Advertisement

விழுவது எழுவதற்காக.. அழுவதற்காக அல்ல.

விழுவது எழுவதற்காக.. அழுவதற்காக அல்ல.


07102017 ந்தேதி சனிக்கிழமை ஒரு சாயங்கால வேளை
சென்னை பெசன்ட்நகர் கடற்கரை காற்றுவாங்கவும் பொழுது போக்கவும் வந்த மனிதர்களால் நிறைந்து காணப்பட்டது


திடீரென கருப்பு சட்டை அணிந்த சில இளைஞர்களும் இளைஞிகளும் அங்கே திரண்டு தெருக்கூத்து கலைஞர்களானார்கள்.
தப்பு வாத்தியம் மெது மெதுவாக வேகமெடுத்து முடித்த அந்த அமைதியான நேரத்தில்,'நுாறு நாள் ஒரு வீட்டில் பூட்டிவைத்து சோத்தை போட்டு சோம்பேறியாக்கும் (பிக்பாஸ்)கதையல்ல எங்கள் கதை. இது ஊனமுற்ற ஒரு மனிதன் உலக அரங்கில் நமது நாட்டின் பெருமையை உயர்த்திய கதை,உலக ஊனமுற்றோர் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தங்கவேலு மாரியப்பனின் கதை' என்று சொல்ல மொத்த பார்வையாளர்களும் இவர்கள் பக்கம் திரும்பினர்.


சேலம் பக்கத்தில் உள்ள கிராமத்தில் காய்கறி விற்று பிழைக்கும் தாயின் வயிற்றில் பிறந்து, விபத்தில் ஒரு காலை இழந்த மாரியப்பன், நம்பிக்கை இழக்காமல் பாடுபட்டு தங்கம் வென்ற கதையை அடுத்த ஒரு பத்து நிமிடத்திற்குள் அனைவரும் பாராட்டும்படி விறுவிறுப்புடன் நடித்துக்காட்டி மனதில் பதியவைத்தனர்.
விபத்தில் அடிபட்டு மாரியப்பன் விழுந்து கிடக்கும் போது, விழுவது என்பது எழுவதற்காக..அழுவதற்காக அல்ல என்று வந்து விழுந்த வார்த்தைக்கும், களத்தில் மாரியப்பன் நிற்கும் போது நீ சாதாரணவன் அல்ல சாதிக்கபிறந்தவன் உன் நரம்புகள் முறுக்கேறட்டும் ரத்தம் சூடாகட்டும் உன்னை மிதித்தவர்கள் மதிக்க மண்ணை ஒங்கி மிதி, உயரே உயரே தாண்டு,நம் நாட்டு கொடி உயர்ந்திட, யாரும் எட்ட முடியாத உயரத்திற்கு தாண்டு என்ற உற்சாகமான வசனத்திற்கும் சொந்தக்காரர் பிரவீன்குமார் என்ற மாணவர், இவர்தான் கதை மற்றும் இயக்கமும் கூட.


தெருக்கூத்து நிறைவடையும் போது நாங்க சென்னை ஈஸ்வரி பொறியியல் கல்லுாரி மாணவர்கள், நாங்கள் நடத்தும் அறம் அறக்கட்டளை சார்பாக எழை குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு கழிப்பறை கட்டித்தருவதற்காக நிதி சேர்க்க இது போன்ற தெருக்கூத்தை நடத்தி வருகிறோம் என்றனர்.
பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டி கைதட்டினர் பார்வையாளர்கள் சிலர் மனமுவந்து நாங்கள் இந்த இளைய தலைமுறையை எப்படியோ நினைத்விட்டோம் இப்போதுதான் தெரிகிறது அவர்களிடம் பொறுப்பு என்ற நெருப்பு திகுதிகுவென எரிகிறது பாராட்டுகள் என்றனர்.


இந்த மாணவர்களுக்கு பாடச்சுமை அதிகம் என்றாலும் அதில் முழ்கிப்போகாமல், முகநுால் வாட்ஸ்அப்பில் தொலைந்து போகாமல், சமுதாய சிந்தனையுடன் தெருவிற்கே வந்து மக்களோடு மக்களாக கலந்து பேசுகின்றனர் என்றால் அவர்களை கட்டாயம் பாராட்டத்தானே வேண்டும்.அவர்களை பாராட்ட நினைத்தாலும் அவர்கள் கட்டிக்கொடுக்க நினைக்கும் கழிப்பறைக்கு உதவ நினைத்தாலும் தொடர்பு கொள்ளவேண்டிய எண்:8939780883.
-எல்.முருகராஜ்.

murugaraj@dinamalar.in

Advertisement
 

வாசகர் கருத்து (5)

 • Justin - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  உங்கள் முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடருங்கள் உங்கள் பயணத்தை

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  அப்ப விழுந்தா வலிக்காதா? அழக்கூடாதா?

 • pts - Lafayette,யூ.எஸ்.ஏ

  paaraatta vendiya vishayam.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  பத்து முறை கீழே விழுந்தவனை பூமி முத்தமிட்டு சொன்னது நீ ஒன்பது முறை எழுந்தவனல்லவா கவிஞர் ஈரோடு தமிழன்பனின் வைர வரி கவிதை

 • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

  வாழ்த்துக்கள் இளைய சமூகத்தினரே, கருப்பு சட்டை என்றால் இது ஒரு இந்து எதிர்ப்பு செய்தியாக இருக்கும் என்று அசுவாரஸ்யமாக படித்தேன், ஆனால் கலக்கிடீங்க, உதவும் கரங்கள் நீளும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement