Advertisement

'பிக் பாஸ்' வீடும், நம் தமிழகமும்!

'இரண்டாம் தர மக்களால் முதல் தரமான நாட்டை அமைக்க முடியாது' என்ற வார்த்தைகளை, எங்கோ படித்த ஞாபகம். நாட்டின் சூழலுக்கு சரியாக பொருந்தும் இந்தப் பொன்மொழியை எங்கு படித்தது, யார் சொன்னது என்பது சரியாக நினைவில் இல்லை. இப்போதைக்கு நமக்கு இரண்டு அரசியல் பிரச்னைகள்... ஒன்று, விஜய், 'டிவி'யில் வரும், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் இடம்பெறும் வீட்டு அரசியல், இன்னொன்று, நம் தமிழக அரசியல். இரண்டுக்கும் என்ன தொடர்பு என்று கேட்டால், கவுண்டமணி சொல்வது போல, 'அது மாம்பழம்; இது வாழப்பழம்; ஆனா, பிரச்னை எல்லாம் ஒண்ணு தான்!' துரோகம், புறம் பேசுவது, தந்திரம், சூது, வஞ்சம், பழிக்குப்பழி, அணி மாறுவது, கூட்டு சேர்வது என, இரண்டுக்கும் பொதுவான காரணங்கள் பல உண்டு.
'டீ கடை அரசியல்' என்ற ஒரு களம் உண்டு. அரசியல் நிலவரங்கள் அனைத்தையும் சூடாக விவாதிக்கும் அந்தக் களத்திலும், 'பிக் பாஸ்' அரசியல் தான் களமாடுகிறது என்றால், இதன் தாக்கம் எந்த அளவில் இருக்கிறது என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.
என்ன செய்தால், மக்கள், 'ட்ரிக்கர்' ஆவர் என்பதை நம்மை வைத்து அரசியல் செய்யும் தந்திரவாதிகள் புரிந்து வைத்துள்ளனர்.
இந்த அரசியல்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் நடுவில், ஆட்டுவிக்கும் பொம்மையாக நாம் நிற்கிறோம் என்பதைப் புரிய வைக்க என்ன, 'டாஸ்க்' கொடுப்பது என்று தெரியவில்லை.
சில ஒப்பீடுகளைப் பார்க்கலாம்...

பிக் பாஸ் வீடு: சண்டையிட்டு விலகி சென்ற உறவுகள் மீண்டும் அன்பைத் தேடி, பழைய உறவைப் புதுப்பிக்க வருகின்றன. அதைக் காணும் நாம், 'பொய்யாக நடிக்காதே...' என, 'டிவி'க்கு
வெளியே இருந்து கூக்குரல் எழுப்புகிறோம்.

தமிழகம்: கட்சி பிரிவு, இணைப்புக்காக சமாதானம், மீண்டும் அதே கட்சியில் ஐக்கியம் என்பன போன்ற பொய்யான உறவு, அரசியலின் போலி கூத்துகளை தொடர்ந்து பார்த்தும், நமக்குச் சம்பந்தம் இல்லாதது போல் சிரித்துக் கடக்கிறோம்.

பிக் பாஸ் வீடு: வந்த சில நாட்களிலேயே வீட்டின் ஆட்சியைக் கைப்பற்றும், 'திடீர் தலைவர்' மீது, சக குடும்ப உறுப்பினர்களுக்கு இல்லாத கோபம், நிகழ்ச்சி பார்க்கும் நமக்கு வருவதால் ஆத்திரம் கொள்கிறோம்.

தமிழகம்: வாரத்திற்கு ஒரு தலைவர், மாதத்திற்கு ஒரு முதல்வர் என, ஒரே ஒரு ஓட்டுப் போட்டு விட்டு, பல, 'திடீர்' முதல்வர்களைப் பார்த்தும், கோபம் கொள்ளவும், கேள்விகள் கேட்கவும் மறுக்கிறோம்.

பிக் பாஸ் வீடு: வீட்டிற்கு தகுதி இல்லாத ஒருவரை சரியாகத் தேர்ந்தெடுத்து வெளியேற்றுகிறோம்; நம் மக்களின் ஓட்டு, சரியாக செல்லுபடியானது இந்த நிகழ்ச்சியில் மட்டுமே!

தமிழகம்: நிஜத்திலோ, ஒரு முறை ஓட்டளித்து பல முறை ஏமாறுகிறோம். நம்மை ஏமாற்றியவர்களுக்கே மீண்டும் வாய்ப்பளிக்கிறோம். மறுபடியும் ஏமாறும் போது எந்தவித சலனமும் இல்லாமல் இருக்கப் பழகுகிறோம்.

பிக் பாஸ் வீடு: போலியாக நடிப்பவரை கழுவி ஊற்றி விட்டு, கோபம், மன்னிப்பு, சந்தோஷம் என, எல்லாவற்றிலும் நேர்மையாக இருக்கும் நபரை தலையில் துாக்கி வைத்து, தலைவியாகக் கொண்டாடுகிறோம்.

தமிழகம்: மனசாட்சிக்கு நேர் எதிராக அத்தனை அரசியல்வாதிகளும் பொய்யாக நடிக்கின்றனர் என தெரிந்தும், கழுவி ஊற்றாமல், அமைதி காக்கிறோம். அதே சிம்மாசனத்தை மறுபடி வழங்குகிறோம்.

பிக் பாஸ் வீடு: வீட்டுக்குள் ஒருவருக்கு இன்னொருவர் செய்யும் துரோகத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் ஆதங்கப்படுகிறோம்.

தமிழகம்: கவுன்சிலர், எம்.எல்.ஏ., முதல்வர் வரை அத்தனை பேரும் நமக்குத் துரோகம் இழைக்கும் போது, மிகவும் இயல்பாக இருக்கிறோம். இன்னும் பல ஒப்பீடுகளை இதனுடன் சேர்த்துச் சொல்லலாம். ஆனால், ஒப்பீடுகளால் எந்த எதிர் விளைவும் ஏற்படப் போவதில்லை. இயக்கு சக்திகளின் நிழலான நிகழ்ச்சியில் நடக்கும் அபத்தங்களையும், அநியாயங்களையும் கண்டு பொங்குவோமே தவிர, நிஜத்தைக் கண்டு பொங்க மாட்டோம்.
குழந்தைகளையும், சிறுவர்களையும் உடன் வைத்து பார்க்கும் நாம், ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்... பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அத்தனை பேரும், நம் ஒவ்வொருவரையும் பிரதிபலிக்கும் பிம்பங்களே தவிர தனிப்பிறவி அல்ல. அவர்கள் செய்யும் தவறுகளைக் காட்டிலும் நாம் அதிகம் செய்கிறோம். நம்மைச் சுற்றி கேமராக்கள் இல்லை. நம் செயல்கள் யாவும் படம் பிடிக்கப்பட்டு யாருக்கும் காட்சிப்படுத்தப் போவதில்லை என்பதற்காக நாம் புனிதர்கள் ஆகி விட முடியாது.

அந்த நிகழ்ச்சி, நம் கலாசாரத்தைச் சீரழிக்கிறதா... சமூகப் பிரச்னைகளில் இருந்து நம்மைத் திசை திருப்புகிறதா... முதுகுக்குப் பின்னால் நடக்கும் அநீதிகளை மறைக்க கண் முன் மாயத் திரையிடுகிறதா... என்ற கேள்விகள் நம்மைச் சுற்றி எழுந்தாலும், தொலைக்காட்சியை விட்டு எழுந்திருப்பதாகத் தெரியவில்லை. இதனால், மாநிலத்தின் வளர்ச்சி கூடியதோ இல்லையோ, தொலைக்காட்சியின், டி.ஆர்.பி., எனப்படும், தொலைக்காட்சியை பார்ப்பவர் எண்ணிக்கை வளர்ச்சி கூடியுள்ளது. பல பிரபலங்கள், பல கேமராக்கள், ஒரே வீட்டில் ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது என்ற காரணத்துக்காக, நிகழ்ச்சியை மெய் மறந்து ரசிக்கிற அதே சமயம், பல அரசியல் பிரபலங்கள், கேமராக்களின் முன் நடித்து விட்டு, ஓடியும், ஒளிந்தும் கொண்டிருக்கின்றனர். இந்த இடைப்பட்ட காலத்தில் எத்தனையோ உரிமைகள் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டும், மறுக்கப்பட்டும், மீண்டும் மீண்டும், முதுகில் குத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம்.நமக்கான உரிமைகளை தற்காத்து கொள்ள தயாராக இல்லாமல்,
இன்னொருவர் ஆட்டுவிக்கும் கைப்பாவையாக இருக்கிறோம்.
'எப்படி சிந்திக்க வேண்டும் என்பதை அறிந்தவர்களுக்கு ஆசிரியர்கள் தேவையில்லை' என, சொன்ன மஹாத்மாவின் வார்த்தைகளை மனதிற்குள் வாங்கி, சரியாகச் சிந்தித்துச் செயல்படும் நேரமிது.

பிக் பாஸ் வீட்டைப் பார்க்க வேண்டாமென்று சொல்லவில்லை... அதே பார்வையுடன், தமிழகத்தையும் கொஞ்சம் பார்த்தால் நன்றாக இருக்கும்.

மனோ
சமூகநல விரும்பி
m.manored@gmail.com

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

  • Rangiem N Annamalai - bangalore,இந்தியா

    உண்மை .மக்கள் அறிவில் மலடு ஆகி விட்டார்கள் என்பதின் உச்ச கட்டம் இந்த பிக் பாஸ் .

  • Sulikki - Pudukkottai,இந்தியா

    வீட்டிற்கு தகுதி இல்லாத ஒருவரை சரியாகத் தேர்ந்தெடுத்து வெளியேற்றுகிறோம் நம் மக்களின் ஓட்டு, சரியாக செல்லுபடியானது இந்த நிகழ்ச்சியில் மட்டுமே இதே போல் ஆட்சியை அகற்ற, மந்திரிகளை அகற்ற, MLA க்களை அகற்ற, அதிகாரிகளை அகற்ற ஒட்டு போடும் வசதியையும், நடைமுறையையும் மக்களுக்கு அளித்துவிட்டு, பிறகு மக்களை குறை சொன்னால் பரவாயில்லை.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement