Advertisement

டீ கடை பெஞ்ச்

'ரெய்டு' பீதியில் ஆவணங்களை எரித்த, 'மாஜி'

''நிதி இல்லாம சிரமப்படுதாவ வே...'' என்றபடியே பெஞ்சுக்கு வந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''எல்லாருக்கும் தான் நிதி நெருக்கடி இருக்கு... நீங்க யாரை சொல்றீங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''தமிழகத்துல இருக்கிற கிராம ஊராட்சிகள்ல, குடிநீர் மோட்டார் பராமரிப்பு, குளோரின் வாங்குறதுக்கு கூட பணமில்லாம, ஊழியர்கள் திண்டாடுதாவ வே...
''ஊராட்சிகளுக்கு வர வேண்டிய நிதியை, ஊரக வளர்ச்சி துறை உயர் அதிகாரிகள், வேற பணிகளுக்கு திருப்பி விட்டுடுதாவ...
''ஆனா, பொதுமக்கள், ஊராட்சி ஊழியர்களை தான் வாய்க்கு வந்தபடி திட்டுதாவ... அதனால, ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்துக்காரங்க, வர்ற, 4ம் தேதி, மதுரையில, மாநில நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி விவாதிக்க போறாவ...
''நிதி நெருக்கடி விவகாரத்தை அரசின் கவனத்துக்கு கொண்டு போய், நடவடிக்கை எடுக்காட்டி, கோர்ட்டுக்கு போகவும் திட்டம் போட்டிருக்காவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.
''இடம் மாத்தினதுல, புது பிரச்னை முளைச்சிடுச்சு பா...'' என, அடுத்த விஷயத்திற்கு வந்தார் அன்வர்பாய்.
''யாரை, எங்க இடம் மாத்தினா ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''கடலுார் மாவட்டத்துல, ஒரே இடத்துல, மூணு வருஷமா வேலை பார்த்த போலீசாரை, எஸ்.பி., விஜயகுமார், கட்டாய இடமாற்றம் செஞ்சுட்டு இருக்கார்...
''குறிப்பா, சரியா வேலை செய்யாத போலீசாரின் பட்டியலை, தனிப்பிரிவு போலீசார் மூலமா வாங்கி, அவங்களை, துாரத்துல இருக்கிற ஸ்டேஷன்களுக்கு துாக்கி அடிச்சிடுறாரு பா...
''இது, நல்ல விஷயம் தான்னாலும், கடலுார் சப்-டிவிஷன்ல இருக்கிற, ஆண் போலீசாரின் எண்ணிக்கை குறைஞ்சு, பெண் போலீசாரின் எண்ணிக்கை அதிகமாயிடுச்சு...
''இதனால, சட்டம் - ஒழுங்கு பிரச்னை, ராத்திரி ரோந்து, கைதிகளை அழைச்சிட்டு போறது மாதிரியான வேலைகளுக்கு, வேற சப்-டிவிஷன்ல இருந்து, போலீசாரை அழைக்க வேண்டியிருக்குன்னு, அதிகாரிகள் புலம்புறாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.
''மாட்டிக்க கூடாதுன்னு, தீ வச்சு எரிச்சுட்டாருங்க...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார்
அந்தோணிசாமி.
''யாரு ஓய் அது...'' என்றார் குப்பண்ணா.
''தினகரன் அணியில சேர்ந்து, எம்.எல்.ஏ., பதவியை இழந்த, செந்தில் பாலாஜியின் உறவினர், நண்பர்கள் வீடுகள்ல, வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை நடத்துனாங்களே...
''அதனால, தினகரன் அணியில இருக்கிற மத்தவங்களும் நடுக்கத்துல இருக்காங்க... குறிப்பா, அரூர் தொகுதி, எம்.எல்.ஏ.,வா இருந்த முருகன் ரொம்பவே ஆடிப் போயிட்டாரு வே...
''இவர் வீட்டுலயும், வருமான வரி சோதனை நடக்க போகுதுன்னு தகவல்கள் வந்துச்சு... அதனால, அவர் வீட்டுல இருந்த முக்கியமான ஆவணங்களை, உதவியாளர்கள் எடுத்துட்டு போய், முருகனுக்கு சொந்தமான குடோன் பக்கத்துல போட்டு எரிச்சுட்டாங்க... எரிச்ச தடயம் கூட கிடைச்சுட கூடாதுன்னு, அந்த இடத்துல தண்ணீரை ஊத்தி சுத்தம் செஞ்சுட்டும் போயிட்டாங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.
பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement