Advertisement

டீ கடை பெஞ்ச்

ரிசார்ட், 'பில்' 30 லட்சம் ரூபாய்!

''ஆளுக்கொரு போராட்டம் பத்தி, ஆவேசமா பேசியிருக்காங்க...'' என, மெது வடையை மென்றபடியே, முதல்
தகவலைத் துவக்கினார் அந்தோணிசாமி.''யாரை சொல்லுதீரு...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.
''நீட் தேர்வு விவகாரம் சம்பந்தமா, தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்துல, ஸ்டாலின் தலைமையில, அனைத்து கட்சிகள் ஆலோசனை
கூட்டம் நடந்துச்சே...
''இதுல பேசினவங்க, தொடர் ரயில் மறியல், பஸ் மறியல், 'பந்த்' போராட்டம், டில்லியில உண்ணாவிரதம், ஜனாதிபதியை சந்திச்சு பேசலாம்னு, ஆளுக்கொரு கருத்தை ஆவேசமா தெரிவிச்சிருக்காங்க...
''எல்லாத்தையும் பொறுமையா கேட்ட ஸ்டாலின், 'மாணவர்கள் படிப்பு, பொதுமக்களை பாதிக்கிற எந்த போராட்டமும் வேண்டாம்... கண்டன பொது கூட்டம் நடத்தி, மத்திய அரசுக்கு நம் பலத்தை காட்டுவோம்'னு
சொல்லிட்டாருங்க...''இதை எல்லாரும் ஒருமனசா ஏத்துக்கிட்டு தான், திருச்சியில, பொதுக்கூட்டம் நடத்தி முடிச்சிருக்காங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''நேர்மையான அதிகாரிகளையும், லஞ்சம் வாங்க வச்சுடுவா போலிருக்கு ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு வந்தார்
குப்பண்ணா.''யாரை சொல்றீங்க பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.''மாவட்டந்
தோறும், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை, அரசு சார்புல கொண்டாடிண்டு இருக்காளோல்லியோ... இதுக்கு ஒவ்வொரு, வி.ஏ.ஓ.,வும், தலா, ௨௫ பேரை அழைச்சுண்டு வரணும்னு சொல்றா ஓய்...
''சத்துணவு அமைப்பாளர்கள், குடும்பத்தோட வரணும்... அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள்,
மாணவர்கள் கட்டாயம் விழாவுக்கு வந்தாகணும்கறா ஓய்...''இந்த மாதிரி, எல்லா துறை அதிகாரிகளுக்கும், 'டார்க்கெட்' நிர்ணயிச்சு, அவா அவா அழைச்சுண்டு வர்றவாளுக்கு, சாப்பாட்டு செலவையும் ஏத்துக்க சொல்றா... லஞ்ச அதிகாரிகள், இதை சுலபமா எடுத்துக்கறா... நேர்மையான அதிகாரிகள் தான் பாவம், திணறிண்டு இருக்கா ஓய்...'' என, முடித்தார்
குப்பண்ணா.''சரக்கு போட்டீங்களா அல்லது சரக்குலயே குளிச்சீங்களான்னு கேட்டாரு வே...'' என, கடைசி தகவலைக் கூறிச் சிரிக்கத் துவங்கினார் அண்ணாச்சி.
''யாரை, யார் கேட்டாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.''புதுச்சேரி சொகுசு விடுதியில் தங்கியிருந்த தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், மது குடித்து, கும்மாளமிட்டாவல்லா... அதுக்கு, ௩௦.௪ லட்சம் ரூபாய், 'பில்' குடுத்தாவ...
''அதைப் பார்த்துட்டு, தினகரனுக்கு, கண்ணு வெளியே வராத குறையாயிடிச்சு... கூடவே, 'பில்'லை சரிபார்க்கவும் சொல்லி இருக்காரு வே...'' என்றார்
அண்ணாச்சி.
''அந்த டீட்டெய்லு எங்கிட்டே இருக்குங்க...'' என்ற அந்தோணிசாமி, தொடர்ந்தார்...''கடந்த, 22ம் தேதிலேர்ந்து, 25 வரை, விண்ட் பிளவர் ஓட்டல் கட்டணம், 5 லட்சம்... 25 முதல், 27 வரை, சன்வே மேனர் ஓட்டல் கட்டணம், 7 லட்சம்... 27 முதல் முந்தா நாளு வரை, 18
லட்சத்து, 40 ஆயிரம் ரூபாய் வந்திருக்குங்க...''இந்த செலவு இல்லாம, எம்.எல்.ஏ.,க்களுக்கு தலைக்கு, 7 கோடி ரூபாய் பேசி, ரெண்டோ மூணோ கொடுத்ததா தகவல்... தினகரன் கிட்ட துட்டு வாங்கிட்டு, பழனிசாமிக்கு
ஆதரவு தெரிவிச்ச, எம்.எல்.ஏ.,க்கள் காட்டில் தான் அடை மழைங்க...'' என, அந்தோணிசாமி கூறி முடிக்க, சிரித்தபடியே, நண்பர்கள் நடையைக் கட்டினர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    இவ்வளோ காசு புழக்கம் எல்லோருக்கும் தெரியும்போது வருமான வரிக்கு தெரியவில்லையா? தெரிந்தும் சும்மா இருக்காவளா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement