Advertisement

பக்க வாத்தியம்

சசியை மறைத்த தினகரன் ஆதரவாளர்கள்

அ.தி.மு.க.,வின், தினகரன் அணி திருச்சி மாவட்டச் செயலர்களாக நியமிக்கப்பட்ட சீனிவாசன், மனோகரன், ராஜசேகரன் ஆகியோர், ஆக., 31 காலை, திருச்சி நீதிமன்றம் அருகேயுள்ள, எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை போட ஆதரவாளர்களுடன் வந்தனர்.எம்.ஜி.ஆர்., சிலை அருகே, தினகரன் மற்றும் ஜெயலலிதா படம் மட்டும் வைக்கப்பட்டிருந்தன; சசிகலாவின் படம் வைக்கப்படவில்லை. மாவட்டச் செயலர்கள் மாலை அணிவித்தபோது, ஜெ., படம் தட்டி விடப்பட்டு, தினகரன் படம் மட்டும், எம்.ஜி.ஆர்., சிலை பீடத்தின் கீழே, படிக்கட்டில் தொங்கிக் கொண்டிருந்தது.இதைப் பார்த்த சசிகலா ஆதரவாளர்கள், 'சசிகலா பேரைச் சொல்லி, 'பவருக்கு' வர நினைக்கும் தினகரன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், சசிகலா படத்தை பயன்படுத்தாமல், அரசியல் செய்ததை, அவருடைய ஆதரவாளர்களும் பின்பற்றுகின்றனர்... 'மாத்து' இருக்கு இவங்களுக்கு...' என, ஆத்திரப்பட்டுக் கிளம்பிச்சென்றனர்.

வாரியாரை அன்பால் அணைத்த பெரியவர்

மதுரையில், 'அனுஷத்தின் அனுக்கிரஹம்' சார்பில், 'மகா பெரியவா மகிமை' எனும் தலைப்பில் நிர்வாகி நெல்லை பாலு பேசுகையில், 'காஞ்சி பெரியவரை பார்க்க, திருமுருக கிருபானந்த வாரியார் காஞ்சிபுரம் வந்தார். மடத்துக்குள் நுழைந்ததும், 'பொடேர்' என பெரியவர் காலில் விழுந்தார் வாரியார்; கடும் கோபம் கொண்டார் பெரியவர்.'ஏன் அவருக்குக் கோபம் வந்தது என, மட நிர்வாகிகளிடம் வாரியார் கேட்டார். வேறொன்றும் இல்லை. கழுத்தில் நீங்கள் சிவலிங்கம் அணிந்திருக்கிறீர்கள். நீங்கள் அவர் காலில் விழுந்த போது, லிங்கமும் கீழே பட்டது. தன் காலில் லிங்கம் விழுந்தது போல், பெரியவர் கோபம் கொண்டார்' என விளக்கம் அளித்தனர்'
என்றார்.'பிறரிடம் கோபம் கொண்டு விட்டோமே என எண்ணிய பெரியவர், தன் கோபத்தின் நியாயம் குறித்து அழகாக விளக்கம் அளித்து, வாரியாரை அன்பால் வாரி அணைத்து விட்டாரே...' என, பக்தர்கள் பரவசமடைந்தனர்.


இப்போதைய கவலை இது தான்!

எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவையொட்டி, மரக்கன்றுகள் நடும் விழா, வேலுார், மேல்மொணவூர், ஐ.டி.ஐ., வளாகத்தில், சமீபத்தில் நடந்தது. கலெக்டர், எஸ்.ஏ.ராமன் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக அமைச்சர், கே.சி.வீரமணி பங்கேற்று, மரக்கன்றுகளை நட்டார். பின் அவர், நிருபர்களிடம் கூறுகையில், 'முதல்வர் பழனிசாமியை, கட்சி பொறுப்பிலிருந்து நீக்கும் அதிகாரம், தினகரனுக்கு இல்லை. அவரது தலையில் ஏறியிருக்கும் பித்தத்தை தெளிய வைக்க, லாரிகளில் தான் எலுமிச்சம் பழங்களை அனுப்பி வைக்க வேண்டும்' என்றார்.
ஒரு நிருபர், அ.தி.மு.க.,வில் இருந்த, வேலுார் முன்னாள் மேயர் கார்த்தியாயினி, பா.ஜ.,வில் சேர்ந்தது குறித்து கேட்டதற்கு, 'அதை விட்டுத் தள்ளுங்கள். இப்போது, இங்கிருப்பவர்களை எப்படி மேய்ப்பது என்பது தான், எனக்கு கவலையாக இருக்கு' என்றார்.
இதைக் கேட்ட பொதுஜனம் ஒருவர், 'அ.தி.மு.க.,வுல, 'பவர் சென்டர்' மாறின பிறகு கூட, தொண்டர்களை ஆடு, மாடுகளுக்கு ஒப்பிட்டு, அமைச்சர் வீரமணி பேசுவதை கவனிச்சீங்களா...' என, தன் பங்குக்குக் கொளுத்தி போட்டு, அங்கிருந்து நடையை கட்டினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement