Advertisement

டீ கடை பெஞ்ச்

சபல அதிகாரி அதிரடி!


''எல்லாரையும் குப்பை அள்ள விட்டுட்டாரு பா...'' என, சாயாவை உறிஞ்சியபடியே, சங்கதியை ஆரம்பித்தார்
அன்வர்பாய்.''யாரு வே அந்த புண்ணியவான்...'' என்றார் அண்ணாச்சி.''மத்திய அரசின், துாய்மை பாரதம் திட்டத்தை, மதுரை மாவட்டத்துல, கலெக்டர் வீரராகவ ராவ் முழுவீச்சுல அமல்படுத்திட்டு இருக்காரு...
''ரயில்வே ஸ்டேஷன், பார்க், பஸ் ஸ்டாண்ட், கோவில், கண்மாய்ன்னு ஏரியா ஏரியாவா போய்,
துப்புரவு பணியில ஈடுபடுறாரு பா...''கலெக்டரே களம் இறங்கி, குப்பையை அள்ளி போடுறதால, மத்த அதிகாரிகளும் அள்ளுறாங்க... ஆபீஸ்ல, சொகுசா உட்கார்ந்து, பைல் பார்க்க சோம்பல் பட்டவங்க கூட, இப்ப குனிஞ்சு, நிமிர்ந்து குப்பை அள்ளிட்டு இருக்காங்க பா...'' என, முடித்தார்
அன்வர்பாய்.
''டிசைனை பார்த்து, 'ஷாக்' ஆயிட்டாங்க...'' என, அடுத்த விஷயத்திற்கு தாவினார் அந்தோணிசாமி.''தீபாவளி நேரமாச்சே... ஏதாவது சேலை டிசைனை சொல்லுதீரா வே...'' என்றார் அண்ணாச்சி.
''அட முழுசா கேளுங்க... சென்னை வண்டலுார் பக்கம், கிளாம்பாக்கத்துல, வெளியூர் பஸ்களுக்காக, புது பஸ் ஸ்டாண்ட் கட்ட போறாங்க...
''இந்த பஸ் ஸ்டாண்ட் கட்ட, மாதிரி வரைபடம் தயார் ஆகிடுச்சுங்க... சமீபத்துல, இதை பார்த்து, அதிகாரிகள் ஆலோசனை
நடத்தினாங்க... அப்ப ஒரு அதிகாரி, 'பஸ் ஸ்டாண்ட் மைய பகுதி, உதய சூரியன் போல இருக்கே'ன்னு, 'டவுட்' கிளப்பிட்டாருங்க...
''சக அதிகாரிகள், 'இது, மேலிடத்துக்கு தெரிஞ்சா சிக்கலாகிடும்... கண்டுக்காம விடுங்க'ன்னு அவரை அடக்கிட்டாங்க... 'திட்டத்துக்கு, துணை முதல்வர் ஒப்புதல் தர்ற வரை, யாரும் வாய் திறக்க கூடாது'ன்னு உயர் அதிகாரிகள் வாய்ப்பூட்டு போட்டு வச்சிருக்காங்க...''
என, முடித்தார் அந்தோணிசாமி.
''சபல அதிகாரிக்கு எதிரா திரும்பினதும், வேலையை விட்டே துாக்கிட்டாரு வே...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார்
அண்ணாச்சி.''எந்த துறையில பா...'' என்றார் அன்வர்பாய்.''நாகை மாவட்டத்துல இருக்கிற, சுகாதார துறை அதிகாரியை தான் சொல்லுதேன்... சேலத்துல இருந்து டிரான்ஸ்பர்ல வந்த அதிகாரி, சரியான சபல பேர்வழியா இருக்காரு வே...
''அதிகாரியின்
சரச, சல்லாபங்கள் பத்தி, தற்காலிகமா வேலை பார்க்குற நாலு பெண்கள், மேலிடத்துக்கு புகார் செய்ய இருந்தாவ... இது, அதிகாரிக்கு தெரிஞ்சதும், பட்டுன்னு நாலு பெண்களையும் வேலையை விட்டே துாக்கிட்டாரு வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.
''நாயர், என்னை தேடி செல்வக்குமார் வந்தா, ஆத்து பக்கம் வர சொல்லும் ஓய்...'' என்றபடியே குப்பண்ணா கிளம்ப, மற்றவர்களும் நடையை கட்டினர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement