Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'உறுப்பினர் சேர்க்குறது மட்டும் பெரிய விஷயமில்லை; ஆரோக்கியமான திட்டங்களைச் செயல்படுத்துற நல்ல தலைவர்கள் இருந்தால் தான், ஆட்சி அமைக்க வசதியாக இருக்கும்... அதுக்கு இப்போதைக்கு உங்க கட்சியில சாத்தியமில்லைன்னு தோணுது...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், தமிழக, காங்., தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி: தி.மு.க., - அ.தி.மு.க., போன்ற ஒரு கட்டமைப்பை, காங்., கட்சிக்குள் உருவாக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தலைவராக நான் பதவியேற்ற, 10 மாதங்களில், ௨௫ லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்த்துள்ளோம். அடுத்து, காமராஜர் பிறந்த நாளுக்குள், ௫௦ லட்சம் உறுப்பினர்களை இணைக்க முடிவெடுத்துள்ளோம். தமிழகத்தில், காமராஜர் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்பது தான், காங்., தொண்டரின் விருப்பம்.அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் பேட்டி: தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின்,
இன்னும் கனவுகளிலேயே வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். இது, அம்மாவின் ஆட்சி. ஐந்து ஆண்டுகள் நிலைக்க வேண்டும் என்ற எண்ணம், அனைவருக்கும் பொதுவானது. முதல்வரை மாற்ற வேண்டும் என்ற நிலைப்பாடு, விரைவில் மாறுபடும் என்று நம்புகிறோம்.அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., - எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் பேட்டி:
முதல்வர், துணை முதல்வர் இணைந்து கூட்டும் பொதுக்குழுவை, 'செல்லாது' என்பதற்கு, தினகரன் யார்... இதற்கு முன் எங்கே இருந்தார்... கட்சியில், என்ன பொறுப்பில் இருந்தார்... அவசர காலத்தில், ஒரு அமைப்பாளர் தலைமையில் குழு கூடி, பொதுக்குழு நடத்த தீர்மானிக்கலாம். ஒரு அங்கீகாரமும் இல்லாதவர், இப்பொதுக்குழுவை செல்லாது என்பது, முறையற்ற பேச்சு.'பா.ஜ., மாநிலத் தலைவர், தமிழிசை சண்டைக்கு வரப் போறாங்க...' எனச் சொல்லிச் சிரிக்கத் தோன்றும் வகையில், அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்துள்ள, முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பேட்டி:
தமிழகத்தில் இன்று வேண்டுமானால், பா.ஜ., பெரிய கட்சியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், மோடி பிரதமராக வந்தது முதல், எப்படி உலக நாடுகள் மத்தியில், அவருக்கு மரியாதை பெருகியுள்ளதோ, அதுபோலவே தமிழகத்திலும், மோடி மீதான மரியாதை அதிகரித்து வருகிறது. அது, பா.ஜ.,வையும், நாளுக்கு நாள் வளர்த்து வருகிறது.
'தி.மு.க.,வுல கூட, யாரோ ஒருத்தர், தலைவர் பதவி தனக்கு வேணும்ன்னு ஆசைப்பட்டதா, ஒரு முறை தகவல் கசிஞ்சிச்சு... அதைப் பத்தி நீங்க என்ன சொல்றீங்க...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் பேட்டி
:அ.தி.மு.க.,வுக்குள் நிகழும் பிரச்னைகள், முழுக்க முழுக்க உட்கட்சி சண்டை; அதுவும் பதவிச் சண்டை. பதவி மீது இவ்வளவு மோகம் கொண்டவர்களாக இவர்கள் இருந்திருப்பதே, ஒரு வகையில் வியப்பு தான். ஏனெனில், ஜெயலலிதா, ஒருநாள், 'மந்திரி' என்பார்; மறுநாள், 'எந்திரி' என்பார். அவர், 'மந்திரி' என்றாலும், 'எந்திரி' என்றாலும், அவரின் பாதம் பணிந்து இவர்கள் இருந்தனர்.

தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி:
உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ.,வுடன், அ.தி.மு.க., கூட்டணி வைப்பது தொடர்பான பேச்சு நடக்கிறதா என்று தெரியாது. ஆனால், அப்படி நடந்தால், அதில் தவறேதும் இல்லை. இந்தியாவை வல்லரசு நாடாக ஆக்க வேண்டும் என்று தான், பிரதமர் மோடி போராடி வருகிறார்; அவரை ஏன், குறுகிய மனப்பான்மையுடன் பார்க்க வேண்டும். அவர்கள் எந்த தவறையும் செய்யவில்லையே!
'ஆங்... அப்டீங்களா... உங்க வீட்டு மாப்ளை எப்படி இருக்காரு... சவுக்கியங்களா...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், காங்., துணை தலைவர் ராகுல் பேச்சு
: பிரதமர் மோடி தலைமையிலான அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஒட்டுமொத்தமாக தோல்வி அடைந்துள்ளது. இந்த நடவடிக்கையால், இந்திய திருடர்களின் கறுப்புப் பணம் வெள்ளையாக மாறியது, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தெரியும். ௯௦ சதவீத கறுப்புப் பணம் ரியல் எஸ்டேட்டிலும், தங்கத்திலும் தான் உள்ளது என்ற உண்மை, இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும்.
'பார்த்துப் பேசுங்க... நீங்க பேசுறது, கே.பி.முனுசாமி, செம்மலை காதுல விழுந்துடப் போகுது...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி:
அ.தி.மு.க.,வில் பிளவே இல்லை; கருத்து வேறுபாடு தான் உள்ளது. இதில், எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்து, அரசுக்கு அவப்பெயரை உண்டாக்கி, ஆட்சியை கவிழ்க்க பார்க்கின்றனர். குறிப்பாக, தி.மு.க.,வினர் முயற்சித்து வருகின்றனர். தி.மு.க.,வில் ஸ்டாலின், கனிமொழி, அழகிரி ஆகியோரிடத்தில் கருத்து வேறுபாடு இல்லையா?
'நீங்க சொல்றது உங்களுக்குப் புரிகிறதா... பாவம் ரசிகர்கள்... குழம்பிடப் போறாங்க...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், நடிகர் கமல், 'டுவிட்டரில்' கருத்து பதிவு:
நாம் தான், நீதித்துறையை உருவாக்கினோம். அதைப் பயன்படுத்திக் கொள்வதுடன், சரி செய்ய வேண்டும்; அது, நம்மால் முடியும். அதை விடுத்து, நீதித்துறையை அவமதிப்பதோ, திட்டுவதோ கூடாது. நம் அரசியல் சட்டம், அனைத்து விவாதங்களையும் எதிர்கொள்ளும் வகையில் ஆரோக்கியமானது. எனவே, அதைக் கொண்டு வாருங்கள்.
'எங்கேங்க சூழ்ச்சி எல்லாம் செய்யிறது... அதை யோசிக்கவே அவங்களுக்கு நேரம் இல்லியே... எதிராளி செய்யிற சூழ்ச்சியை முறியடிக்கிறதுல தானே மும்முரமா இருக்காங்க...' எனக் கூறத் தோன்றும் வகையில், தி.மு.க., அமைப்புச் செயலரும், ராஜ்யசபா, எம்.பி.,யுமான, ஆர்.எஸ்.பாரதி பேட்டி
:அ.தி.மு.க., உட்கட்சி பிரச்னை, கட்சி பெயர், இரட்டை இலை சின்னம் முடக்கம் போன்றவற்றால், முதல்வர் பழனிசாமி அரசு மீது, தமிழக மக்கள் கடும் வெறுப்பில் உள்ளனர். எனவே, எப்போது, எந்த தேர்தல் நடந்தாலும், தி.மு.க., அமோக வெற்றி பெறும். இது தெரிந்து தான், தேர்தலை தள்ளி வைக்க, அ.தி.மு.க.,வினர் சூழ்ச்சி செய்கின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement