Advertisement

டீ கடை பெஞ்ச்

'முற்பகல் செய்யின் பிற்பகல் தானே விளையும்!'

''பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்குன்னு சொல்லி சொல்லியே, பல போலீசார், ரொம்ப கெடுபிடி காட்டுதாவ வே...'' என, முதல் தகவலுடன் நாயர் கடைக்கு வந்தார்அண்ணாச்சி.
''எங்கே பா... நீங்க டில்லிக்கு போனா மாதிரி தெரியலியே...'' எனக் கேட்டார்அன்வர்பாய்.
''டில்லியில மட்டும் தான் பாதுகாப்பு காட்டுதாவளா... இல்லே... நம்ம, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைச் சொல்லுதேன்... அங்கே, பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருக்குன்னு, நிறைய போலீசுகாரவ நின்னிட்டிருக்காவ... எல்லாரோட உடைமைகளையும், 'செக்' செஞ்சிட்டு தான் உள்ளே அனுப்புதாவ... அதே சமயம், கோவில் விழாக்களில் கூட, பத்திரிகைக்காரங்க போட்டோ எடுக்க அனுமதி தர மாட்டேங்காவ...
''இப்பம், மதுரைகாரவ, சென்னையில தங்கி வேலை பார்க்காவன்னு வச்சிக்குவம்... அவங்களால கோவிலுக்கு வர முடியாத நேரத்துல, பத்திரிகைல, 'டிவி'யில சாமி கும்பிட்டுவாகள்ல...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.
''நீங்க சொல்றதும் நியாயம் தான்...'' என்றார் அன்வர்பாய்.
''டாஸ்மாக் பார் நடத்தறவா, புது டெக்னிக்ல சரக்கு தயாரிச்சு, பகல், 12:00 மணிக்கு, டாஸ்மாக் கடை திறக்குறதுக்குள்ளேயும், ராத்திரி, 9:30 மணிக்கு கடை மூடின அப்பறம், 'குடி'மகன்களை திணறடிக்கறா ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் குப்பண்ணா.
''இதுல என்னங்க அதிசயம்... அரசு விடுமுறை நாள்லேயே சாதாரணமா, சரக்கு வித்து திணறடிக்கிறது வழக்கம் தானே...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.
''விஷயத்தைக் கேளும்... சென்னைக்கு பக்கத்துல செங்குன்றம், சோழவரம் போலீஸ் எல்லைகளுக்கு உட்பட்ட ஏரியாக்களில் இருக்கிற, டாஸ்மாக் பார்களில், தடை செய்யப்பட்ட ஹான்சை மொத்தமா வாங்கி, அதுல கொஞ்சம் டூப்ளிகேட் டீ துாளை போட்டு, பச்சை தண்ணியில ஊறவச்சு, அது, 'சரக்கு' கலருக்கு மாறினதும், அதை வடிகட்டி, குவாட்டர் பாட்டிலில் நிரப்பி, 'சீல்' அடிச்சு, கூடுதல் விலைக்கு விற்கறா ஓய்…'' எனக் கூறிச் சிரித்தார் குப்பண்ணா.
''போலீஸ் ஸ்டேஷன்ல, எங்களுக்கே நியாயம் கிடைக்கலேன்னு, தலைமை காவலர்கள் புலம்புறாங்க பா...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.
''எங்கேங்க இது... நிஜமாலுமே அதிர்ச்சியை கிளப்புது...'' எனக் கேட்டார்அந்தோணிசாமி.
''திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை இருக்கிற ஊர் போலீஸ் ஸ்டேஷன்ல, சமீபத்தில, சப் - இன்ஸ்பெக்டர், 'டிரங்கன் டிரைவ்' கேசை பிடிச்சு, ஸ்டேஷன்ல வேலை செய்யற, இன்ஸ்பெக்டரையும், இன்னொரு போலீஸ்காரரையும் கூப்ட்டு, 'இவருக்கு மருத்துவ பரிசோதனை செஞ்சிட்டு வாங்க'ன்னு சொல்லி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வச்சாரு....
''போதையில் இருந்தவரு, பாதி வழியில, திடீரென வண்டியை நிறுத்த சொல்லி, இன்ஸ்பெக்டர் முகத்துல, 'கும்மாங்குத்து' விட்டு, கெட்ட கெட்ட வார்த்தையில திட்டிப்புட்டாரு...
''இதனால, ரெண்டு போலீஸ்காரங்களும், அவரை திரும்ப ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்து, அவர் மேலே புகார் எழுதிக் குடுத்தாங்க... ஆனா, புகாரை இன்னும் பதிவு பண்ணலே... 'குடி'மகனை, சப் -இன்ஸ்பெக்டரே, பத்திரமா வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டாரு பா...'' என்றார்
அன்வர்பாய்.
''இதுக்கு தான், 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்'ன்னு அர்த்தம்...'' என்றார் அண்ணாச்சி.
நண்பர்கள் நடையைக் கட்டவே, கடையில் யாரும் இல்லை என்பதால், நாயர் சற்று காலார நாற்காலியில் அமர்ந்தார்!

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement