Advertisement

டீ கடை பெஞ்ச்

மின் வாரியத்தில் லஞ்ச அதிகாரிகள் நடுக்கம்!''மாவட்டச் செயலர் பதவியை பறிக்க, ரெட்டை குழல் துப்பாக்கியா களம் இறங்கியிருக்கா ஓய்...'' என்றபடி, பெஞ்சில் இடம் பிடித்தார் குப்பண்ணா.
''எந்த கட்சி விவகாரம் பா...'' என கேட்டார் அன்வர்பாய்.''ஈரோட்டுல, தி.மு.க., அமைச்ச மேடையில, எம்.ஜி.ஆர்., சிலையை, அ.தி.மு.க.,காரா வச்சிருக்காளோல்லியோ... இதையே காரணம் காட்டி, தெற்கு மாவட்ட, தி.மு.க., செயலர் முத்துசாமியின் பதவியை பறிக்க, 'மாஜி' அமைச்சர் ராஜா முயற்சி பண்ணிண்டு இருக்கார் ஓய்...
''இவரோட உதவியாளர் காஞ்சி குமார், சமீபத்துல சில ஒன்றிய செயலர்களை, போன்ல கூப்பிட்டு, 'மாவட்ட செயலர் மேல நம்பிக்கை இல்லைன்னு தீர்மானம் போடுங்கோ'ன்னு சொல்லியிருக்கார்... அதுக்கு பலர் ஒத்துக்கலை ஓய்....
''ராஜாவின் முயற்சிக்கு, முன்னாள் பெண் அமைச்சர் ஒருத்தரும் பக்க துணையா இருக்காங்கன்னு சொல்றா ஓய்...'' என்ற குப்பண்ணா, அவ்வழியே சென்ற சிறுமியை பார்த்து, ''சுப்புலட்சுமி, ஆத்துல தோப்பனார் எல்லாம் சவுக்கியமா...'' என, நலம் விசாரித்தார்.
''ஆய்வுன்னு, மாசம், ௨௦ ஆயிரம் ரூபாய் வசூல் பண்றாங்க...'' என, அடுத்த விஷயத்திற்கு வந்தார் அந்தோணிசாமி.
''எந்த துறையில வே...'' என்றார் அண்ணாச்சி.
''மதுரை மாவட்டத்துல, ௧,௩87 கூட்டுறவு சங்க ரேஷன் கடைகள் இருக்குங்க... இந்த கடைகள்ல, ௧௦௦ சதவீத ஆய்வுங்கிற பேர்ல, உணவு வழங்கல் மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள், மாசம் ஒரு முறை ஆய்வு செய்றாங்க...
''இப்ப, 'பாயின்ட் ஆப் சேல்' கருவிகள் குடுத்துட்டதால, ரேஷன் பொருள் கடத்தல் குறைஞ்சிடுச்சு... ரேஷன் கடை ஊழியர்களால பெருசா முறைகேடு செய்ய முடியலைங்க...
''ஆனாலும், ஆய்வுக்கு போறவங்க, எதையாவது குத்தம், குறை சொல்லி, கடைக்கு, 20 ஆயிரம் ரூபாயை கறந்துடுறாங்க... இதனால,
விற்பனையாளர்கள் புலம்பிட்டு இருக்காங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.
''மின் வாரிய அதிகாரிகள் எல்லாம் கதிகலங்கி போயிருக்காவ வே...'' என, கடைசி
விஷயத்திற்கு வந்தார் அண்ணாச்சி.''அவங்களுக்கு என்ன பிரச்னைங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''மின் வாரியத்துல, விஜிலென்ஸ், டி.ஜி.பி., யா இருக்கிற மகேந்திரன், மின் திருட்டு தடுப்பு ஆய்வை முடுக்கி விட்டிருக்காரு வே...''லஞ்சம் வாங்குற பொறியாளர்களை, தீவிரமா கண்காணிக்க ஏற்பாடு செஞ்சிருக்காரு... மூணு வருஷத்துக்கு மேலா, ஒரே இடத்துல, பெஞ்ச தேய்ச்சிட்டு இருக்குறவங்களை இடமாற்றம் செய்ய, பரிந்துரை
பண்ணியிருக்காரு வே...''இதை எல்லாம், வாரிய தலைவர், சாய்குமாரும் உடனே அமல்படுத்த உத்தரவு போடுதாரு... இதனால, லஞ்ச, ஊழல் அதிகாரிகள் நடுக்கத்துல இருக்காவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.
''லஞ்சம்ன்னதும் நினைவுக்கு வருது... சென்னை, கலெக்டர் ஆபீசுல, நில மோசடியில ஒரு பெண் அதிகாரி ஈடுபடுறாங்கன்னு நேத்து பேசினோமில்லீங்களா... அந்தம்மா
மேலே ஒரு தப்பும் இல்லையாம்... ''தனியா செயல்பட அதிகாரமே இல்லாத நேரத்துல, எப்படி ஊழல் செய்ய முடியும்... யாரோ காழ்ப்புணர்ச்சியில, இவங்களைப் பத்தி வேணுமின்னே புகார் கொடுக்கறாங்கன்னு சொல்றாங்க... நம்புவோம்...'' என்றார்
அந்தோணிசாமி.அப்போது, பெரியவர்கள் நாளிதழ்களை புரட்ட, பெஞ்ச் அமைதியானது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement