Advertisement

ஒளியூட்டி, வழிகாட்டும் உத்தமர் காந்தி!

அஹிம்சை எனும் ஆயுதம் ஏந்தி, அன்பு எனும் மந்திரம் ஓதி,அந்நிய அடிமை விலங்கை அகற்றி, ஒரு அதிசய அத்தியாயம் படைத்தவர், நம் தேசப்பிதா காந்தி. தன் உயர்ந்த சிந்தனைகளால், உன்னதமான செயல்களால், கோடான கோடி மக்களின் உள்ளத்தில் தெய்வமாகவே அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அன்பு, அஹிம்சை, சத்தியம், நேர்மை, வாய்மை, துாய்மை என, மனிதர்களை புனிதர்களாக்கும் அத்தனை நெறி முறைகளுக்கும் சொந்தக்காரர் அவர். உலகம் எத்தனையோ மஹாத்மாக்களை கண்டிருக்கிறது. ஆனால், சர்வ தேச அரசியலை துாய்மைப்படுத்த முயன்ற ஒரே மஹாத்மா, காந்தி மட்டும் தான். கைப்பிடி உப்பாலும், சிறு கைத்தடியாலும், அந்நியரின் ஆட்சி அதிகாரத்தை ஆட்டம் காண வைத்தார். உலகில் எந்த ஒரு விடுதலை இயக்கமும் செயல்படுத்தாத, அஹிம்சை வழி போராட்டத்தை அறிமுகப்படுத்தி, வெற்றி கண்டார். புத்தர் வழியில் சிலர்;இயேசுவின் வழியில் சிலர். ஆனால், காந்தியின் வழியில் உலகமே பயணிக்க ஆரம்பித்து விட்டது. உலகில் நிலவும் வன்முறைகள், ஜாதி, மத, இனக் கலவரங்கள், அணு ஆயுதப் போட்டி போன்றவற்றிலிருந்து காப்பாற்றுவதற்கான ஒரே வழி, அஹிம்சை வழி தான். முளைத்து வளரும் செடி, காற்றில் அலை மோதி உடைந்து விடாமல் இருக்கவும், அது நேராக நிமிர்ந்து வளரவும், அதன் தண்டு வலுப்பெறவும், ஒரு நிலையான குச்சி அல்லது கம்பு தேவைப்படுகிறது. அது போல, ஒட்டுமொத்த உலக சமுதாயம் வலுப்பெறவும், உயர்வு பெறவும் அவரது ஊக்கமும், ஆக்கமும் நிறைந்த வழிபாட்டு நெறிமுறைகள் உலகிற்கு தேவைப்படுகிறது. அவரது லட்சிய பாதையிலான பயணத்தால் மட்டுமே உலகிற்கு ஒளியூட்ட முடியும்; வழி காட்ட முடியும். கடந்த, 2001 செப்டம்பர், 11ம் நாள் - அமெரிக்காவின் உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரமும், ராணுவத் தலைமையகமும், பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டு, ஆயிரக்கணக்கான அப்பாவிகள் மாண்டு போன நேரம்.
அந்த தாக்குதலில், தன் கணவரை பறி கொடுத்த ஒரு அமெரிக்கப் பெண், 'சிகாகோ டிரிபியூன்' என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டி இது.
'அமெரிக்கா, பழிக்குப் பழி நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது. 'கண்ணுக்குக் கண்' என்ற தத்துவத்தால், உலகம் முழுவதுமே குருடாகி விடும். அதற்குப் பதிலாக, மஹாத்மா காந்தியின் அஹிம்சை தத்துவத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்!'
காந்தியின் அஹிம்சை தத்துவத்தின் தாக்கம் உலகெங்கும்உணரப்படுகிறது என்பதற்கு, இதை விட வேறொரு சான்று தேவையில்லை.
காந்தி, தென்னாப்பிரிக்காவில் இருந்த நேரம். மனித நேயமற்ற, நிறவேற்றுமைச் சட்டம் அப்போது அங்கு அமலில் இருந்தது. காந்தி ஒரு நாள் உலாவச் சென்றார். ஒரு மூர்க்கன், அவரை உதைத்துத் தள்ளினான்.
'அவன் மீது வழக்கு தொடர வேண்டும்; அவனை தண்டிக்க வேண்டும்' என, காந்தியின் நண்பர் தெரிவித்தார். அதை மறுத்து, 'எனக்கு ஒருவர் கெடுதல் செய்ததற்காக, அவர் மேல் நான் கோபப்பட மாட்டேன்; பழி வாங்கவும் எண்ண மாட்டேன். 'தீமை செய்தவனை மன்னித்து விடு' என்பது, இயேசு நாதரின் திருவாக்கு அல்லவா... என்னைத் துன்புறுத்திய அவனை மன்னித்து விட்டேன். வழக்குத் தொடர அவசியமில்லை' என்றார், காந்தி.
'தவறு செய்தவனிடமும் கருணை காட்ட வேண்டும்; கருணை தெய்வீகமானது' என்ற காந்திய சிந்தனையை, நாம் ஒவ்வொருவரும் பின்பற்றினால், வன்முறையில்லா உலகம் சாத்தியம் தானே! ஜாதி, மதம், இனத்தின் பெயரால் பெருகி வரும் கொடுஞ் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால், அண்ணல் காந்தியின் ஆழமான, எக்காலத்திற்கும் ஒத்துப் போகும் சிந்தனைகளைப் பின்பற்றுவது தான் சரியானது.

காலத்தை வென்று நிற்கும், காந்திய கருத்துகளில் சில:
 நண்பர்களை நேசிப்பது அல்ல; எதிரியை நேசிப்பதே உண்மை அன்பு
 நம்பிக்கையற்றவன் பயனற்றவன்
 எவ்வுயிருக்கும் தீங்கு செய்யாதே; தீமைக்குத் தீமை செய்யாதே
 உழைக்காமல் உண்ணும் உணவு திருடி உண்பதாகும்
 இயற்கையோடு இயைந்து வாழ்.
உலகெங்கும் பரவி வரும்பயங்கரவாதத்தை ஒழித்து, உலகில் அமைதியை உருவாக்க வேண்டுமென்றால், காந்திய கருத்துகளையும், கொள்கைகளையும், தத்துவங்களையும், சிந்தனைகளையும், நம்பிக்கைகளையும்உலக மக்கள் கடைபிடிக்கவேண்டும்.
உலக அமைதிக்கு ஒரே வழி காந்தியம் தான். காந்தியத்தைப் போற்றுவோம்; காந்திய வழி நடப்போம்.

நா.பெருமாள்,
மாவட்ட வருவாய் அலுவலர் (பணிநிறைவு)
இ-மெயில் : gomal_44@yahoo.com

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Darmavan - Chennai,இந்தியா

    காந்திய கொள்கை சில பேரிடத்தில்தான் செல்லுபடியாகும்.ஆங்கிலேயனிடத்தில் செய்த காந்தியம் ஜின்னாவிடத்தில் பலிக்கவில்லை

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement