Advertisement

இது உங்கள் இடம்

நேரு செய்த தவறால் அனுபவிக்கிறோம்!

என்.சிவசுந்தரபாரதி, காரைக்குடி, சிவகங்கை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:
'மீண்டும் ஒரு மொழிப் புரட்சிக்கு வித்திட வேண்டாம்' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். 'தமிழக மக்கள் விரும்பும் வரை ஹிந்தி வராது' என, நேரு சொன்ன சொல் இன்று, ஸ்டாலினை பேச வைக்கிறது.
'தமிழகத்தில், நவோதயா பள்ளிகளை திறக்கலாம்' என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 'அதற்கான பணிகளை, மாநில அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்' எனவும் கூறியுள்ளது.
1967க்கு பின், தமிழகத்திற்கு தற்போது தான் விடிவு காலம் கிடைத்துள்ளது.இந்நேரத்தில், ஸ்டாலின் போன்றோர் அரைத்த மாவையே அரைக்கின்றனர். ஹிந்தி கற்றால், தமிழர்கள் என்ன தரம் தாழ்ந்தா போய் விடுவர். தமிழுக்கும், தமிழர்களுக்கும் எதிரானது போல், ஹிந்தி மொழியை இன்றும் பறைசாற்றி, அரசியல் தொழில் செய்கின்றனர், தி.மு.க.,வினர்!

மாநில சுயாட்சிக்கு தடை போட்டது போல், 'மொழி பிரச்னையில், எந்த மாநில அரசும், கட்சிகளும் ஈடுபடக் கூடாது' என்று தடை போட்டு இருந்தால், இன்று மூச்சு விடாமல் கிடப்பர்.
ஸ்டாலின், தன்னை தானே, 'போகோ சேனல் பீம்' போல எண்ணி, எதை எதையோ, தகுதி மீறி பேசுகிறார். இவர் என்ன தமிழக மக்களின் முழுமையான ஏஜென்டா... தமிழகத்தில், மும்மொழித் திட்டத்தை, நேரு அமல்படுத்தியிருந்தால், கழகங்கள், அன்றே தமிழகத்தில் இருந்து காணாமல் போய் இருக்கும்.

நேரு செய்த ஒரு தவறால், தமிழகத்தில் இன்று வரை, பல தவறுகளுக்கு காரணமாகி விட்டதே!

தபால்காரரால்சாதிக்க போகும்சூப்பர் திட்டம்!

பி.மணிசங்கர், தலைவர், தமிழ்நாடு வீடு மற்றும் அடுக்குமாடி கட்டுவோர் சங்கங்கள் கூட்டமைப்பு, சென்னையிலிருந்து எழுதுகிறார்:
இந்திய தபால் துறை, 'பேமண்ட் பேங்க்' என்ற வங்கி சேவையை நடத்தி வருகிறது.ரிசர்வ் வங்கி அனுமதியுடன், வாடிக்கையாளர்கள் அதிகபட்சம், ஒரு லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும்.
நாடு முழுவதும், 2018 மார்ச் முதல், நிதி பரிவர்த்தனைகளை எளிதாக்கும் வகையில் தபால்காரர், மைக்ரோ, ஏ.டி.எம்., சாதனத்துடன் வீட்டுக்கு வீடு வருவார்.அதில், பயோ - மெட்ரிக் ரீடர், பிரின்டர், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ரீடர் உள்ளிட்டவை இணைக்கப்பட்டிருக்கும். இந்த பண பரிவர்த்தனைகளை, வங்கிகள் மூலம் நெறிமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சாதனங்கள், தபால்காரரால், ஒவ்வொரு வீட்டையும் சென்றடையும். சமையல் காஸ், மின்சாரம், மொபைல், டி.டி.எச்., சேவை, பள்ளி கட்டணம் போன்ற, ௧௦க்கும் மேற்பட்ட செலவுகளுக்கு, இந்த சாதனங்கள் மூலம் பணம் செலுத்த முடியும்.இதற்காக, 'மொபைல் ஆப்' உருவாக்கும் நடவடிக்கையும், 'இந்தியா போஸ்ட்' மேற்கொண்டுள்ளது.

இந்த நடவடிக்கை மூலம், வங்கிகள் இல்லாத கிராமங்களில், பண பரிவர்த்தனைகள் எளிதாக மாற்றப்படும்.அது மட்டுமில்லாமல், தபால்காரரின் நேரடி சேவை, நாட்டின் கிராம பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்பதில் ஐயமில்லை.'பேமண்ட் பேங்க்' என்ற தபால் துறையின் வங்கி சேவை, சில ஆண்டுகளில், எட்டு கோடி மக்களை சென்றடையும்.
'பேமண்ட் பேங்க்' தபால் துறையின் மிகப்பெரிய எழுச்சி மட்டும் அல்ல. தபால் துறையின் வருமானத்தை உயர்த்தி, சேவையை மேம்படுத்தும் செயல்திறன் கொண்ட திட்டம்!
கிராமங்களில் உள்ள மக்கள், 'மொபைல் ஆப்' மூலம் பண பரிவர்த்தனை செய்ய பயப்படுவர். அதே நேரம், தபால் காரரின் நம்பகத்தன்மை பணபரிவர்த்தனைகளை எளிதாக அவர்கள் செய்ய இயலும்.கிராம மக்கள், தங்கள் நேரத்தையும், வங்கிக்கு செல்ல ஏற்படும் செலவுகளையும் குறைக்க முடியும்.அரிய இச்சேவை, உடனடியாக கிராம மக்களை சென்றடைய, மத்திய அரசு உதவ வேண்டும்!

குறுக்கு வழியில்வாழ்வு தேடும்திருட்டு உலகம்!

சுப்ர.அனந்தராமன், சென்னையிலிருந்து எழுதுகிறார்:
சென்னை அண்ணா நகரில் பரவலாக, 'ஐ.ஏ.எஸ்., டிரெயினிங் அகாடமி' என்ற பெயரில், ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கான, 'கோச்சிங் சென்டர்'கள் முளைத்துள்ளன.

அவற்றில் சேர, இளம் பட்டதாரி இளைஞர்களும், யுவதிகளும் படையெடுக்கின்றனர். வெளியூர் மாணவியருக்காக, அங்கு மகளிர் விடுதிகள் நடத்தப்படுகின்றன.வீட்டு வசதி வாரியம், முன் கட்டிக் கொடுத்த அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளையே, மகளிர் தங்கும் விடுதிகளாக சிலர் மாற்றி, முறைகேடாக நடத்துகின்றனர்.மாத வாடகையாக, 25 ஆயிரம் ரூபாய் கேட்கின்றனர். 1,200 சதுரடி குடியிருப்பில், 35 இளம் பெண்களை தங்க வைக்கின்றனர்.அந்த வீடுகளில் ரயிலில் உள்ளது போல், மூன்றடுக்கு படுக்கைகளை ஏற்படுத்தியுள்ளனர். ஏ.சி., வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ்., பயிற்சி மாணவியர் அவற்றில் தங்கியுள்ளனர்.

இவர்களுக்கு சாப்பாடு வசதி செய்து தருகின்றனர். அந்த விடுதிக்குள் யாரும் நுழையாத வகையில், காவலர்களையும் நியமித்துள்ளனர்.விடுதி நடத்தும் வியாபாரிகள், உணவு, தங்குமிடம், இவற்றிற்காக, ஒவ்வொரு மாணவியரிடமும், மாதத்திற்கு தலா, 8,500 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கின்றனர்.
ஒவ்வொரு மாதமும், குறைந்தபட்ச மாத கட்டணமாகிய, 8,500 ரூபாய் என, கணக்கிட்டாலும், 35 மாணவியரிடமிருந்தும், ஒவ்வொரு மாதமும், 2.97லட்சம் ரூபாய் கிடைக்கிறது.
இதற்கு எல்லாம், 'பில்' உண்டா, ஜி.எஸ்.டி., வரி உண்டா என்பதெல்லாம் தெரியாது.
அடுக்குமாடி வீட்டு உரிமையாளருக்கு கொடுக்க வேண்டிய மாத வாடகை, 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே!
மீதமுள்ள, 1.95 லட்சம் ரூபாயில், சமையல்காரர், காவலர் மற்றும் மின் கட்டணம் போன்றவற்றிற்கு, 60 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு இருக்காது.விடுதிகளுக்கு, சென்னை மாநகராட்சியின் தலைமை சுகாதார அதிகாரியிடமிருந்து அனுமதி பெறப்பட்டதா... அரசின் சமூக நலத்துறை அதிகாரிகள் பார்வையிடும் வழக்கம் உண்டா என்பது எல்லாம் தெரியாது.

அடுக்குமாடி குடியிருப்பில் ஐந்து பேர் கொண்ட குடும்பம் தங்கினாலே, போர்வெல் வாட்டர், பொது மின் செலவு என, 2,500 ரூபாய் ஆகிறது.விடுதியாக்கி, 35 பேரை தங்க வைத்துள்ளதால், தண்ணீர் அதிகமாக தேவைப்படுகிறது. பராமரிப்பு செலவும் பல மடங்கு கூடுகிறது.
ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல், சம்பாதிப்பதில் குறியாக சிலர் உள்ளனர்; இவர்களை யார் தடுப்பரோ!

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement