Advertisement

வரவேற்பது யாரை?

இந்திய நாடு தன் அடிப்படையான உணர்வின்படி, யார் வந்து தங்கினாலும், அவர்களை வாழ வைத்தது என்பது, தலைமுறை தலைமுறையாக உள்ள கலாசார விஷயம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பார்சி மக்கள் வந்து, இன்றளவும் வாழவில்லையா... இஸ்லாமிய ஆட்சி வந்ததும், அதில் சம்பந்தப்பட்ட, சில அடிமை இனமக்கள் இங்கு வந்து ஆட்சி புரியவில்லையா... சிரியன் கிறிஸ்தவர்கள் இங்கு, கேரளாவில் வந்து தங்கவில்லையா...

கடைசியாக, இந்திய - பாக்., பிரிவினையில் வந்தவர்கள், அதற்குப் பின் வங்கதேசத்தில் இருந்து இங்கு வந்து, அசாமில் தங்கி குடியுரிமை, ஓட்டுரிமை பெறவில்லையா... ஐ.நா., கூறும் மனித உரிமைகளைத் தாண்டி, இவர்கள் கவுரவம் பெற்றது வரலாறு. இலங்கைத் தமிழர் குடியேறியதும், அவர்களில் பலர், தங்கள் சொந்த பூமிக்கு திரும்ப விரும்பியதும், இதனுடன் தொடர்பற்றது. அதே போல, பர்மியத் தமிழர்கள் வட சென்னையில் தங்கி வாழ்வது முற்றிலும் வேறு விஷயம்.
ஆனால், மியான்மரில் உள்ள ரோஹிங்யா முஸ்லிம்கள், இந்தியாவில் வந்து அகதிகளாக தங்க, நமது அரசே வரவேற்று ஆதரவு தர வேண்டும் என்று பேசுவது, அடுத்த சர்ச்சையாகி இருக்கிறது.
பிரதமர் மோடி, மியான்மர் பயணம் நடத்தி, அந்நாட்டின் ஜனநாயகத் தலைவரான ஆங்சாங் சூச்சியை சந்தித்து, இரு நாட்டின் வர்த்தகம், போக்குவரத்து வசதியை அதிகப்படுத்த, 1,600 கோடி ரூபாய் வரை தர முன்வந்திருக்கிறார். சீன உறவை, மியான்மர் அதிகம் பின்பற்றாத சூழலை, ஏற்படுத்துவதின் மூலமே நமது, 'கிழக்கிந்திய நாடுகளை நோக்கிய பார்வை' சிறப்புறும்.
அந்நாட்டின் ராக்கைன் மாநிலத்தில், காலம் காலமாக வாழும் ரோஹிங்யா முஸ்லிம் பிரிவினர், அங்குள்ள இனவாத நெருக்கடியால், இதுவரை, 2.5 லட்சம் பேர் அண்டை நாடான வங்கதேசத்திற்கு சென்றுள்ளனர். எல்லையை, 'சீல்' செய்து அகதிகளை தடுக்க, வங்கதேசம் முயற்சிக்கிறது. நமது நாட்டிலும் இவர்கள் புக ஆரம்பித்துள்ளனர். சென்னை அருகே, ஒருசில குடும்பங்கள் குடியேறி உள்ளன. மியான்மரில் இதுவரை இருந்த ராணுவ ஆட்சி, அதற்கு முன் இருந்த பிரிட்டிஷ் ஆட்சி ஆகியவை, இம்மக்களை கொடூரமாக கருதி, யாருக்கும் அடங்காத கொடியவர்கள் என்ற முத்திரை குத்தியிருக்கிறது. இன்று இதுவரை வளர்ச்சி என்பதை அறியாத அம்மக்கள், மியான்மரில் மொத்தம் ஒரு கோடி பேர் உள்ளனர். இவர்களை புத்தமதத் தலைவர்கள் ஆதரவுடன், ராணுவம் அடித்து விரட்டுகிறது. இது மட்டுமல்ல, எண்ணெய் வள இஸ்லாமிய நாடுகள், இந்தோனேஷியா, மலேஷியா ஆகிய நாடுகளும், இந்த முஸ்லிம்களை, தங்கள்
நாட்டில் நுழைய அனுமதிக்க மறுக்கிறது. இந்த நாடுகள் அனைத்தும், ஐக்கிய நாடுகளின் அகதிகள் மறுவாழ்வு உரிமைகளை மதிக்க வில்லை என்று தானே அர்த்தம். அதே போல, நோபல் பரிசு பெற்ற, அதிக சுதந்திர உணர்வு கொண்ட சூச்சி, தன் நாட்டின் புத்தமதத் தலைவர்கள் இனவாத அழிப்பில் ஈடுபடுவதைத் தடுக்காதது ஏன் என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை.
இங்குள்ள, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவோ, 'ரோஹிங்யா, இந்தியா வருவதை வரவேற்கிறார். ஆனால், ஜம்மு - காஷ்மீருக்கு அவர்கள் வரக்கூடாது' என்கிறார். அவர் தந்தை ஷேக் அப்துல்லா செய்த குளறுபடியால், காஷ்மீரில் சொந்த மக்களான,
'பண்டிட்டுகள்' இன்றும் அப்பகுதிக்கு அன்னியர்கள் ஆனதே உண்மை. இந்தியாவில், ரோஹிங்யா பிரிவினர் தங்கினால், காலப்போக்கில், சொந்த மண்ணிற்கு திரும்ப அனுப்புவது தானே நியாயம்? உலகின் பல பகுதிகளில் வாழும் இந்தியர்கள் நுாற்றுக்கணக்கில், இங்கு திரும்பும் காலம் வந்திருக்கிறது. இஸ்லாமிய பயங்கரவாதம் காரணமாக, உலகின் பல பாகங்களில் இருந்து நம்மவர்கள் திரும்புகின்றனர். நமது நிலப்பரப்பை விட அதிக மக்கள் தொகை கொண்ட நமக்கு, இம்மாதிரி அகதிகள் வருகை எப்படி சாதகமாகும்? நமக்கும், மியான்மருக்கும், 1,600 கி.மீ., எல்லை இருப்பதால், வடகிழக்கு மாநிலங்களை அலைக்கழிக்கும் தீவிரவாதிகள், அங்கு ஒளிந்து வாழும் நிலையை, மாற்ற முயற்சிக்கும் சமயத்தில் இப்பிரச்னையும் சேர்ந்திருக்கிறது.
இதை ஆரம்பத்திலேயே சீர்படுத்தாவிட்டால், இவர்கள் தங்குமிடங்களில், தனி உணர்வுகளை ஏற்படுத்தி, சட்டம் - ஒழுங்கு அல்லது கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அதைக் கண்காணிப்பதும் அரசுக்கு கூடுதல் பிரச்னையாகும் அல்லவா?

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement