Advertisement

சொல்கிறார்கள்

பள்ளிக்கு போகாமலே, 'பாஸ்' ஆகும், மாற்று முறை கல்வி குறித்து கூறும், பிரதீப் - பாலகார்த்திகா தம்பதி: இன்றைய கல்வி முறை, மனப்பாடத்தை மட்டுமே ஊக்குவிக்கும் முறையாக மாறி விட்டது. பல பள்ளிகளில் பாடங்களைச் சரிவர நடத்தாமலே, கேள்வி-- பதில்களை மனப்பாடம் செய்து, மதிப்பெண் பெற வைக்கின்றனர்.விளையாட்டு, வேடிக்கை எதுவும், இன்றைய குழந்தைகளின் வாழ்வில் இல்லை. எங்கள் குழந்தைகளை மதிப்பெண் வாங்கும் இயந்திரமாக மாற்ற, நாங்கள் விரும்பவில்லை. எனவே, மத்திய அரசின் மனிதவள துறையின் கீழ் இயங்கும், தன்னாட்சி பெற்ற நிறுவனமான, தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனத்தில் சேர்த்துஉள்ளோம். இங்கு, ஆரம்ப, அடிப்படை கல்வி, 8ம் வகுப்புக்கு சமமானது. உயர்நிலை, மேல்நிலை கல்வியை, வீட்டில் இருந்தவாறே படிக்கலாம். இதில், நமக்கு பிடித்த பாடங்களை தேர்ந்தெடுக்கும் வசதி உள்ளது. 10ம் வகுப்பிலேயே ஆங்கிலம், தமிழ், ஹிந்தி முதலான, 17 மொழிகளில் விருப்பப்பட்ட ஒன்று அல்லது இரண்டு மொழிகளை தேர்வு
செய்யலாம். கணிதம், அறிவியல், பொருளியல், வணிகவியல், ஓவியம், கணக்குப் பதிவியல் போன்ற, 11 பாடங்களில், 3 - 5 வரை தேர்ந்தெடுத்து படிக்கலாம்.மேல்நிலையில் ஒன்பது மொழிகளும், 33 பாடத் துறைகளும் உள்ளன. உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்பில், நம் விருப்பத்திற்கும், ஆர்வத்திற்கும் ஏற்ற வகையில், 5 - 7 பாடங்களில் தேர்வு எழுதலாம்.என் மகனுக்கு கணக்கு, அறிவியலில் மிகவும் ஆர்வம்; வரலாறு என்றாலே வேப்பங்காய். இப்போது அவன் கணிதம், அறிவியலுடன், உளவியல் அல்லது வணிகவியல் படிக்கலாம் என்றதும், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறான்.
அடுத்ததாக, இந்த முறை படிப்பால் நேரம், தாங்கள் விரும்பியவற்றை கற்கும் வசதியும், சுதந்திரமும் இருக்கிறது.இந்திய மெடிக்கல் கவுன்சில், ஐ.ஐ.டி., முதலான பொறியியல் கல்லுாரிகளுக்கான குழுமம், அனைத்துப் பல்கலைக்கழகங்கள் எல்லாவற்றிலும் அங்கீகாரம் பெற்ற அமைப்பு இது. எனவே, இங்கு, 10ம் வகுப்பு முடித்தவர்கள், எந்த மாநிலத்தில் உள்ள பள்ளியிலும், பிளஸ் 1 சேர முடியும்.மேல்நிலைப் படிப்பை முடித்தவர்கள், தாங்கள் தேர்ந்தெடுத்த விருப்ப பாடத்திற்கேற்ப, மருத்துவமோ, பொறியியலோ, வணிகவியல் சார்ந்த படிப்புகளையோ தொடர முடியும். இந்தாண்டு, சென்னையில் இருந்து, ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வில் முதலிடம் பிடித்தவர், தேசிய திறந்தநிலை பள்ளி மாணவர் தான்.தங்கள் பிள்ளைகளுக்கு சமூகத்தில் பழக வாய்ப்பு தர வேண்டியது பெற்றோரின் பொறுப்பு. நான், வீட்டில் இருந்தபடியே செய்யும், 'வெப் - டிசைனிங்' வேலையையும், என் மனைவி, வங்கிப் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றதால், எங்கள் குழந்தைகளை வீட்டில் இருந்தே படிக்க வைக்க முடிவு செய்தோம்.பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்று, தனிமையில் இருக்க நேரும் குழந்தைகளுக்கு, இந்த முறை கொஞ்சம் கடினம் தான். இல்லையெனில், இதற்காக தனி வகுப்புகள் ஏற்பாடு செய்ய நேரிடும்.எங்கள் மூத்த மகள் பள்ளியில், 10ம் வகுப்பு முடித்து, இப்போது வீட்டில் இருந்தே மேல்நிலை வகுப்பைத் தொடர்கிறார். 6ம் வகுப்பை முடித்த இளைய மகனை, நேரடியாக, 10ம் வகுப்பு எழுத, வீட்டிலேயே தயார் செய்து வருகிறோம்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (3)

  • Soundar - Chennai,இந்தியா

    Excellent, we should adopt this methodology so that all money making institutions will vanish and only those that are really educational will survive.

  • SENTHIL NATHAN - DELHI,இந்தியா

    மிக அருமையான திட்டம். சூப்பர் ஐடியா

  • Siva Subramaniam - Coimbatore,இந்தியா

    கல்விக்கட்டணம் அதிகரித்து வரும் நிலையில் இனி இப்படித்தான் இருக்கும்.படிப்பு சொல்லிக்கொடுப்பது ஒரு தர்மம்.ஆனால் இப்போது கொள்ளை ஆகிவிட்டது, ஒரு பணம் ஈட்டும் தொழில் ஆகிவிட்டது.பெற்றோர்கள் நினைத்தால் மட்டுமே இந்த நிலையை மற்ற முடியும். பெங்களுருவில் இந்த முறை பல ஆண்டுகளுக்கு முன்பே வந்து விட்டது. நாடு முழுவதும் வந்தால் கல்வி வியாபார பொருளாக இருப்பது மாறும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement