Advertisement

நடப்பது பழனிசாமி ஆட்சியா; சசிகலா ஆட்சியா?

சசிகலாவின் கணவர், நடராஜனின் உயிரை காப்பாற்ற தேவைப்பட்ட, உடல் உறுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்ட விதம், நடப்பது பழனிசாமி ஆட்சியா; சசிகலா ஆட்சியா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பழனிசாமி, பன்னீர்செல்வம், தினகரன் என, எல்லாரும், 'நீ அடிக்கற மாதிரி நடி, நான் அழற மாதிரி நடிக்கிறேன்' என, நம்மோடு கண்ணாமூச்சி ஆடுகின்றனர் போலிருக்கிறது. மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் தொடர்பாக, தமிழகத்தில், தெளிவான விதிகளும், நடைமுறைகளும், ஏற்கனவே அமலில் உள்ளன. மஹாராஷ்டிரா காங்கிரஸ் பிரமுகர், விலாஸ்ராவ் தேஷ்முக், சென்னையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது, அவர் கோரியது போல, விதிகளை மீறி, கல்லீரல் வழங்க, தமிழக மாற்று உறுப்பு ஆணையம் மறுத்து விட்டது. ஆனால், நடராஜன் விஷயத்தில் நடந்திருப்பது என்ன? பிளக்ஸ் பேனர்கள் ஒட்டும் வேலை பார்த்து வந்த வாலிபர் கார்த்திக், விபத்தில் அடிபட்டு, தஞ்சை அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கே, அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டிருக்கிறது; ஆனால், அதுபற்றி முறையாக அறிவிக்கப்படவில்லை. குடும்பத்தினர், கார்த்திக்கின் உடல் உறுப்புகளை, தானமாக தர ஒப்புக் கொள்கின்றனர். அரசு விதிகளின்படி, எந்த மருத்துவமனையில் ஒருவர் இறந்தாரோ அதற்கே முன்னுரிமை. இதன்படி, தஞ்சை அரசு மருத்துவமனையும், இதர அரசு மருத்துவமனைகளுமே, முன்னுரிமை பெறுகின்றன. அவற்றில் உள்ள, வசதியற்ற ஏழை நோயாளிகளுக்கு, கார்த்திக்கின் உடல் உறுப்புகள் தானமாக கிடைத்திருக்க வேண்டும். இந்த விதியிலிருந்து தப்பிக்க, கார்த்திக் மூளைச்சாவு அடைந்த பின்னரும், தொடர்ந்து அதி தீவிர சிகிச்சை பெறுவதற்காக எனச் சொல்லி, தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார். எந்த மருத்துவமனையில் மூளைச்சாவு நடந்ததோ, அதற்கே முன்னுரிமை என்ற விதிப்படி, தனியார் மருத்துவமனைக்கு முன்னுரிமை கிடைப்பதற்காக, இப்படி செய்யப்பட்டு உள்ளது.
வசதியில்லாமல், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கார்த்திக், விமான ஆம்புலன்ஸ் வாயிலாக, தஞ்சையிலிருந்து சென்னை குளோபல் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகிறார். அங்கே தான், அவர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டு, குளோபல் மருத்துவமனை முன்னுரிமைகளைப் பெறுகிறது. அங்கு சிகிச்சை பெறும் நடராஜனுக்கு தேவைப்படும் உடல் உறுப்புகள், கார்த்திக்கின் உடலில் இருந்து எடுத்து பொருத்தப்படுகின்றன.
தமிழ்நாடு மாற்று உறுப்பு ஆணையம், தமிழகம் முழுவதும், உறுப்பு வேண்டி பதிவு செய்வோரின் பட்டியலை வைத்துள்ளது. சீனியாரிட்டி படியே, தானம் கிடைக்கும் உறுப்புகள் ஒதுக்கப்படும்.
இரண்டாண்டுகளுக்கு முன்பே, பதிவு செய்து காத்திருப்போர் ஏராளமாக உள்ளனர். நடராஜன், ஏப்ரலில் தான் பதிவு செய்தார் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மரபுப்படி, வாலிபர்களின் சிறுநீரகங்கள், மிகவும் வயதானவர்களுக்கு குறிப்பாக, 65ஐ கடந்தவர்களுக்கு ஒதுக்கப்படுவதில்லை. 50 வயதுக்கு கீழுள்ளவர்களுக்கே ஒதுக்கப்படும். நடராஜன் வயது, 74. இறந்த கார்த்திக்கின் வயது, 19.

நடராஜனுக்காக நடத்தப்பட்ட இந்த நிகழ்வுகள், பல கேள்விகளை எழுப்புகின்றன. அதன் விபரம்:
 விபத்தில் அடிபட்டு, மருத்துவமனையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டால், அது, காவல் துறையின் கவனத்திற்கு வரக்கூடிய, மெடிகோ லீகல் கேசாகும். வேறு மருத்துவமனைக்கு மாற்றுவது என்றால், காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்படவேண்டும்
 தஞ்சை அரசு மருத்துவமனையில், நோயாளியின் நிலை என்னவாக இருந்தது; அங்கேயே, அவர் மூளைச்சாவு அடைந்து விட்டார் என்றால், ஏன் அங்கேயே அதற்கு சான்றளிக்கப்படவில்லை?
 வேறு மருத்துவமனைக்கு செல்கிறோம் என, ஒருவர் சொன்னால், அது, மருத்துவரின் ஆலோசனைக்கு விரோதமாகவே கருதப்படும். அரசு மருத்துவமனையிலிருந்து அப்படி அனுப்புவதானால், ஏன் அனுப்பினர் என, காரணம் காட்ட வேண்டும்
 மருத்துவ ஆலோசனைக்கு விரோதமாக அனுப்பிய நிலையில், எப்படி ஓர் அரசு மருத்துவர், நோயாளி உடலுடன், ஏர் ஆம்புலன்சில் தனியார் மருத்துவமனைக்கு செல்ல முடியும்? யாருடைய உத்தரவுப்படி, அவர் சென்றார்? டீன் அனுப்பவில்லை; ஏனெனில், இந்த கேஸ் பற்றி, தனக்கு எதுவும் தெரியாது என, பத்திரிகையாளர்களிடம் அவர் சொல்லியிருக்கிறார்
 தஞ்சைக்கு அருகில், பல சிறந்த மருத்துவமனைகள் உள்ள நிலையில், எப்படி, 300 மைல்களுக்கு அப்பால் உள்ள, குளோபல் மருத்துவமனையை, ஏழை நோயாளி குடும்பம் தேர்வு செய்தது?
 ஏர் ஆம்புலன்சை வரவழைத்தவர், அரசு மருத்துவர் என, 'டைம்ஸ் ஆப் இந்தியா' பத்திரிகை தெரிவித்துள்ளது. தங்கள் மருத்துவமனையை விட்டு, மருத்துவ ஆலோசனைக்கு விரோதமாக, 'டிஸ்சார்ஜ்' ஆகும் நோயாளிக்கு, எப்படி அரசு மருத்துவரே ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்தார்?
 ஏர் ஆம்புலன்சுக்கு பெரும் பணம் கட்டியது யார்? ஏழை நோயாளிக்கு திடீரென, ஏது அவ்வளவு பணம்? உறுப்புகளை பெற இருப்பவர் சார்பில் கொடுக்கப்பட்டது எனில், இது, அப்பட்டமான உறுப்பு விற்பனை வணிகமாகும். சட்டப்படி மிகப்பெரிய குற்றம்; இதுபற்றி விசாரிக்கப்பட வேண்டும்
 ஒருவர் மூளைச்சாவு அடைந்தார் என்பதை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 24 மணி நேரம் கழித்தே தெரிவிக்க வேண்டும். ஆனால், குளோபல் மருத்துமனைக்கு, விபத்து நோயாளி வந்த உடனே, மாற்று அறுவை சிகிச்சைகள் துவங்கி விட்டன என, தெரிகிறது.
மொத்தத்தில் நடந்திருப்பது, தஞ்சையிலேயே மூளைச்சாவு அடைந்த ஒருவரை, அந்த மருத்துவமனையிலேயே அதை அறிவிக்காமல், சட்டவிரோதமாக வேறு மருத்துவமனைக்கு சிகிச்சை எனச் சொல்லி எடுத்துச் சென்று, அங்கு அவரின் உறுப்புகள் அகற்றப்பட்டு, வேறொருவருக்கு பொருத்தப்பட்டு உள்ளன.
இப்படி, விதிமுறைகள், நெறிமுறைகள் அனைத்தையும் மீறி, நடராஜனுக்கு உறுப்புகள் வழங்கப்படுவதற்கு, காவல் துறை, அரசு மருத்துவர்கள் மற்றும் தமிழ்நாடு அரசின், மாற்று உறுப்பு ஆணையத்தின் ஒத்துழைப்பு தேவை. இந்த ஆணையம் திறம்பட செயல்பட காரணமாக இருந்த, அரசு மருத்துவர் அமலோற்பவநாதன், சில மாதங்களுக்கு முன், தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். அந்த இடத்துக்கு, அப்பல்லோ மருத்துவமனையில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது, தேர்தல் ஆணைய ஆவணங்களில், அவர் கை நாட்டு வைத்ததற்கு சாட்சியாக, கையெழுத்திட்டவரான, மருத்துவர் பாலாஜி தான் நியமிக்கப்பட்டுஉள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது சொல்லுங்கள். நடப்பது பழனிசாமி ஆட்சியா; சசிகலா குடும்ப ஆட்சியா?

ஞாநி, எழுத்தாளர்
pattamgnani@gmail.com

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

    இந்த செய்தி கட்டுரையை எழுதிய, பூனைக்கு மணி கட்டிய, ஞாநி அவர்களுக்கு ஒரு பாராட்டு. அனைத்தும் அப்பட்டமான உண்மை. ஆயினும் நடப்பது எல்லாம் தவறு, சட்டவிரோதம், எல்லாவித உரிமை மீறல்கள் என்று தெரிந்தும் சம்பந்தப்பட்ட அரசு அதிகார அமைப்புகள் செய்வதென்ன? ஒன்றுமேயில்லை. சிலர் நல்லதே செய்வார்கள். சிலர் நல்லது செய்வார்கள், ஆனால் தவறுதலாக தீயவை சிலவும் செய்வார்கள். சிலர் தீயதே செய்வார்கள், ஆனால் சில சமயம் நல்ல மனதுடன் நல்லது செய்து விடுவார்கள். ஆனால் இவர்கள் நல்லது செய்து விடக்கூடாது என்று சபதம் போட்டு தீயதை மட்டுமே செய்து வருபவர்கள். ஒரு மாநிலத்தின் முதல்வரையே முடிச்சிருக்கோம், முப்பதாண்டு தமிழ்நாட்டையே கேள்வி கேட்பாரின்றி சூறையாடியிருக்கிறோம். எவனும் வாயை திறக்கவில்லை. இன்று இவன் என்ன ஃப்ளெக்ஸ் ஓட்டுற ...யி.. இவனுக்கு என்ன? உசிரை கொடுக்க வேண்டியது தானே என்ற எண்ணமா? . இவர்கள் இப்படி அலைவதற்கு காரணம், இந்த பேய்களுக்கு இடம் கொடுத்து இந்த கொலை கொடூரத்தில் மற்றும் அப்பட்டமான அத்துமீறலில் பங்கு கொண்ட குளோபஸ் மருத்துவமனை, அரசு மருத்துவர், தஞ்சை அரசு மருத்துவமனை டீன், உடல் உறுப்புகள் தானம் அமைப்பின் அதிகாரிகள் என்று அனைவரும் தானே? அனைவரும் தண்டனை பெறவேண்டும். கேடு கெட்ட அசிங்க ஊழல் பிடித்த இந்த இந்தியாவில் இது எப்போது தான் நடக்கும்.? சட்டமும், நீதியும், என்றைக்கோ கோமாவில் விழுந்து செத்தும் போய்விட்டதே.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement