Advertisement

டீ கடை பெஞ்ச்

பழனிசாமி கூட்டத்தைப் பார்த்து மிரண்ட தினகரன்!


''வருவாய்க்காக ரயில் ரூட்டை மாத்த பாத்தாவ வே...'' என்றபடி, பெஞ்சில் வந்தமர்ந்தார் அண்ணாச்சி.
''யாருங்க சொன்னது...'' என, கேட்டார் அந்தோணிசாமி.
''சென்னை - தாம்பரத்தில இருந்து, நெல்லை - செங்கோட்டைக்கு பகல் நேரத்துல, சிறப்பு ரயில், மெயின் லைன்ல, கும்பகோணம், தஞ்சை வழியா இயக்குறதா முன்ன அறிவிச்சாவ... அப்புறம் திடீர்னு, விழுப்புரம், விருத்தாசலம் - திருச்சி வழியா போகும்னு அறிவிச்சாவ...
''டென்ஷனான மயிலாடுதுறை, கும்ப கோணம், தஞ்சை ரயில் பயணியர், என்ன காரணம்ன்னு விசாரிச்சப்ப, மெயின் லைனில் செங்கோட்டைக்கு ரயில் இயக்கினா எதிர்பார்த்த வருவாய் கிடைக்காதுன்னு அதிகாரிங்க நினைச்சு, ரூட்டை மாத்திட்டாவன்னு தெரிஞ்சுச்சாம்...
''டென்ஷனான, பயணியர் சங்கத்துக்காரங்க, ஏரியா, எம்.பி.,க்களிடம் நிலைமையைச் சொல்லி ஆத்திரப்பட, எம்.பி.,க்கள், ரயில்வே அதிகாரிகளிடம் ஆத்திரப்பட்டிருக்காவ...
''அதுக்கப்பறமா தான், விருத்தாசலம் ரூட்டை மாற்றி, கும்பகோணம், தஞ்சை வழியா செங்கோட்டைக்கு இயக்குறதா அறிவிச்சாவ வே...'' என்றார் அண்ணாச்சி.
''நடராஜனால தான், நான் சிறையில் இருக்கேன்னு கோபப்பட்டாங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.
''யாருங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.
''பெங்களூரு சிறையிலிருக்கும் சசிகலா, தன்னை சந்திக்க வந்த குடும்ப உறுப்பினர்களிடம், 'ஜெயலலிதாவுக்காக, கோவில் கோவிலா ஏறி இறங்கினேன்... நடராஜனோ, அக்கா இறந்தப்ப, ராகுலை வரவழைச்சு, காங்கிரசோட நெருக்கம் காட்டினதோடு இல்லாம, கடவுள் மறுப்புக் கொள்கைக்காரங்களோட சேர்ந்து, பா.ஜ.,வை கன்னாபின்னான்னு பேசிட்டாரு... நான் ஜெயிலுக்கு வர, அவரு தான் காரணம்'ன்னு சொல்லி கோபப்பட்டாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.
''ஆமாமாம்... இவங்க தப்பே செய்யலே பாருங்க...'' என, அந்தோணிசாமியும் கோபப்பட்டார்.
''சேலத்தை, ஸ்தம்பிக்க வச்சிட்டார் ஓய்...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் குப்பண்ணா. ''யாருங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.
''சமீபத்துல, அரசு சார்புல, சேலத்துல நடந்த, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா பொதுக்கூட்டத்துல, முதல்வர் பழனிசாமி கலந்துண்டாரோல்லியோ... 45 ஆயிரம் நாற்காலிகள் போட்டிருந்தா... சாலை ஓரமா, கூடுதலா, 5௦ ஆயிரம் பேர் நின்னுண்டிருந்தா... கிட்டத்தட்ட, 4,௦௦௦ வாகனங்கள் வந்திருந்துது...
''இதைப் பார்த்து மிரண்ட தினகரன் அணிக்காரா, இதே எடத்துல, இவாளும் மாநாடு போடணும்ன்னு, 'பிளான்' பண்ணிண்டிருக்கா ஓய்...'' என்றார்
குப்பண்ணா.''ஏய்... ஏய்... அந்தப் பூனையைப் பிடி... அடுப்பங்கரையில சூடு போட்டுக்கப் போகுது...'' என, அதன் பின் ஓடினார் அன்வர்பாய்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement