Advertisement

டீ கடை பெஞ்ச்

அதிகாரிகளிடம் நேரடியாக, 'கட்டிங்' கேட்கும் மேலிடம்!


''புகாரை கிடப்புல போட்டுட்டாவ... கலெக்டர் திட்டுனதும் தான் காரியம் நடந்துச்சு வே...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அண்ணாச்சி.''விளக்கமா சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.''சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கண்மாயில இருக்கிற கருவேல மரங்களை, போன பிப்ரவரி மாசம், 33 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விட்டாவ வே...
''ஏலம் எடுத்தவர், வனத்துறைக்கு சொந்தமான மரங்களையும் சேர்த்து வெட்டி, கடத்திட்டார்... இது சம்பந்தமா, திருப்புவனம் போலீஸ்ல, வருவாய் துறையினர் புகார் கொடுத்தாவ... போலீசார், அதை கிடப்புல போட்டுட்டாவ... வருவாய் துறையினரும் அதை கண்டுக்கலை வே...
''புதுசா வந்த
கலெக்டர் லதாவுக்கு, இது தெரியவர, அவங்க, போலீசாரை கூப்பிட்டு சத்தம் போட்டு, உடனே வழக்கு பதிவு செய்ய உத்தரவு போட்டாங்க வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.
''முதல்வருக்கும், தலைமை செயலருக்கும் முட்டல் வந்துடுத்து ஓய்...'' என, அடுத்த விஷயத்திற்குள் நுழைந்தார்
குப்பண்ணா.''அவங்களுக்குள்ள என்ன பிரச்னை பா...'' என்றார் அன்வர்பாய்.
''சில அமைச்சர்கள், தங்களுக்கு ஒத்துவராத நேர்மையான நல்ல அதிகாரிகளை மாத்தும்படி, முதல்வரிடம் கேக்கறா... முதல்வரும், 'அதிகாரிகளை மாத்திடுங்கோ'ன்னு தலைமை செயலர்ட்ட சொன்னா, அவங்க ஏத்துக்க மாட்டேங்கறாங்க ஓய்...
''சமீபத்துல கூட, சில அதிகாரிகள் மாறுதல் உத்தரவுல, கையெழுத்து போட தலைமை செயலர் மறுத்துட்டாங்க... இதனால, அவர் மேல முதல்வர் அதிருப்தியில இருக்கார்... சீக்கிரமே, தலைமை செயலர் மாற்றம் இருக்கும்ன்னு கோட்டை வட்டாரங்கள்ல பேசிக்கறா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
''தலையே போன் போட்டு, 'கட்டிங்' கேட்குதுப்பா...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார் அன்வர்பாய்.''விளக்கமா சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''அறநிலையத் துறை கட்டுப்பாட்டுல, பல ஆயிரம் கோவில்கள் இருக்கு... இதுல, ௩௦௦க்கும் மேற்பட்ட கோவில்கள்ல, வருமானம் கொட்டோ கொட்டுன்னு கொட்டுது... இந்த கோவில்கள்ல, பிரசாத ஸ்டால், முடி காணிக்கைன்னு நிறைய டெண்டர்கள் விடுறாங்க பா...
''இப்படி வருமானம் குவியுற கோவில் அதிகாரிகளுக்கு, துறையின், 'தலை'யே போனை போட்டு, 'கமிஷன் கரெக்டா வந்துடணும்'னு கறாரா கேட்குறாரு... இதனால, 'தலை'யின் போன் வந்தாலே, அதிகாரிகள் நடுங்குறாங்க பா...'' என, முடித்தார்
அன்வர்பாய்.பெஞ்சில் இருந்து எழுந்த குப்பண்ணா, ''அட, ராமச்சந்திரா, கலி முத்திடுத்து ஓய்...'' என, புலம்பியபடியே கிளம்ப, மற்றவர்களும் எழுந்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement