Advertisement

இளையராஜா கோரிக்கை சரிதானா?

'ஸ்மூல்' என்ற இணையதளத்தில் உள்ள அப்ளிகேஷனில், பிரபல பாடல்களுக்கான பின்னணி இசை மட்டும் ஒலிக்கும். குரல் வர வேண்டிய இடங்களில் நாம் பாடினால், பின்னணி இசையுடன், அந்த பாடல் பதிவாகும். அந்த பாடலை, சமூக வலைதளங்களில், நண்பர்களுக்கு பகிரலாம்.இந்த இணையதளம், இரண்டு திட்டங்களை கொண்டுள்ளது. ஒரு திட்டத்திற்கு பணம் கிடையாது; மற்றொன்றுக்கு, மாதம் அல்லது ஆண்டு சந்தா கட்ட வேண்டும்.
இளம் தலைமுறையினரிடம் அதிக வரவேற்பு பெற்றுள்ள அந்த இணையதளத்திற்கு எதிராக, இளையராஜா, 'நோட்டீஸ்' அனுப்பிஉள்ளார்.
'என் இசையில் வெளியான பாடல்களை பயன்படுத்த, என்னிடம் அனுமதி பெற வேண்டும். இல்லையேல், அந்த இசையை பகிரக் கூடாது' என, அந்த நோட்டீசில் அவர் தெரிவித்துள்ளார் என, தகவல்கள் கூறுகின்றன.
இளையராஜா அப்படி கேட்பதில் நியாயம் இருக்கிறது. உண்மையில், அவர் குறிப்பிட்டிருப்பது, அவரது இசையில் அமைந்த எல்லா பாடல்களுக்குமானது அல்ல; எந்த இசை படைப்புக்கெல்லாம் அவர் வசம் உரிமை உள்ளதோ, அவற்றிற்கே தன்னிடம் உரிமம் வாங்க வேண்டும் என, சொல்லி இருக்கிறார். அந்த இசைக்கு என, இளையராஜா செலவழித்த நேரம், அவரது இசை அறிவு மற்றும் உழைப்பு போன்றவற்றை பயன்படுத்தி, வேறு ஒருவர் சம்பாதிக்கக் கூடாது என்பதாலேயே, 'இசை உரிமை' என, சட்டம் சொல்கிறது.
என் வீட்டில் ஒரு வேலையாள் இருக்கிறார் என, வைத்துக் கொள்வோம். அவரை, 'இப்படி பாத்திரம் தேய்... இன்ன சோப்பை, இப்படி பயன்படுத்து...' என, வேலை வாங்கினால், அவர் என் கூலியாள்; சம்பளத்துக்கு வேலை செய்பவர்.அது போல, என் வீட்டு வேலைகளை செய்ய, ஒரு நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்திருக்கிறேன் என, வைத்துக் கொள்வோம். வேலையாள் வரவில்லை எனில், அந்த வேலையை செய்து முடித்து தரும் பொறுப்பு, அந்நிறுவனத்துக்கு உரியது.இத்தகைய நிலையில், அந்நிறுவனம் என் வேலையாள் அல்ல. ஆனால், எனக்கு வேலையை அளிக்க வேண்டிய பொறுப்பு, அந் நிறுவனத்திற்கு உள்ளது. அதற்காக பணம் பெறுகிறது என்பதால், அதை கேட்பது என் உரிமை.சில நேரங்களில், பொறுப்பும், உரிமையும் ஒன்றுக்கொன்று இணையானவை.அது போலவே, இளையராஜா, தன் இயக்கத்தில், மற்றவர்களிடம் வேலை வாங்கி, ஓர் இசை படைப்பை உருவாக்குகிறார் என்றால், அவரே அந்த இசைக்கு முழு பொறுப்பு. எனவே, உரிமையும் அவருடையதே.இளையராஜா, அதன் இசை உரிமையை, தன் பெயரில் வைத்திருக்கலாம் அல்லது வேறு ஒரு தயாரிப்பாளருக்கு விற்றிருக்கலாம். அப்படியாயின், அந்த உரிமை எவரிடம் உள்ளதோ, அவரிடமே அது போன்ற இணையதளங்கள் உரிமம் வாங்க வேண்டும்.
கடந்த, 2014ல், பேட்டி ஒன்றில் இயக்குனர், ஆர்.சுந்தரராஜன், 'என் மொபைல் போனில், 'இளைய நிலா பொழிகிறது...' என்ற பாடலை காலர் டியூனாக வைத்திருக்கிறேன். அதற்கு, இளையராஜா அல்லது அந்த பாடல் இடம்பெற்ற படத்தின் படத்தயாரிப்பாளருக்கு நான் பணம் தருவதில்லை.
'மாறாக, எனக்கு மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனத்திற்கு மாதம், 30 ரூபாய் கொடுக்கிறேன். என்ன நியாயம்... இதையெல்லாம் சரி பண்ணப் போகிறோம். இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்துபவர்களிடம், 'ராயல்டி' வாங்க ஆரம்பித்திருந்தால், பில் கேட்சை விட அதிகம் சம்பாதித்திருப்பார்' என்றார்.ஆனால், உண்மை அதுவல்ல. இசையமைப்பாளர் தன் இசை உரிமையை, காலர் டியூன், ரிங்டோன் என, வேறு தேவைகளுக்கு பயன்படுத்த உரிமம் அளித்திருக்கலாம். இதற்காக அவர் குறிப்பிட்ட தொகையை, அந்த நிறுவனங்களிடம் வாங்கி இருக்கலாம்.அவ்வாறு உரிமம் பெற்ற நிறுவனங்களே, நம்மிடம் இருந்து மாதத்தொகை வசூலிக்கின்றன. இது, சட்டப்படி நியாயமே. ஆனால், பிரச்னை என்னவெனில், இளையராஜா உரிமம் வழங்கும் போது, குறிப்பிட்ட காலத்திற்கு பயன்படுத்த அனுமதித்திருப்பார்.
ஆனால், அந்த காலத்திற்கு பிறகும், சில நிறுவனங்கள், நம்மிடம் இந்த சேவையை அளித்து பணம் பெறுகின்றன. இது தான், சட்டத்திற்கு புறம்பானது.இதில், இளையராஜா இசையின் பின்னணியை, அப்படியே பயன்படுத்துகின்றனரா அல்லது அந்த இசையை, மறுபடி இன்னொரு குழு வாசித்து, அதைப் பயன்படுத்துகின்றனரா என்பதை கவனிக்க வேண்டும்.
இந்திய காப்புரிமை சட்டத்தில், 'வெர்சன் சிங்கிங்' என, ஒன்று உண்டு. ஏற்கனவே வந்த பாடல்களை முழுதாக, மறுபடி இசைப்பது. அது சட்டப்படி சரி!
மேற்கண்ட, ஸ்மூல் விஷயத்தில், இளையராஜா தரப்பின் கோரிக்கையில் நியாயம் இருக்கிறது. ஆனால், ஸ்மூலின் ஒப்பந்த ஷரத்தில், அந்த சேவையை பயன்படுத்த, அதாவது, அந்த இணையதளத்திற்கு வந்து போக, தொகை வசூலிக்கின்றனர்.ஏற்கனவே, பல இணையதளங்கள் மீது வழக்குகள் தொடரப்பட்ட போது, அந்த இணையதளங்கள், 'நாங்கள் வெறும், 'நோட்டீஸ் போர்டு' தான். அதில் இருக்கும் தகவல்களுக்கு நாங்கள் பொறுப்பில்லை' என, வாதிட்டு வென்றுஇருக்கின்றன.இந்த எதிர்வாதத்தை சொல்லியே, இணையதளங்கள் பலவும் தப்பித்து வருகின்றன. கொஞ்சம் வேறுபாடு இருப்பினும், ஸ்மூல் விவகாரத்திலும் அதே சூழலே. ஆனாலும், இளையராஜா தரப்பு, இன்னொரு வகையிலும், இந்த விஷயத்தைக் கையாண்டு வெல்ல வாய்ப்பிருக்கிறது.பொறுத்திருந்து பார்ப்போம்!

ஹன்ஸா, வழக்கறிஞர்
legally.hansa68@gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • தேச நேசன் - Chennai,இந்தியா

    மற்ற மொழி மற்றும் நாட்டு இசைகளின் தாக்கம் இளையராஜாவிடத்திலுமுண்டு அவற்றுக்கு அவர் ராயல்டி கொடுக்கிறாரா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement