Advertisement

சொல்கிறார்கள்

பெண்கள் ஒற்றுமையால்வீடு மட்டுமல்ல;நாடும் முன்னேறும்!


மருமகள், மகளுடன் இணைந்து, சென்னையில், வாகனங்களுக்கு தேவையான பியூல் பைப் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருவது குறித்து கூறும், மாமியார் மங்கையர்கரசி: இந்த கம்பெனியை என் கணவர், ௧௯௬௫ல் ஆரம்பித்தார். அப்போது, 'எலக்ட்ரோ பிளைட்' தான் செய்தோம். பின், வாகனங்களுக்குத் தேவையான உதிரிபாகங்களை தயாரிக்க ஆரம்பித்தோம்.சிறிய தவறு நேர்ந்தாலும், மொத்தமாக நஷ்டம் ஏற்பட்டு விடும். நானும், என் கணவரும் கவனமாக இருந்தோம். அதனால், இந்த பிசினசில் எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. உடல்நலமின்றி என் கணவர் திடீரென இறந்துவிட்டார். அவரின், ௧௧ம் நாள் காரியம் முடிந்து, ஆபீசுக்கு வந்தால், மருத்துவச் செலவுகளால் ஏற்பட்ட கடன் உள்ளிட்ட எக்கச்சக்க பணப் பிரச்னைகள் இருந்தன.
காலையில் கம்பெனி வந்தால், இரவு, ௧௦:௦௦ மணி வரையில் வேலை. எவ்வளவோ போராடி சமாளித்தேன். அதன் பின், என் மகன் எனக்கு உதவியாக வந்தான். அடுத்து, என் மருமகள், மகள் இருவரும் வந்து, என் வேலைப்பளுவை குறைத்து விட்டனர். தற்போது, இரண்டு கம்பெனிகள் நடத்தி, கிட்டத்தட்ட, ௧௩௦ பேருக்கு வேலை தந்திருக்கிறோம்.
மருமகள் ரஞ்சனி: கம்பெனியின் நிர்வாகம், பைனான்ஸ் உள்ளிட்டவற்றை, நான் கவனித்து வருகிறேன். ஆனால், அத்தனையும் சொல்லிக் கொடுத்தது, என் மாமியார் தான். வீட்டிலும், கம்பெனியிலும் மட்டுமல்ல, வெளியில் போகும் போது கூட, நாங்கள் மூன்று பேரும் எப்போதும் ஒற்றுமையாகவே இருப்போம்.பெண்கள் ஒற்றுமையாக இருந்து விட்டால், எவ்வளவு பெரிய விஷயத்தையும் சுலபமாக சாதிக்கலாம். எங்களிடம் வேலைப் பார்ப்பவர்களிடம் நண்பர்களைப் போல் இருப்போம். இதனால், அனைத்து வேலைகளும் எளிதாக நடக்கிறது. இங்கு, ஆண்களுக்கு இணையாக பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலைவாய்ப்புத் தந்திருக்கிறோம்.மகள் சங்கீதா: எங்கள் மூவருக்குள்ளும், 'ஈகோ' கிடையாது. அது மட்டும் தான் எங்கள் வெற்றிக்கு காரணம். மற்றபடி, நான் சிறுவயதிலிருந்தே இங்கு அடிக்கடி வந்து செல்வதால், இந்த தொழில் பற்றி நன்கு தெரியும்.எங்களுடைய, இரண்டு கம்பெனிகளுக்கும் என்னென்ன பொருட்கள் தேவை, அவற்றை உடனடியாக வாங்குவது உள்ளிட்ட விஷயங்களை, நான் கவனித்துக் கொள்கிறேன். 'குவாலிட்டி'யில் ஒருபோதும் குறை ஏற்படாதவாறு மிகவும் கவனமாக இருக்கிறோம். பெண்கள் ஒற்றுமையாக இருந்தால் வீடு மட்டுமல்ல; நாடும் முன்னேறும்.உடம்பை, 'பிட்'டாகவைத்திருந்தால்சந்தோஷம் ஓடிவரும்!

இப்போது, 62 வயதிலும், 26க்கான புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கான ரகசியத்தை கூறும், சேலத்தைச் சேர்ந்த, வசந்தகுமாரிரத்தினவேலு:பி.எஸ்சி., - எம்.ஏ., பட்டதாரி நான், காதல் திருமணம் செய்து கொண்டேன். கணவருக்குப் புள்ளியியல் துறையில் வேலை கிடைக்க, சென்னை வந்தோம். மகன், மகள் பிறந்தனர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மாநில நிர்வாகக் குழு பொறுப்பு வகித்த நான், எப்போதும் சமூகப் பிரச்னைகளுக்காக போராடி வருவேன். ௧௯௮௧ல், மாஸ்கோ பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டதும் நல்ல அனுபவம். சில காரணங்களுக்காக, சென்னையிலிருந்து மீண்டும் சேலத்துக்கே குடி வந்தோம்.மகளுக்கு திருமணமான புதிதில், இரண்டு குடும்பத்தாரும் சுற்றுலா சென்றபோது, கார் விபத்துக்குள்ளானது. ஆறு பேர் உயிரை வாங்கிய அந்த விபத்தில், மகள், மருமகனை இழந்தோம்.அந்த சம்பவத்துக்குப் பின், பொது வாழ்வில் இருந்து என்னை விடுவித்து, தனிமைக்குள் போனேன். தினம் தினம் அழுதாலும் மனம் ஆறவில்லை. என் மகனின் பிள்ளைகள் தான், அதிலிருந்து என்னை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டு வந்தனர்.
சில ஆண்டுகளுக்கு முன், ஓசூர் பகுதியில் கல்பனா சுமதி என்ற இளம்பெண், போலீசாரால் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, இறந்து விட்டதாக நினைத்துப் புதரில் வீசப்பட்டார். மாடு மேய்த்தவர்கள், முனகல் சத்தம் கேட்டு, என்னிடம் சொல்ல, அந்தப் பெண்ணை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினேன்.மிரட்டல், நெருக்கடிகளை எதிர்கொண்டு, குற்றவாளிகளுக்கு எதிராகப் பல கட்ட போராட்டங்கள் நடத்தி, தண்டனை பெற்றுக் கொடுத்தேன். சமூக பிரச்னைகளுக்குப் போராடிய காரணத்துக்காக, பலமுறை சிறைவாசம் அனுபவித்த நான், சிறந்த சமூக சேவைக்கான விருதுகளையும் பெற்றுள்ளேன்.
ஆண்டுக்கு மூன்று முறை, இமயமலைக்குச் சுற்றுலா செல்வேன். ரிஷிகேஷுக்கு மேலே பயணிக்கும்போது, 'திரும்பி வருவோம்' என்ற உத்தரவாதமே கிடையாது. மேலும், வசதியானவர்களால் மட்டும் தான் சந்தோஷமாக இருக்க முடியும் என்ற எண்ணம் தவறு. உடம்பை, 'பிட்'டாக வைத்துக் கொண்டால் போதும்; சந்தோஷம் தானாக ஓடிவரும். 62 வயதிலும் நான், ௨௬ வயது பெண் மாதிரி தான், மனதை புத்துணர்ச்சியாக வைத்துள்ளேன்.
அதிகாலை, ௪:௩௦ மணிக்கு எழுந்து, ௨௦ நிமிட யோகாவுக்கு பின், ஸ்கூட்டியில் ஏற்காடு மலை அடிவாரம் சென்று, மலைப்பாதையில், ௩ கி.மீ., வாக்கிங். வீடு திரும்பியதும், மருமகளுக்கு உதவுவேன். பேரன், பேத்தியைப் பள்ளிக்கு அனுப்பி, மகன், மருமகளுக்கு மதிய உணவு கட்டி கொடுப்பது என, காலை, ௧௦:௦௦ மணி வரை பம்பரமாக சுழல்வேன்.
அப்புறம் பேப்பர் படித்து, என் வேலைகளை முடித்து, பகல், ௧௨:௦௦ மணிக்கு மேல் கட்சிக் கூட்டங்கள் இருந்தால் கலந்து கொள்வேன். பிற்பகல், ௨:௩௦ மணியில் இருந்து, மாலை, ௪:௦௦ மணி வரை, இடியே விழுந்தாலும், சேரை விட்டு எழ மாட்டேன். எனக்குப் பிடித்த புத்தகங்களை படிக்கும் நேரம் அது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement