Advertisement

மனோபாரதி விடைபெற்றார்...

மனோபாரதி விடைபெற்றார்...


ஒருவரை சந்திக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் விருப்பம் அவரது பெயர் மனோபாரதி வயது 25தான் நெய்வேலியில் இருந்தபடி காகிதம் பதிப்பகத்தை துவங்கி மாற்றுத்திறனாளிகள் எழுதும் படைப்புகளை புத்தகமாக வெளியிட்டு அவர்கள் புகழும் பணமும் பெற காரணமாக இருந்தார்.'ஒருத்தி' ,'ராசாத்தி' என்ற பேசப்பட்ட நுால்களை எழுதிய எழுத்தாளரும் கூட.

நான் சந்தித்த மாற்றுத்திறனாளிகள் பலர் இவரது பெயரை நன்றியுடன் உச்சரிக்ககேட்டு எப்படியும் பார்க்கவேண்டும் என்று முடிவு செய்து அவரைத் தொடர்பு கொண்டேன் ,சென்னை புத்தக கண்காட்சிக்கு வருகிறேன் அப்போது சந்திப்போம் என்றார்

ஆனால் வரவில்லை, அவரே தொடர்பு கொண்டு உடம்புக்கு முடியவில்லை ஆகவே வரவில்லை உங்களைப் போன்றவர்களை 'மிஸ்' பண்ணுவது வருத்தமாக இருக்கிறது என்றார்.
அவருக்கு உடம்புக்கு முடியவில்லை என்பதை ஏதோ காய்ச்சல், உடல்வலியாக இருக்கும் என்று சாதாரணமாக நினைத்திருந்தேன்.இந்த நிலையில்தான் கடந்த வாரம் அவருக்கும் எனக்கும் நண்பரான மாற்றுத்திறனாளி எழுத்தாளரான பழனி ரமேஷ் எனக்கு போன் செய்து 'நெய்வேலி மனோபாரதி இறந்துட்டாருண்ணே' என்றார்.

பெரும் அதிர்ச்சியாக இருந்தது, இறக்கக்கூடிய வயதில்லையே என்ன நடந்தது? என்றபோது, 'மனோபாரதி எல்லாவிஷயத்தையும் தனது முகநுாலில் பதிவு செய்துவிடுவார் தனது பிரிவையும் அப்படியே பதிவு செய்திருக்கிறார்'என்றார் விம்மும் குரலில்
மனோபாரதியின் முகநுாலை தேடிப்படித்தேன்..இதோ அவர் எழுதியது.


விடைபெறுகிறேன்... தற்காலிகமா...? நிரந்தரமா...? என்று தெரியவில்லை...
உடல்நிலை மிகவும் பலவீனமடைகிறது. கண்பார்வை மிகவும் மோசமடைந்துவிட்டது. ஏற்கனவே Alport's Syndrome என்கிற மோசமான மரபணுக் கோளாறால் அவதிப்படும் நான், இப்போது Macular corneal dystrophy (கண் சதைச் சிதைவு) என்கிற விழித்திறன் கோளாறால் கொடுமைப்படுத்தப்படுகிறேன்.

மூன்றே மாதங்களில் காகிதம் பதிப்பகம் Kaakitham Publications-இல் 200 புத்தகங்களை உருவாக்க, கணினி முன்பு அமர்ந்து இரவு பகல் பாராது அளவுக்கு மீறி உழைத்ததற்கு கிடைத்த பரிசு. ஒரே மாதத்தில் 20 கிலோ எடை குறைவு.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவு. உணவை விட மருந்துகளை அதிகளவில் எடுத்துக்கொள்ளும் அவலம். எப்போதும் காதில் செவித்திறன் கூட்டும் கருவி, கண்ணில் கண்ணாடி, அடிக்கடி வலி உண்டாக்கும் மாற்றப்பட்ட சிறுநீரகம் என்று செயற்கையாக வாழும் எனக்கு இது நரக வேதனையே... போதும்??? இதற்கு மேல் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

மருத்துவர்கள் கண் பார்வை மீண்டு வரும் வரை என் கண்களை கணினி, கைப்பேசி, அதிக வெளிச்சத்தில் உட்படுத்த வேண்டாம் என்று கண்டிப்பான முறையில் எச்சரித்துவிட்டனர். இல்லையென்றால், கண்ணில் அறுவை சிகிச்சை செய்தாலும் பார்வையை மீட்டெடுக்க முடியாது என்று. நம் பதிப்பகத்தில் தட்டச்சராக Ramesh N, அட்டைபட வடிவம், உள்பக்க வடிவமைப்பாளராக நான் இருந்தாலும், எங்கள் இருவரைத் தவிர திறமையான பணியாளர்கள் யாருமில்லை. எனவே, காகிதம் பதிப்பகம் பணிகளில் இருந்து விடைபெறுகிறேன்.


மெரினா புக்ஸ்-இல் விற்பனைக்குக் கொடுத்த நூல்களை விரைவில் கணக்குப் பார்த்து அந்தந்த எழுத்தாளர்களிடம் கழிவு சதவீதம் போக தொகை வழங்கப்படும். இவ்வளவு நாட்களாக உழைத்ததில், நோயைத் தான் சம்பாதித்தேன் என்று கூறுவதில் வருத்தமாக இருக்கிறது.
எமது எழுத்தாளர்கள் எனக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் படி தாழ்மையுடன், பாதம் தொட்டுக் கேட்டுக்கொள்கிறேன். அதே சமயம் பலவீனமான என்னை “அப்பாவி” என்று மன்னித்துவிடுங்கள். மீண்டு வருவேனா என்று தெரியவில்லை. மீண்டு வந்தால், உழைப்பேன்... முகநூல், வாட்ஸப், மின்னஞ்சல் என்று எதுவும் பயன்படுத்த இயலாது. இந்த ஓய்வு என் சுயநலத்திற்காக அல்ல... சிகிச்சையின் போது படுத்த படுக்கையாகக் கிடக்கும் போது, நான் வெளியேற்றும் மலத்தையும் சிறுநீரையும் பிடித்து, என்னை எப்போதும் தூய்மையாக வைத்திருக்கும் என் அம்மா என்னை இன்னும் கொஞ்சம் ஆண்டு பார்க்க வேண்டும் என்பதற்காகவே...

-துயரங்களுடன், மனோபாரதி
படித்து முடித்த போது மனம் மிகவும் கனத்தது.கொடுமையான நோய்களைச் சுமந்தபோதும் அந்த சுவடு தெரியாமல் அடுத்தவர்களுக்கு உதவவேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் செயல்பட்ட மனோபாரதி போன்றவர்களை ஏன்தான் காலம் இவ்வளவு சீக்கிரம் அழைத்துக்கொண்டதோ?தெரியவில்லை.

மனோபாரதியைப் பற்றி முழுமையாக அறிந்தவரும் அவரால் வார வாரம் அச்சடிப்பு கட்டணமாக ஐநுாறு ரூபாய் வருமானம் பெற்று அதன்மூலம் தனது வாழ்வை நகர்த்திவந்த ததைதிசை நோயாளியான பழனி ரமேஷ்க்கு உள்ள ஒரே ஆதங்கம் யாராவது காகிதம் பதிப்பகத்தை எடுத்து நடத்தவேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவவேண்டும் என்பதுதான்.
மனோபாரதிக்கு செலுத்தும் அஞ்சலியாக இருக்கும் என்பதுடன் அவரது ஆன்மாவும் இதைத்தான் விரும்பும் ஆகவே இது விஷயம் தெரிந்த யாரேனும் இது குறித்து பேசவிரும்பினால் பழனி ரமேஷை தொடர்பு கொள்ளலாம் எண்:9750474698.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (10)

 • pradeban - goodge street ,யுனைடெட் கிங்டம்

  கண்ணீர் அஞ்சலி ......இறைவனின் பாதங்களில் ஆன்மா இளைப்பாறட்டும்

 • T.Palani - Panruti,இந்தியா

  சென்றதே சரி ..அடுத்த ஜென்மம் உனக்கு வேண்டாம் தம்பி....ஒருவேளை திரும்பி வந்தீன்னா நல்ல ஆரோக்கியமும் அறிவும் செல்வமும் கொண்டு samooga சேவகனாக வா..உன் ஆன்மாவுக்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம்..செல்

 • Thirumalai Ayyathurai - chennai,இந்தியா

  மனோபாரதி சிறந்த எழுத்தாளன் மட்டுமல்ல தலைசிறந்த தமிழன். தமிழ் எழுத்தாளர்கள் தங்களை ஒரு கூண்டுக்குள் அடைத்து வைத்துக் கொண்டு இந்த பரந்த உலகத்தைப் பார்க்க மறுக்கிறார்கள். இவர்களுக்கென்று ஒரு தலைமை இல்லை. அதை உருவாக்கும் இடத்திலும் அவர்கள் இல்லை. ஏன் தமிழ் ஊடகங்கள் அந்தத் தலைமையை உருவாக்கக் கூடாது? சினிமாக்காரர்களை வளர்க்கும் தமிழ் ஊடகங்கள் ஏன் எழுத்தாளர்களை உயர்ந்த இடத்தில் வைக்கக் கூடாது? இவைகளை எல்லாம் தமிழக அரசால் செய்ய முடியாது. ஆனால் எழுத்தாளர் மறைந்தபின்னராவது அவருடைய குடும்பத்துக்கு ஆறுதலாக நிதியுதவி கூட செய்யக்கூடாதா? ஒன்று ஊடகங்கள் தாங்களே முன்வந்து செய்ய வேண்டும். அல்லது ஆளும் அரசையாவது வற்புறுத்த வேண்டும். தமிழிப் புத்தாண்டு விழாவையே சரியான நேரத்தில் நடத்த தவறிய தமிழக அரசைத் தட்டிக் கேட்க முடியாத ஊடகங்களுக்கு இதைத் தட்டிக் கேட்கும் துணிச்சல் மட்டும் எங்கிருந்து வந்துவிடும். தமிழக அரசும், ஊடகங்களும் இணைந்து செயல்பட்டால் தமிழ் எழுத்தாளர்களையும் காப்பாற்றலாம் தமிழையும் காப்பாற்றலாம். இப்போது காப்பாற்றப்பட வேண்டியது மனோபாரதியின் குடும்பம். அதைச் செய்யப் போவது யார்? தமிழக அரசா? தமிழ் ஊடகங்களா? அல்லது இருவரும் சேர்ந்தா? பதில் சொல்லுங்கள் தமிழர்களே பதில் சொல்லுங்கள்

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  கொடுமைடா சாமி. எந்த குறையும் இல்லாமல் கெத்தாக திரியும் நம் போன்றவர்களை எந்தக்கணக்கில் சேர்ப்பது?

 • N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா

  ஆழ்ந்த இரங்கல்கள்...கொடூரமான நோய்களை கொடுத்து ஆண்டவன் அவரை அரவணைத்து கொண்டான் ....

 • vasu - Sydney,ஆஸ்திரேலியா

  முன்னணி (குமுதம், விகடன் ) அரசியல் சார்ந்த பதிப்பகங்கள் கொஞ்சம் முதலீடு செய்யலாமே? தினமலருக்கு நன்றி.

 • S.M.Noohu - Jeddah,சவுதி அரேபியா

  மனோபாரதி எனது முகநூல் நண்பர்..அன்னாரது மறைவு அதிர்ச்சியே அளிக்கிறது. அன்னாரது ஆன்மா சாந்தி அடையட்டும்..ஆழ்ந்த இரங்கல்கள்.

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  இது போன்ற நல்ல உள்ளங்களுக்கு தனியார் மருத்துவமனைகள் ஏன் -தங்களின் பாவங்களை தீர்க்க - சிறந்த சிகிழ்ச்சையை இலவசமாக அளிக்க முன்வர கூடாது?

 • Pillai Rm - nagapattinam,இந்தியா

  ஆழ்ந்த இரங்கல்கள் ....அன்னாரது ஆன்மா சாந்தி அடையட்டும்

 • MaRan - chennai,இந்தியா

  manam kanakirathu iyarkai kodiyavargaliyum kayavargalaiyum vittu ippadi appavigalai viraivil eduthukolgirathu

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement