Advertisement

டீ கடை பெஞ்ச்

பட்டுக்கோட்டையில், 'பட்டையை கிளப்பும்' கஞ்சா வியாபாரம்!


''வரவு - செலவு நோட்டை, கையோட எடுத்துட்டு போயிட்டாரு பா...'' என, டீயை உறிஞ்சியபடியே பேச ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''யாரு ஓய் அது...'' என்றார் குப்பண்ணா.''காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்துல, அரியனுார் ஊராட்சி இருக்கு... இங்க, ௧௫ வருஷமா ஊராட்சி செயலரா இருந்தவர், ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, 'ரிடையர்' ஆனாரு பா...
''மகனுக்கு, அதே வேலையை வாங்கி குடுத்தவர், மகனுக்கு பதிலா, தானே வேலையும் பார்த்தாரு...
''ஊராட்சி ஆபீஸ் பக்கமே வராத அவர் மகன், வேற இடத்துல, நல்ல சம்பளத்துல வேலை பார்த்துட்டு இருந்திருக்கார்... இது தெரிஞ்சு, கிராமத்து வாலிபர்கள் சிலர், செயலரிடம் விளக்கம் கேட்டிருக்காங்க பா...
''அதனால, மூணு மாசத்துக்கு முன்னாடி, 'வேலையே வேண்டாம்'னு மகனை எழுதி குடுக்க சொல்லிட்டு, இவரும் நின்னுட்டார்... ஆனா, ஊராட்சியின் வரவு - செலவு கணக்கு நோட்டை மட்டும், பொறுப்பு செயலரிடம் ஒப்படைக்காம, இன்னும் போக்கு காட்டிட்டு இருக்காரு பா...'' என்றார் அன்வர்பாய்.
''சரி, ராமலிங்கம், அந்த அமவுன்ட்டுக்கே பேசி முடிச்சிடும்...'' என, தெருவில் சென்றவரிடம் விடைபெற்று வந்த பெரியசாமி அண்ணாச்சி, ''ரெண்டு வருஷமாவது விட்டு வையுங்கன்னு புலம்புதாவ வே...'' என்றார்.
''யாருங்க...'' என கேட்டார் அந்தோணிசாமி.
''மதுரை மாவட்டத்துல, ஒரு வருஷத்துக்கும் மேலா வேலை பார்த்த, ௧௩ தாசில்தார்களை, கலெக்டர் சமீபத்துல இடம் மாத்தினாரு... போன, 30ம் தேதி விஜயதசமி நல்ல நாளுங்கிறதால, அன்னைக்கே பொறுப்பு ஏத்துக்கும்படியும் உத்தரவு போட்டுட்டாரு வே...
''மத்த மாவட்ட தாலுகா ஆபீஸ்கள்ல, தாசில்தாரா ரெண்டு வருஷம் வேலை பார்க்க விடுதாவ... ஆனா, மதுரையில மட்டும், ஒரே வருஷத்துல துாக்கி அடிச்சிடுதாவ...
''எங்களையும், ரெண்டு வருஷம் விட்டு வச்சா, மக்கள் பிரச்னைகளை சூப்பரா தீர்ப்போம்னு தாசில்தார்கள் தரப்பு சொல்லுது வே...'' என்றார் அண்ணாச்சி.
''இவா எப்படி, மக்கள் பிரச்னைகளை தீர்ப்பான்னு நமக்கு தெரியாதாக்கும்...'' என, 'பொடி' வைத்து பேசிய குப்பண்ணாவே, ''௫௦௦ ரூபாய்க்கு வாங்கி, ௫,௦௦௦ ரூபாய்க்கு விக்கறா ஓய்...'' என, விஷயத்திற்கு வந்தார்.''கொள்ளை லாபமா இருக்கே... அப்படி என்னத்தை விக்காவ...'' என்றார் அண்ணாச்சி.
''தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில நடக்கற கஞ்சா வியாபாரத்தை தான் சொல்றேன்... ஒரு கிலோ கஞ்சாவை, தேனி, சிவகங்கை மாவட்டங்கள்ல, 5௦௦ ரூபாய்க்கு வாங்கீண்டு வரா ஓய்...
''அதை இங்கே, சின்ன சின்ன பொட்டலமா போட்டு, 5,௦௦௦ ரூபாய்க்கு வித்துடறா... ஆட்டோ, டூ - வீலர்கள்ல வர்ற வாலிபர்கள், பள்ளி, கல்லுாரி வாசல்கள்ல நின்னுண்டு, மாணவாளுக்கு, கஞ்சா சப்ளை பண்ணிண்டு இருக்கா... போலீசாருக்கு, 'போக வேண்டியது' போயிடறதால, அவாளும் கண்டுக்காம இருக்கா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.பெரியவர்கள் கிளம்ப, நாயர், கடையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

ஆம்னி பஸ்கள் பறிமுதல் பின்னணியில் அ.தி.மு.க., - எம்.பி.,


''பணம் கொடுத்தவங்க பரிதவிக்கிறாங்க...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.''யாரை சொல்லுதீரு...'' என்றார் அண்ணாச்சி.
''திருவள்ளூர் மாவட்டத்துல, 5௦௦ சத்துணவு உதவியாளர், சமையலர் வேலைகள் காலியா இருக்கு... இதுக்கு, பல ஆயிரம் பேர் விண்ணப்பம் கொடுத்திருந்தாங்க...
''இவங்களுக்கு நேர்காணல் நடத்தி, பெண் கலெக்டரிடம் பட்டியல் கொடுத்தாங்க... 'போஸ்டிங்' போட இருந்த நேரத்துல, ஆளுங்கட்சியினர், ஒரு வேலைக்கு, ரெண்டரையில இருந்து, நாலு லட்சம் ரூபாய் வரை, வசூல் பண்ணிட்டதா, கலெக்டருக்கு தகவல்
கிடைச்சிட்டுங்க...''அதனால, 'மறுபடியும் நேர்காணல் நடத்தி தான், போஸ்டிங் போடுவேன்'னு பணி நியமனத்தை கலெக்டர் தள்ளி வச்சுட்டாங்க... அதனால, பணம் குடுத்தவங்க பரிதவிப்புல இருக்காங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.
''அரியலுார் மாவட்டத்துலயும் இதே மாதிரி ஒரு சம்பவம் நடந்திருக்கு பா...'' என்ற அன்வர் பாயே தொடர்ந்தார்...
''இந்த மாவட்ட கலெக்டரா, ஜூலை, 12ம் தேதி தான், லட்சுமி பிரியா வந்தாங்க... அங்கன்வாடிகள்ல, காலியா இருந்த, 407 பணியிடங்களை சமீபத்துல நிரப்புனாங்க பா...
''இதுல, ஆளுங்கட்சி நிர்வாகிகள் தலையீடு இல்லாம, தகுதி அடிப்படையில, ஆட்களை தேர்வு செய்ய, அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு போட்டிருந்தாங்க...
''அந்த மாதிரியே பணி நியமனமும் செஞ்சுட்டாங்க... 'போஸ்டிங்' வாங்கி தர்றதா பலர்கிட்ட வாக்கு குடுத்திருந்த அரசு கொறடா ராஜேந்திரன் ஏமாந்து
போயிட்டாரு பா...
''அதனால, கலெக்டரை மாத்தியே தீரணும்னு, முதல்வரிடம் ஒத்தக்கால்ல நிற்கிறாராம்... சீக்கிரமே கலெக்டரை மாத்திடுவாங்கன்னு பேசிக்கிறாங்க பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.
''தான் சொன்ன ஆட்களுக்கு, 'ப்ரீ டிக்கெட்' குடுக்காததால, பறிமுதல் பண்ண வச்சுட்டார் ஓய்...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார் குப்பண்ணா.
''யாரை சொல்றீங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''குமரி மாவட்ட, அ.தி.மு.க., செயலர் விஜயகுமார், ராஜ்யசபா, எம்.பி.,யாகவும் இருக்கார்... இவர் அப்பப்ப, எசகுபிசகா ஏதாவது பண்ணிண்டே இருப்பார் ஓய்...
''சமீபத்துல, கூடுதல் கட்டணம் வசூல் பண்ணினதா, நாகர்கோவில்ல, சில ஆம்னி பஸ்களை, அதிகாரிகள் பறிமுதல் பண்ணினாளோல்லியோ... அதிகாரிகள் சோதனையில, எம்.பி.,யும் கூடவே நின்னுண்டு இருந்தார்...
''அவர் சொன்னவாளுக்கு, 'ப்ரீ டிக்கெட்' குடுக்க மாட்டேனுட்டா... அதான், ஆம்னி பஸ்களை பறிமுதல் பண்ண, அண்ணன் களத்துல இறங்கிட்டார்னு, அவரோட அடிப்பொடிகளே பேசினா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.நண்பர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா

    பணம் கொடுத்து வேலை வாங்க வேண்டும் என்ற எண்ணமே தவறானது.... இவர்களும் குற்றவாளிகள்.. பணம் வாங்கிக் கொண்டும் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றினார்.. என வழக்குப் பதியும் காவல்துறை பணம் கொடுத்தவர்கள் மீதும் வழக்குப் பதிய வேண்டும்.... முறைகேடான வழியில் வேலை பெறுவதற்காக பணம் கொடுத்ததாக... ஒரு பத்து பேர் மீது வழக்குப் பதிந்தால் மற்றவர்கள் எல்லாம் தன்னாலேயே திருந்துவார்கள்.. அல்லது பணம் கொடுத்த அனைவர்மீதும் வழக்குப் பதியட்டும்..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement