Advertisement

டீ கடை பெஞ்ச்

மாமூல் தகராறில் மல்லு கட்டும் போலீஸ் அதிகாரிகள்!


''தேர்தலை கணக்கு பண்ணி, காய் நகர்த்திண்டு இருக்கார் ஓய்...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா.

''யாரைச் சொல்றீங்க...'' என்றார் அந்தோணிசாமி.


''ஈரோடு மாவட்டம், பவானியைச் சேர்ந்தவர் செந்தில் பாலசுப்ரமணியம்... விவசாயம், மஞ்சள் ஏற்றுமதின்னு நிறைய தொழில்கள் செய்றார் ஓய்...


''பா.ஜ.,வுல மாநில செயலராவும் இருக்கார்... இப்ப, 'பவானி பவுண்டேஷன்' அமைப்பு மூலமா, காவிரி புஷ்கர விழாவை, கோலாகலமா நடத்தினார் ஓய்...

''இந்த விழாவுல, இந்து முன்னணி பிரமுகர்கள், ஈஷா யோகா மையத்தினர், மடாதிபதிகள்னு பலரை அழைச்சு கவுரவிச்சார்...


''மக்கள் பிரதிநிதி ஆகணும்கற அவரோட ஆசை தான் இதுக்கு காரணம்... சீக்கிரமே சட்ட சபை தேர்தல் வந்தா, 'சீட்' வாங்கி ஜெயிக்கணும்னு நினைக்கறார்...


''ஒருவேளை அதுல, 'மிஸ்' ஆயிடுத்துன்னா,2019 லோக்சபா தேர்தல்ல, எம்.பி., ஆயிடறதுங்கற ஐடியாவோட இருக்கார் ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.



''அடுத்த கட்ட போராட்டத்தை அறிவிக்க போறாருங்க...'' என்றார் அந்தோணிசாமி.''யாரு வே...''
என்றார் அண்ணாச்சி.

''டெங்குவால பாதிக்கப்பட்டு, சென்னை அரசு மருத்துவமனைகள்ல இருக்கிறவங்களை, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பார்த்து பேசினாரேங்க...

''ஸ்டாலின் மாதிரியே, அந்த கட்சியின் முக்கிய பிரமுகர்களும், அந்தந்த மாவட்டங்கள்ல, 'டெங்கு' நோயாளிகளை பார்த்து ஆறுதல் சொன்னாங்க...

''மதுரையில, டெங்கு விழிப்புணர்வு முகாம் மற்றும் நிலவேம்பு கஷாயம் வழங்குற நிகழ்ச்சியை, தி.மு.க., மருத்துவ அணியின் துணைத் தலைவர், டாக்டர் சரவணன் ஏற்பாட்டுல நடத்துனாங்க...

''அதுக்கு மக்களிடம் கிடைச்ச வரவேற்பை பார்த்துட்டு, மாவட்ட வாரியா, நிலவேம்பு கஷாய முகாம் நடத்துங்கன்னு, ஸ்டாலின் உத்தரவு போட்டிருக்காருங்க...

''அது மட்டும் இல்லாம, டெங்கு ஒழிப்பை வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தவும், மாவட்ட செயலர்களுடன், ஸ்டாலின் ஆலோசனை நடத்திட்டு இருக்காருங்க...'' என, விளக்கினார் அந்தோணிசாமி.

''விருத்தாசலத்துல, ரெண்டு போலீஸ் அதிகாரிகளுக்குள்ள நடக்குற பனிப்போரை கேளுங்க வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''இந்த ஊரைச் சுத்தியும் மணல், கூழாங்கல் குவாரிகள் நிறைய இருக்கு... குவாரிகளுக்கு போற வாகனங்களிடம், உயர் அதிகாரி நேரடியா பேசி, மாமூல் வாங்கிடுதாரு... அதனால, அவருக்கு கீழே இருக்கிற உள்ளூர் அதிகாரியை, யாரும் மதிக்கிறதே இல்லை வே...


''உள்ளூர் அதிகாரிக்கு வருமானம் பாதிக்கப்படுறதால, அவர் அடிபட்ட புலியா சீறுதாரு... அதனால, தன் பங்குக்கு, உயர் அதிகாரியிடம் அனுமதி வாங்கி வைக்குற பேனர், போஸ்டர்களை அதிரடியா துாக்கி எறிஞ்சிடுதாரு...


''இந்த ரெண்டு பேர் மோதல் தான், விருத்தாசலம் போலீஸ் வட்டாரத்துல பரபரப்பா ஓடிட்டு இருக்கு வே...'' என, முடித்தார் அண்ணாச்சி. அப்போது, பெஞ்சுக்கு வந்தவரிடம், ''வாங்க ஈஸ்வரன், உங்க பங்காளி ராஜதாமரைபாண்டியன் எப்படி இருக்காரு பா...'' என, அன்வர்பாய் கேட்க, அரட்டை தொடர்ந்தது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement