Advertisement

சொல்கிறார்கள்

பி.ஆர்.பி., என்ற, 'பிளேட்லெட் ரிச் பிளாஸ்மா தெரபி' குறித்து கூறும், சரும மருத்துவர், செல்வி ராஜேந்திரன்: நம் ரத்தத்தில் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்களைப் போலவே, 'பிளேட்லெட்' செல்களும் உள்ளன.சிவப்பணுக்கள் ஆக்சிஜனை எடுத்து செல்லவும், வெள்ளை அணுக்கள், அன்னிய பொருட்கள் உள்ளே வந்தால் எதிர்த்துப் போராடவும், பிளேட்லெட்ஸ் காயங்களை ஆற்றவும், ரத்தம் உறையவும் உதவுகின்றன.பி.ஆர்.பி., சிகிச்சைக்காக, சாதாரண ஊசி வைத்தே நரம்பிலிருந்து குறிப்பிட்ட அளவு ரத்தம் எடுக்கப்படும். குறைந்த அளவு பிளாஸ்மாவிலேயே, நிறைய பிளேட்லெட் இருக்கும்.
பிளேட்லெட் செல்களில் உள்ள, ஆல்பா துகள்களுக்குள் வளர்ச்சிக் காரணிகள் இருக்கும். நம் உடலில் அடிபட்டு, ரத்தம் தொடர்ந்து வெளியேறினால் ஆபத்து. எனவே, அது நிறுத்தப்பட வேண்டும். அதை நிறுத்துவதற்கான காரணிகள், மூளையின் துாண்டுதலின்படி வெளியேற்றப்படும்.
ஆல்பா துகள்களுக்குள் உள்ள வளர்ச்சிக் காரணிகளுக்கு, இந்த செயலில் முக்கிய பங்குண்டு. இதனால், சருமத்தின் செல்கள் புத்துணர்வு பெறும். சருமத்தின் மீள் தன்மைக்கு காரணமான, கொலோஜன் சீராக இருக்கும்; காயம் சீராக ஆறும். இது தான், பி.ஆர்.பி., சிகிச்சையின் அடிப்படை.
சம்பந்தப்பட்ட நபரின் உடலிலிருந்து, ௧௦ - ௫௦ மி.லி., வரை ரத்தம் எடுத்து, மிக மிகச் சுத்தமான சூழலில், ௨௦ - ௨௨ டிகிரி வெப்ப நிலை உள்ள அறையில், 'சென்ட்ரிபியூஸ்' என்ற கருவியில் வைக்கும் போது அடர்த்தியான சிவப்பணுக்கள் அடியில் தங்கும். அதற்கு மேல் வெள்ளையணுக்களும், மஞ்சள் நிற பிளேட்லெட்ஸ் மேல்பகுதிக்கும் வந்துவிடும்.அதை, 'ஆக்டிவேட்' செய்ய கால்சியம் குளோரைடு சேர்க்கப்படும். கூந்தல் உதிர்வு அதிகம் உள்ளவர்களுக்கு, 1 செ.மீ., இடைவெளியில் இது, ஊசியின் மூலம் செலுத்தப்படும். இதே சிகிச்சை, சரும அழகு மற்றும் புத்துணர்வுக்கும் செய்யப்படுகிறது. ரத்தம் செறியூட்டப்பட்ட, ௧௦ நிமிடங்களுக்குள், சருமத்தில் செலுத்தப்பட வேண்டும்.
'அலோபேஷியா அயோட்டா' என்ற வழுக்கை பிரச்னை, தலையில் உள்ள முடிகளை மட்டும் உதிரச் செய்யாமல் புருவம், மீசை, தாடி போன்ற இடங்களிலும் திட்டுத் திட்டாக முடி உதிரும். பி.ஆர்.பி., சிகிச்சை, இதற்கு சிறந்த தீர்வு.மேலும், நாள்பட்ட காயம், பருக்கள், பிரசவத்தின் போது ஏற்படும் தழும்பை நீக்க, பி.ஆர்.பி., ஊசியைச் செலுத்தினால் கொலோஜன் துாண்டப்பட்டு, சருமம் புத்துணர்சி பெறும்; தளர்ச்சியும், சுருக்கமும் மறையும்.இந்த சிகிச்சையால், சருமத்தின் திறந்த துவாரங்கள், பருக்கள், முதுமைத் தோற்றம் தவிர்க்கலாம். மாதம் ஒருமுறை செய்து, இதன் பலனை தக்க வைத்துக் கொள்ளலாம். இதற்கான மருத்துவ செலவு, ௫,000 ரூபாய். நம் ரத்தத்தையே பயன்படுத்திச் செய்யப்படுவதால் பக்க விளைவு இருக்காது.
ஆரோக்கியமான உடல் நிலையில் உள்ள யாரும், இதை செய்து கொள்ளலாம். ஆஸ்பிரின், வலி நிவாரணி மாத்திரை எடுத்து கொள்பவராக இருக்கக் கூடாது. கட்டுப்பாடில்லாத சர்க்கரை நோயாளிகளும் தவிர்க்க வேண்டும்.தொற்றுநோய் இல்லாமல் இருக்க வேண்டும். சிகிச்சை முடிந்ததும், லேசான வீக்கமும், சருமம் சிவந்து போவதும் இருக்கும். ஆனால், ஒரு மணி நேரத்தில் சரியாகி
விடும். மருத்துவமனையில் தங்க தேவை இல்லாத சிகிச்சை இது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement