Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா பேட்டி: நான் நிதியமைச்சராகவும், வெளியுறவு துறை அமைச்சராகவும் இருந்த போது, பார்லிமென்ட் மீது தாக்குதல் நடந்து, பாகிஸ்தான் மோதல் போக்கை கடைபிடித்தது. அதனால், வெளியுறவு துறையை மட்டும் கவனித்தேன். என் பதவி பிடுங்கப்பட்டதாகவும், நான், 80 வயதில் பதவிக்காக அலைவதாகவும், அருண் ஜெட்லி குற்றம் சாட்டி உள்ளார். இது, என்னை மட்டுமல்ல, எனக்கு பதவி வழங்கிய வாஜ்பாயையும் விமர்சிப்பதாகும்.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
காவிரியில் இன்று தண்ணீர் திறக்கப்பட உள்ளது. ஆனால், சம்பா சாகுபடி ஆயத்தப் பணிக்கு கூட வழியின்றி விவசாயிகள் உள்ளனர். 7,000 கோடி ரூபாய், பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டுறவு சங்கங்கள், பயிர்க்கடன் வழங்கும் பணியை செய்யவில்லை. அவற்றை, அரசு துரிதப்படுத்த வேண்டும்.

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, ஐ.நா.,வில் அளித்துள்ள மனு: 2009ல் நடந்த இலங்கை போரில், 1.50 லட்சம் தமிழர்கள், அந்நாட்டு ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்த இன அழிப்புக்கு காரணமான, அப்போதைய அதிபர் ராஜபக் ஷே, ராணுவ அமைச்சர் மைத்ரி பாலசிறிசேனா ஆகியோரை, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் தண்டிக்க வேண்டும். ஐ.நா.,வின் மேற்பார்வையில், தனி ஈழம் அமைய, பொது ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி: ஜி.எஸ்.டி.,யை அவசர கதியில் நிறைவேற்றி உள்ளதால், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி., வரி விதிப்பால், புதுச்சேரியில் வருவாய் குறைந்து, இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு, தவறான பொருளாதார கொள்கையை மாற்றிக் கொள்ளா விட்டால், பெரும்பாலான மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேட்டி: இந்திய - சீன எல்லையான, 3,488 கி.மீ.,ல், 90 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இரு நாடுகளின் மாறுபட்ட புரிதலால், கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. எல்லை பிரச்னைக்கு, முறையான, நேர்மறையான அணுகுமுறையுடன் தீர்வு காண முடியும். சமீபத்தில், டோக்லாம் எல்லைப் பிரச்னைக்கு, அவ்வாறு தீர்வு காணப்பட்டது.

'நீங்க சொல்ற எதுவுமே நடக்க போறது இல்லை... இது, நல்லா தெரிஞ்சிருந்தும், எதையாவது சொல்லி, உங்க இருப்பை அப்பப்ப பதிவு செய்றீங்களோ...' என, கேட்க தோன்றும் வகையில், வி.சி., தலைவர் திருமாவளவன் பேட்டி:

தமிழகத்தின் புதிய கவர்னராக, பா.ஜ.,வின், ஆதரவாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படாமல், அரசியல் சட்டப்படி, தமிழகத்தின் அரசியல் நிலையற்ற தன்மையை சீர் செய்ய வேண்டும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement