Advertisement

டீ கடை பெஞ்ச்

போக்குவரத்து கழகத்தில், ஓ.டி., பணிகள் விற்பனை!


''முக்கிய தலைவரா இருந்துட்டு, மாநாட்டுல கலந்துக்காதது, விமர்சனத்தை கிளப்பிட்டு வே...'' என, பெஞ்ச் தகவலை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''யாரை சொல்றீங்க...'' என்றார் அந்தோணிசாமி.''ஜூன், 12ம் தேதி, ஜெனீவாவுல, ஐ.நா., மனித உரிமை மாநாடு நடந்துச்சு... இதுல கலந்துக்க, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினுக்கு, அழைப்பு குடுத்திருந்தாவ வே...
''அந்த மாநாட்டுல, உலக நாடுகள்ல நடந்த மனித உரிமை மீறல்கள் சம்பந்தமா விவாதிச்சிருக்காவ... மாநாட்டுல, ஸ்டாலின் கலந்துக்கலை... அவர், 'ஆப்சென்ட்'னு பதிவு பண்ணிட்டாவ வே...
''சமீபத்துல, ஜெனீவாவுல இதே மாதிரி ஒரு மாநாடு நடந்துச்சு... இங்க இருந்து, வைகோ உட்பட சிலர் போயிட்டு வந்தாவ...
''அவங்களிடம், 'போன மாநாட்டுக்கு ஏன் ஸ்டாலின் வரலை'ன்னு மத்த நாட்டு பிரதிநிதிகள் கேட்க, இவங்க பதில் சொல்ல சிரமப்பட்டிருக்காவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.
''லோக்சபா தேர்தலுக்கு இப்பவே தயாராகுறாங்க...'' என, அடுத்த தகவலை கையில் எடுத்தார்
அந்தோணிசாமி.''எந்த கட்சியில பா...'' என்றார் அன்வர்பாய்.''மதுரை மாவட்ட, பா.ஜ.,காரங்களை தான் சொல்றேன்... இவங்க, கிராமங்கள் வாரியா, பிரதமர் மோடியின் சாதனைகளை விளக்க போறாங்க...
''இதுக்காக, 'தாமரை சேவகர்கள்'னு ஒரு அணியை நியமிச்சிருக்காங்க... இவங்க, மோடி சாதனைகளை எளிமையா விளக்கி, கிராம மக்களின் ஆதரவை, பா.ஜ., பக்கமா திருப்பணும்... இதுக்காக, அவங்களுக்கு கம்ப்யூட்டர் மூலமா, தெளிவான திட்டங்களை வகுத்து குடுத்திருக்காங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''ஏற்கனவே இப்படி தான், 'மிஸ்டு கால்' குடுத்து, ஆட்களை சேர்த்தா... இந்த பிளானாவது, 'ஒர்க் அவுட்' ஆறதான்னு பார்க்கலாம் ஓய்...'' என்ற குப்பண்ணாவின் கருத்தை கேட்டபடியே, ''டம்மி சங்கத்துக்காரங்க கூட பணம் பார்த்துடுறாங்க பா...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார்
அன்வர்பாய்.''எங்க ஓய்...'' என்றார் குப்பண்ணா.''அரசு போக்குவரத்து கழகத்துல, பல தொழிற்சங்கங்கள் இருக்கு... இதுல, தொழிலாளர் சட்டத்திற்கு உட்பட்டு, பல சங்கங்கள், வருஷா வருஷம், உரிமத்தை புதுப்பிச்சுக்குறாங்க...
''ஆனா, பல சங்கங்கள் எந்த செயல்பாட்டுலயும் ஈடுபடாம, அங்கீகாரம் இல்லாம இயங்கிட்டு இருக்கு... இந்த சங்கங்களுக்கும், 'அதர் டூட்டி'ன்னு சொல்ற, ஓ.டி., மாதிரியான சலுகைகளை அதிகாரிகள் குடுத்துடுறாங்க...
''இந்த மாதிரி, 'லட்டர் பேடு' சங்கங்கள்ல, ஓய்வு பெற்றவங்க தான் நிர்வாகிகளா இருக்காங்க... இவங்க, ஓ.டி., சலுகைகளை, ஊழியர்களிடம், 50 ஆயிரத்துல இருந்து, ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் வித்துடுறாங்க... ''இதை, அதிகாரிகளும் கண்டுக்கிறது இல்லை பா...'' என, அன்வர்பாய் முடிக்கவும், பெஞ்ச் கலையவும் சரியாக இருந்தது.

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • S.L.Narasimman - Madurai,இந்தியா

    இங்கிலிஷ் தெரியாமல் சுடாலின் மற்றவர்கள் வாய பார்த்து கொட்டாவி விட்டு உட்காரவா

  • sundaram - Kuwait,குவைத்

    ஏற்கனவே இப்படி தான், 'மிஸ்டு கால்' குடுத்து, ஆட்களை சேர்த்தா... இந்த பிளானாவது, 'ஒர்க் அவுட்' ஆறதான்னு பார்க்கலாம் ஓய்...'' என்ற குப்பண்ணா சொல்றதை அண்ணாச்சி தடுத்தார். 'மிஸ்டு கால்' குடுத்ததாலத்தான் இப்போ அவங்க கட்சியில அறுபத்தஞ்சு லட்சம் பேரு மெம்பரா சேர்ந்திருக்கா தெரியுமா சொன்னதும் பெஞ்ச் முழுக்க சிரிச்சுது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement