Advertisement

அக்கம் பக்கம்

'யாரடித்தாரோ...!'


'நம்ம நாற்காலிக்கும் ஆபத்து வந்து விடுமோ' என, கலக்கத்தில் ஆழ்ந்துள்ளார், மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி.இவரது பயத்துக்கு காரணம், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது தான். ராஜ்யசபாவில், ஆளும் கட்சி வரிசையில், அமைச்சர்களுக்கு தான், முன்வரிசை, 'சீட்' ஒதுக்கப்படும்.அடுத்தபடியாக, முக்கிய கட்சிகளின், ராஜ்யசபா தலைவர்களுக்கும், முன்வரிசையில் சீட் ஒதுக்கப்படும். மற்ற, எம்.பி.,க்களுக்கு எல்லாம், அடுத்தடுத்த வரிசையில் உள்ள சீட்கள் ஒதுக்கப்படும்.தற்போது, அமித் ஷா, ராஜ்யசபா எம்.பி.,யாகி உள்ளதால், விதிமுறைப்படி, அவருக்கு, பின்வரிசையில் தான் சீட் ஒதுக்க வேண்டும். ஆனால், பா.ஜ.,வின் தலைவர் என்பதால், அவருக்கு பின்வரிசையில் சீட் ஒதுக்குவதை, கட்சி மேலிடம் விரும்பவில்லை.
என்ன செய்வது என தெரியாமல், கையை பிசைந்து கொண்டிருந்த, பா.ஜ., தலைவர்களுக்கு, திடீர் ஐடியா உருவாகியுள்ளது.தற்போது, ராஜ்யசபாவில், பா.ஜ., தலைவராக இருப்பது, அருண் ஜெட்லி. அவரிடமிருந்து, அந்த பதவியை பறித்து, அமித் ஷாவிடம் கொடுப்பது தான், அந்த ஐடியா.இதன்மூலம், ராஜ்யசபாவில், அமித் ஷாவை, முன் வரிசையில் அமர வைக்க முடியும். இந்த தகவல், அரசல் புரசலாக, ஜெட்லிக்கு கசிந்து, அவருக்கு கண்கள் குளமாகி விட்டன.'பார்லிமென்ட்டின் அடுத்த கூட்டத் தொடர், நவம்பரில் தான் நடக்கவுள்ளது. அதற்குள், மனதை தேற்றிக் கொள்ள வேண்டியது தான்' என்ற மனநிலையில் உள்ளார், ஜெட்லி.


'பதவி போச்சே!'


சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவை மாற்றத்தால், பதவியை இழந்தவர்கள், சோகத்தில் மூழ்கியிருந்தாலும், ராஜிவ் பிரதாப் ரூடி தான், பெரும் சோகத்தில்
மூழ்கியுள்ளார்.பா.ஜ.,வின் மூத்த தலைவர்களில், இவரும் ஒருவர்; பிரதமர் மோடியின் அன்பை பெற்றவர். இதனால், மோடி அமைச்சரவையில், முக்கியத்துவம் வாய்ந்த, திறன் மேம்பாட்டு துறை, இவருக்கு வழங்கப்பட்டது.
பிரதமர் மோடி அறிவித்த, பல முக்கிய திட்டங்கள் எல்லாம், திறன் மேம்பாட்டு துறையின் கட்டுப்பாட்டில் தான் வருகின்றன. ஆனால், 'இந்த துறையில், ரூடியின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை' என, புகார் எழுந்தது.
இதனால், கடுப்பான, பிரதமர் மோடி, இது குறித்து விசாரிக்கும்படி, பா.ஜ., தலைவர் அமித் ஷாவுக்கு உத்தரவிட்டார்.சமீபத்தில், ரூடியை அழைத்த அமித் ஷா, 'உங்கள் துறையில், இதுவரை நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், சாதனைகளின் பட்டியலை எடுத்து வாருங்கள்' என,
உத்தரவிட்டார்.பட்டியலுடன் சென்றவருக்கு, கடும் அர்ச்சனை விழுந்தது. தொங்கிய முகத்துடன் திரும்பிய ரூடி, தன் சொந்த மாநிலமான, பீஹாருக்கு சென்று, பதவியை காப்பாற்றுவதற்காக, சிறப்பு யாகங்கள் நடத்தினார்.அவரது யாகங்கள், பலன் அளிக்கவில்லை. அமைச்சரவை மாற்றத்தில், ரூடியின் தலை உருண்டது. இதனால், 'கட்சி தலைவர்களிடம் நல்ல பெயர் எடுக்க, என்ன செய்வது' என, தன்னை சந்திக்க வருவோரிடம் எல்லாம், யோசனை கேட்கும் படலத்தை துவங்கியுள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement