Advertisement

டீ கடை பெஞ்ச்

அதிகாரிகளுக்கு பழனிசாமி, 'கண்டிஷன்!'''மயிலாடுதுறையில, ரயில்வே ஸ்டேஷன்ல, பெண் ஊழியர்கள் புலம்பல் தாங்கலே ஓய்...'' என்றபடி, பெஞ்ச் அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா.''எதுக்கு வே புலம்புதாவ...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.
''ஸ்டேஷன்ல, ஒரு இன்ஜினியர் இருக்கா... யூனியன்காரர்... பெண் ஊழியர்கள்ட்ட, சில்மிஷம் செய்யறார்ன்னு, அவாள்லாம் புலம்பிண்டு இருக்கா... ஆனா, இந்த மனுஷன் அதைப் பத்தி கவலையே படறதில்லை...
''பின்னணி விசாரிச்சா, 'பகீர்' தகவல் கெடைக்கறது... அந்துார் மினிஸ்டர் ஒருத்தர் தான் இவருக்கு பெரிய சப்போர்ட்டாம்...'' என்ற குப்பண்ணாவின் காலை ஒரு நாய் சுற்றிச் சுற்றி வந்தது.
''யாரு ஓய் இது கழுத்துல, 'மணி'யை கட்டினது...'' என்ற படியே தொடர்ந்தார் குப்பண்ணா.
''அந்த மினிஸ்டர் பதவியே திரிசங்கு நிலையில இருக்கறப்ப, இந்த இன்ஜினியருக்கு, 'பக்க பலமா' இருக்கார்ன்னு நினைச்சா, 'ஒருத்தருக்கு, எந்திரிச்சு நிக்கவே வக்கில்லையாம்... ஒன்பது பொண்டாட்டி கேக்குதாம்...'ங்கற சந்திரமுகி பட வசனம் தான் நினைவுக்கு வரது ஓய்...'' என்றார்
குப்பண்ணா.
''கிரானைட் விவகாரம் கிடப்புல போயிடிச்சு பார்த்தீங்களா...'' என, பழைய மேட்டரை துாசி தட்டினார் அந்தோணிசாமி.''ஆமால்ல... என்னாச்சு இப்ப அந்த மேட்டர்...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.
''மதுரை கிரானைட் விவகாரத்தை, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் விசாரிச்சாரு... அவரோட அறிக்கை, உயர் நீதிமன்றத்துல தாக்கலாச்சு... அது அப்படியே கிடப்புல இருக்கு... அது தவிர, கலெக்டரே, 80 குவாரிகள்கிட்டே, அபராதம் கேட்டு, நோட்டீஸ் கொடுத்தாரு... சில பேர், கோர்ட்ல அப்பீலுக்குப் போனாங்க...
''அதுல, சிலருக்கு நோட்டீஸ் வந்துச்சு... அதுக்கப்புறம், இந்த விவகாரமே அடங்கிப் போச்சு... சமீபத்துல, அது பத்தி விசாரிச்சப்ப தான், ஆளுங்கட்சியில சில பேர், இந்த விவகாரத்தை மூடி மறைக்கறா மாதிரி, அதிகாரிகளை சரிகட்டிட்டாங்கன்னு தெரிஞ்சுச்சுங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''மூணு வார்த்தைகளுக்கு மேல் இருக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாரு வே...'' என, கடைசி மேட்டருக்கு வந்தார் அண்ணாச்சி.
''யாரு பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.''முதல்வர் பழனிசாமி தான்... அவர் பங்கேற்குற விழாக்கள்ல, அவருக்கான உரை தயாரிக்கும்போது, சின்ன சின்ன வாக்கியமா தயாரிக்கணும்ன்னு சொல்லுதாரு... ''மேலும், ஒரு வரியில மூணு வார்த்தைகளுக்கு மேலே இருந்துச்சுன்னா, படிக்க அவருக்கு சிரமமா இருக்காம்... இப்படி உத்தரவு போட்டிருக்காரு... அதனால, இனிமேர்ந்து அவர் வாக்கியங்களை, கவிதை வடிவுல பார்க்கலாம் வே...'' என்றார்
அண்ணாச்சி.நண்பர்கள் நடையைக் கட்டவே, தீபாவளி பலகாரம் விற்கும் வகையில், கடையை விரிவுபடுத்தலாமா என்ற ஆலோசனையில் மூழ்கினார் நாயர்.

கொதிகலன்கள் வாங்கி, 'கும்மி' அடித்தது எப்படி?


''ம.தி.மு.க., மாநில சுயாட்சி மாநாட்டுல, கூட்டணி அறிவிப்பை வெளியிட போறா ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் சங்கமித்தார் குப்பண்ணா.
''விளக்கமா சொல்லுங்க பா...'' என்றார் அன்வர்பாய்.''தி.மு.க., - ம.தி.மு.க., மத்தியில, இணக்கம் அதிகமாயிண்டே இருக்கு... நவ., 20ம் தேதி, சென்னையில, வைகோ நடத்தற மாநில சுயாட்சி மாநாட்டுக்கு, ஸ்டாலினும் போறார் ஓய்... அப்ப, ரெண்டு கட்சி கூட்டணி அறிவிப்பு வெளியாகும்னு சொல்றா...
''சமீபத்துல நடந்த, ம.தி.மு.க., ஆலோசனை கூட்டத்துல, 'அடுத்து வர எல்லா தேர்தல்லயும், தி.மு.க.,வோட தான் கூட்டணி அமைக்கணும்'னு, மாவட்ட செயலர்கள் வலியுறுத்தியிருக்கா... அதை, வைகோவும் ஏத்துண்டுட்டார் ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''மலர் கிரீடம் சூட்டி, தண்டனையில இருந்து தப்பிட்டாங்க...'' என, அடுத்த தகவலுக்கு தாவினார் அந்தோணிசாமி.
''யாருவே அது...'' என்றார் அண்ணாச்சி.''அங்கீகாரம் இல்லாத மனைகளின் விற்பனைக்கு, 2016 செப்., 9ம் தேதி, ஐகோர்ட் தடை போட்டுச்சு... ஆனா, தடையை மீறி, நிறைய சார் - பதிவாளர்கள், பத்திரங்களை பதிவு பண்ணி, பணம்சம்பாதிச்சதா புகார்கள்எழுந்துச்சுங்க...''கோர்ட் உத்தரவை மீறி, பத்திரம் பதிவு செஞ்ச, சார் - பதிவாளர்கள் மேல நடவடிக்கை எடுக்கும்படி, பதிவுத் துறை, டி.ஐ.ஜி.,க்களுக்கு, பதிவுத் துறை தலைவர் உத்தரவு போட்டாருங்க... டி.ஐ.ஜி.,க்களும், சார் - பதிவாளர்களுக்கு, 'நோட்டீஸ்' குடுத்துட்டு இருந்தாங்க...
''புகார்ல சிக்குன சார் - பதிவாளர்கள் சிலர், சமீபத்துல, பதிவுத் துறை, ஐ.ஜி., கூடுதல், ஐ.ஜி.,க்களை பார்த்து பேசியிருக்காங்க... அப்ப, ஐ.ஜி.,க்கு மலர் கிரீடம், மாலை எல்லாம் போட்டு, 'மரியாதை' பண்ணியிருக்காங்க...
''அதுல இருந்து, சார் - பதிவாளர்கள் மீதான நடவடிக்கை, நத்தை வேகத்துக்கு மாறிடுச்சுங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.
''கொதிகலன் வாங்கி, 'கும்மி' அடிச்சுட்டாவ வே...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார் அண்ணாச்சி.''புரியும்படியா சொல்லுங்க பா...'' என்றார் அன்வர்பாய்.''தமிழகம் முழுக்க, 1,300க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் நல விடுதிகள்ல, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட, மாணவ - மாணவியர் தங்கிபடிக்காவ வே...''இவங்களுக்கு, விடுதி கள்ல, சீக்கிரமா உணவு சமைக்க, பெரிய பெரிய ஓட்டல்கள்ல இருக்கிற மாதிரி, நீராவி கொதிகலன்கள் வாங்கி குடுக்காவ... வருஷத்துக்கு, 250 கொதிகலன்கள் வீதம் வாங்குதாவ வே...
''இதுல, நிறைய முறைகேடு நடக்கு... அதாவது, இந்த கொதிகலன்கள், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருக்கிற விடுதிகளுக்கு தான் சரிப்பட்டு வருமாம்...
''ஆனா, 50 பேரே இருக்குற விடுதிகள்ல, இதை பயன்படுத்தாம, ஓரமா போட்டு வச்சிருக்காவ... அது மட்டும் இல்லாம, மார்க்கெட்டுல, ஒன்றரை லட்சத்துக்கே கிடைக்கிற கொதிகலன்களை, 'டெண்டர்' விட்டு, நாலு லட்சம் ரூபாய்க்கு மேல குடுத்து வாங்கியிருக்காவ வே...'' என, அண்ணாச்சி முடிக்கவும், பெரியவர்கள் கிளம்பினர்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • chinnamanibalan - Thoothukudi,இந்தியா

    அரசுத்துறைகளில், டெண்டர் என்ற பெயரில் அப்பட்டமான பகல் கொள்ளை நடப்பது வேதனை அளிக்கிறது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement