்னை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி, நடராஜன் ட்ரீட்மென்டுக்கு ஒத்தாசையா இருந்திருக்கா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் மவுனமானது.

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • அம்பை சுதர்சனன் - கொடைக்கானல் ,இந்தியா

    ஒரு பிரபலத்தை காப்பாற்றுவதற்காக, இன்னொரு அப்பாவியின் உயிரோடு விளையாடிஉள்ளார்கள்.உறுப்புகளை கொண்டு வர இயலாதவர்கள் உயிரோடு இருந்தவரை கொண்டு வந்து கல்லீரலையும் சிறுநீரகத்தையும் அறுத்து எடுத்து கொலை செய்துள்ளதாகவே படுகிறது.அப்படியாயின் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.

  • vasumathi - Sydney,ஆஸ்திரேலியா

    தயாளன், டெங்கு சிகிச்சை தர சொல்றரே , அது வரைக்கும் நல்லது. பதட்டத்தை குறைக்க ithu konjam uthavum,

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement