Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'குறைகளை மட்டுமே கவனத்தில் கொண்டால், மற்ற பணிகளை எப்படி செய்வீங்க... 'பிராக்டிக்கல்' விஷயங்களை யோசிக்க ஆரம்பிங்க...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி பேட்டி: தமிழக அரசில், ஆளும் கட்சியில், 19 எம்.எல்.ஏ.,க்கள் விலகிக் கொள்வதாகக் கடிதம் அளித்தும், நடவடிக்கை எடுக்காதவர் கவர்னர். கவர்னரை சந்திப்பதில், ஸ்டாலினும் நாடகம் ஆடுகிறார். ஆளும் கட்சி நிலவரம் குறித்து, கவர்னரிடம் பா.ம.க.,வும் மனு அளிக்கும். அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகள் மீதும் மக்கள் கோபத்தில் உள்ளனர். எந்த தகுதியும் இல்லாத முதல்வர், தமிழகத்தில் ஆட்சி செய்கிறார்.



'மாநில சுயாட்சி பத்திப் பேசியே, உங்க மதிப்பை நீங்க குறைச்சிக்கிறீங்களோன்னு தோணுது... நாட்டைப் பிரிக்கும் கருத்தெல்லாம் இப்போதைக்கு எடுபடாதுங்கறதை நீங்க இன்னும் புரிஞ்சுக்கலியே...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேட்டி
: 'நீட்' போராட்டத்துக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. 'அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும்' என, தான் கூறியது. ஆனால், போராட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக, தமிழக அரசு கூறி, திருச்சியில், தி.மு.க., நடத்திய கூட்டத்துக்குத் தடை விதித்ததை, வன்மையாகக் கண்டிக்கிறேன். 'நீட்' தேர்வு, சமூக நீதியைச் சிதைக்கும்; மாநில சுயாட்சிக்கு வைக்கும், முதல் வேட்டு இது.




அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை பேச்சு: மத்திய அரசுடன், 18 ஆண்டு காலம் கூட்டணியில் இருந்த, தி.மு.க., தமிழர்களுக்கும், தமிழ் சமுதாயத்தை காக்கும் வகையிலும் செய்தது என்ன? காவிரி, கச்சத்தீவு, இலங்கை தமிழர், பாலாறு என, தமிழகத்தில் நிலவி வரும் எல்லா பிரச்னைகளுக்கும், தி.மு.க., தான் காரணம். ஆனால், தமிழர்களுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் போராடும் இயக்கம், அ.தி.மு.க., இதை யாராலும் அழிக்க முடியாது.

த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி
: 'நீட்' தேர்வை ரத்து செய்தால் நல்லது; ரத்து இல்லை என்றால், 'நீட்' போன்ற போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், மாணவர்களுக்கு கற்று கொடுக்க வேண்டும். மாணவர்கள் கல்வித்தரம் உயர, அரசு உரிய கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும். அதைவிடுத்து, 'நீட்' தேர்வு நிலையை, அரசியலாக்கக் கூடாது.



'உலகம் யாரை ஏற்றுக் கொள்ளாதுன்னு சொல்றதை ஒத்துக்கலாம்... கடைசியா ஒண்ணு சொல்லி இருக்கீங்களே... அந்த பாயின்ட் தாங்க உதைக்குது...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், தமிழக முதல்வர் பழனிசாமி பேச்சு:
எட்டாத கனிக்கு ஆசைப்பட்டு ஏப்பம் விடுபவர்கள், ஆசையை மட்டும் மனதில் வளர்த்துக் கொள்வதால், எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை. 'வானத்தை வில்லாக வளைப்பேன்; பூமியை பந்தாக உதைப்பேன்; கடலை ஒரே மூச்சில் குடிப்பேன்' என்றெல்லாம் வாய் ஜம்பம் பேசுபவர்களை, இந்த உலகம் ஏற்றுக் கொள்ளாது. பேச்சை குறைத்து, செயலில் இறங்கி இருக்கும் எங்களை பார்த்தாவது, அவர்கள் திருந்த வேண்டும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement