Advertisement

எதற்கு இந்த ஸ்டிரைக்?

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஸ்டிரைக்கானது, அவர்கள் அறிவித்த வேகத்தில் இல்லை. தலைமை செயலகம் செயல்பட்டிருக்கிறது. ஆனால், சில மாவட்டத் தலைநகரங்களில் ஸ்டிரைக்கின் செயல் வேகம் காணப்பட்டது.

ஸ்டிரைக்கை வலியுறுத்திய, 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பு நிர்வாகிகள், தலைமை செயலகத்தில் அரசுடன் ஏற்கனவே பேச்சு நடத்தினர். கடைசியாக, இந்த அமைப்பில் உள்ள பெரும் பகுதியினர், ஸ்டிரைக்கை ஆதரிக்கவில்லை. அதே சமயம் இடதுசாரி தொழிற்சங்கங்கள், 7 லட்சம் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருப்பதாக அறிவித்திருக்கின்றன.

தலைமை செயலக பணியாளர் சங்கத் தலைவர் கணேசனும், ஆசிரியர் சங்க பிரதிநிதியான பி.கே.இளமாறனும், இந்த ஸ்டிரைக்கை ஒத்திவைக்க முடிவு செய்து அறிவித்தது, ஐகோர்ட் இடைக்கால முடிவை முன்னதாகவே எடுக்க நினைக்கலாம். இவர்கள் ஆதரவு சங்கங்களை கணக்கில் எடுத்தால், 20க்கும் மேற்பட்டவை உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று, தமிழகம் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளில், ஓரளவு கை நிறைய பணிப்பாதுகாப்புடன், சம்பாதிக்கும் இவர்களது ஸ்டிரைக் எதற்கு என்ற கேள்வி எழும். ஒவ்வொரு ஜனநாயக குடிமகனும் தன் உரிமைக்காக போராடலாம் என்பது பொது விதி.

'அரசின் அத்தியாவசியப் பணிகளை முடக்கும் வகையில், அரசு ஊழியர்கள் செயல்படுவது சரியல்ல என்றும், 'ஸ்டிரைக்' மிரட்டல் வேண்டாம்' என்றும் ஐகோர்ட்டின் மதுரைக் கிளை அளித்த இடைக்கால முடிவு குறித்து, இவர்கள் இனி ஆலோசித்து எடுக்கும் முடிவானது, அரசியல் கட்சிகள் பேச்சுக்களை பிரதிபலிக்காமல் இருந்தால் சரி. தற்போது, ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

அரசு நிர்வாகத்தில், அதன் ஊழியர்கள் என்றும் நிலைத்திருப்பவர்கள். அரசியல்வாதிகள் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் மட்டுமே. அரசு முடிவுகளை அமல்படுத்தும் இவர்களில் சிலர், சமீபகாலங்களில் லஞ்சத்தை ஊக்குவிப்பதில் முனைப்பாக இருந்ததும் உண்டு.

மாதச்சம்பளம், மற்ற வசதிகள், பென்ஷன் ஆகியவை, அரசின் நிதி ஆதாரத்தில் இருந்து பெருமளவு செலவழிக்கப்படுகிறது. அரசின் நிதி ஆதாரம் வற்றியிருப்பது, இதன் தலைவர்களுக்கு தெரியாதா? இந்த ஸ்டிரைக்கை ஆதரிக்கும் கட்சிகள், இவர்களுக்கு கூடுதலாக தரவேண்டிய நிதி ஆதாரத்தை அரசு ஈட்டுவதற்கு சரியான வழி சொன்னால் நல்லது.

ஆசிரியர் என்றதும், முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் அல்லது டாக்டர் அப்துல்கலாம் ஆகியோர் அடைந்த மாண்பைக் கூட அறியாத ஆசிரியர் கூட்டம் உருவாகியது துரதிர்ஷ்டம்.படிக்கும் மாணவ மாணவியரின் ஆழ்மனதில் புகுந்து தடம் பதிக்கும் வகையில், மொழி, இலக்கணம், அறிவியல், கணிதம், தத்துவம், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகியவற்றை கற்றுத் தரும் ஆசிரியர்கள், அவர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக பாடம் கற்றுத் தருகின்றனரா என்ற கேள்வியை, இப்போது அறிஞர்கள் எழுப்புகின்றனர்.

ஏனெனில், பி.எட்., பட்டப்படிப்பு மற்றும் பிஎச்.டி., ஆகியவை, ஆசிரியர்களை கற்றுத் தரும் இயந்திரமாக மாற்றுகிறதே தவிர, படைப்பாற்றலை பரப்பும், சக்தியாக காட்டவில்லை என்பதும், இப்போது எழும் வாதம்.ஆசிரியர்களுக்கு, அவர்களது அதிக திறமையால் கிடைக்க வேண்டிய சமூக மதிப்பும், மரியாதையும் குறைந்து விட்டது. குடும்பம், தாய், தந்தை, ஆசான் என்ற முக்கியத்துவத்தை தொலைத்து விட்டோம். இன்று அதிக மன அழுத்தம், தற்கொலை அதிகரிக்கும் இளைஞர் கொண்ட சமுதாயமாக மாற்றி விட்டோம்.

வேலைவாய்ப்பு அதிகரிக்காத நிலையில், மக்கள் அடிப்படைத் தேவைகளை அரசு கண்டறிந்து, அதற்கு முன்னுரிமை தர வேண்டிய சூழ்நிலையில், அரசுக்கு உடனே, 'கெடு' வைத்து நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைப்பது பேஷனாக மாறிவிட்டது.

இன்று தலைமைச் செயலக நடவடிக்கை முடிவுகள், கல்வித்துறை மற்றும் அரசு உத்தரவுகள் ஆகிய எல்லாவற்றையும் உடனடியாக அலசும் வழிமுறைகள் வந்திருக்கின்றன.அதில் பலர் அடிப்படை பிரச்னைகளுக்கான தீர்வு அல்லது இக்கோரிக்கைகளால் ஏற்படும் நிதிச்சுமை, அல்லது அடுத்த ஐந்து ஆண்டுகளில் அரசின் வருவாய்க்கு ஏற்ப சம்பந்தப்பட்ட துறைகள் பாதிப்பின்றி செயல்படுமா என்பதை ஆராய வேண்டும்.

பல்வேறு அரசியல் கட்சிகளில் உள்ள, அதிகம் படித்த நிதி அறிஞர்கள் இம்மாதிரி விஷயங்களில் சாதக பாதகங்களை பேசினால், அது அர்த்தமுள்ள விவாதங்களை எழுப்பும். மாறாக, அதிரடியாக, நீதிமான்கள் கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்து, அரசு நிர்வாகம் குலையாமல் இருக்க உதவ வேண்டிய காலம் ஆகிவிட்டது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement