Advertisement

டீ கடை பெஞ்ச்

ஆவணங்களை சுரண்டிய பெண் அதிகாரி!

''மன்னிப்பு கேட்டுண்டார் ஓய்...'' என, முதல் ஆளாய் தகவல் சொல்லத் துவங்கினார் குப்பண்ணா.
''யாரு மன்னிப்பு கேட்டாரு பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.
''மின் துறை அமைச்சர் தங்கமணியைச் சொல்றேன்... சமீபத்துல, மின் வாரிய அலுவலகத்துல, மீட்டிங் ஒண்ணுத்துக்கு ஏற்பாடு செஞ்சார் தங்கமணி... கார்த்தால, 11:30 மணிக்கு வரதா சொன்னவர், வரவே இல்லே... கூட்டமே நடக்காது போலிருக்குன்னு அதிகாரிகள் கிளம்பத் தயாரானா...
''திடீர்ன்னு, மாலை, 4:30 மணிக்கு, அமைச்சர் ஆஜராகிட்டார்... ராத்திரி, 7:15 மணி வரைக்கும் வேலை பார்த்தார்... தாமதமா வந்ததுக்கு, மன்னிப்பும் கேட்டுண்டார் ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''அது சரி... தாமதத்துக்கு என்ன காரணமாம்...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.
''தினகரன் அணிலேர்ந்து, 'ஜக்'குன்னு ஒருத்தர், பழனி அணிக்கு தாவினாரோல்லியோ...'' என, குப்பண்ணா கூறிக் கொண்டிருக்கும் போதே, நண்பர்கள், 'புரிந்தது' என, தலையாட்டினர்.
''தி.மு.க., கூட்டணி கட்சிகளின் பிரசாரத்திற்கு பதிலடி கொடுக்க, பா.ஜ., அதிரடியாக இறங்கிட்டு வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் பெரியசாமி அண்ணாச்சி.
''விளக்கமா சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''நீட் தேர்வுக்கு எதிரா, தமிழகம் முழுவதும், தி.மு.க., கூட்டணி கட்சிகள் பிரசாரம் நடத்த திட்டமிட்டிருக்குல்லா... அதை முறியடிக்க, தமிழக, பா.ஜ., மேலிட உத்தரவுப்படி, கட்சிக்காரங்களை எல்லாம், போஸ்டர் ஒட்ட சொல்லியிருக்காவ...
''அதாவது, 'லட்சுமியை வைத்து, சரஸ்வதியை வளைக்க, நினைப்பவர்களுக்கு மரண அடி கொடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு, 2 சதவீதம் சீட் அதிகமாக கிடைத்ததை எதிர்ப்பது தான் உண்மையான சமூக நீதியா...' போன்ற வாசகங்களை கொண்ட போஸ்டர்களை ஒட்டி, பதிலடி கொடுத்திருக்காவ வே...'' என, விளக்கினார் பெரியசாமி அண்ணாச்சி.
''ஆவணங்களை சுரண்டி அரசு நிலங்களை தாரை வார்க்குறாங்க...'' என, கடைசி தகவலை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''எந்த துறையில பா...'' என்றார் அன்வர்பாய்.
''அரசு நிலங்களை, நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டியது வருவாய் துறை பொறுப்புங்க... ஆனா, சென்னை கலெக்டர் அலுவலகத்துல ஒரு பெண் அதிகாரி, நில மோசடியில ரொம்ப ஆட்டம் போடுறாங்க...
''சென்னையில, அமைந்தகரை, மாம்பலம் போன்ற இடங்கள்ல இருக்கும் அரசு நிலங்களின் விபரங்களை, பி.எல்.ஆர்., பதிவேட்டில் திருத்தி, தனியாருக்கு தாரை வார்க்குறாங்க...
''இதுல அதிர்ச்சி அடைஞ்ச வருவாய்துறை அலுவலர்கள் சங்கம், இது பத்தி முழு ஆதாரங்களோட துறை செயலர்களுக்கு புகார் அனுப்பிடுச்சு... இந்த புகார் அடிப்படையில அந்த பெண் அதிகாரி மேல நடவடிக்கை எடுக்க, மேலதிகாரிங்க தயாராகிட்டு இருக்காங்க...
''வேலியே பயிரை மேய்வது போல், வருவாய் துறை அதிகாரியே நில மோசடி செஞ்சா என்ன செய்யிறதுன்னு மத்த அதிகாரிங்க புலம்புறாங்க...'' என்றார் அந்தோணிசாமி. அலுவலகத்திலிருந்து,'ஸ்கூட்டி'யில் வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம், ''என்ன நிர்மலாம்மா... புது வண்டி வாங்கி இருக்கீயளோ...'' என விசாரித்தார் அண்ணாச்சி.
நண்பர்கள் நாயரிடமிருந்து டீயை வாங்கிக் கொண்டனர்!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement