Advertisement

'டவுட்' தனபாலு

வி.சி., தலைவர் திருமாவளவன்: திராவிட இயக்கங்களை அழிக்க திட்டமிடும், பா.ஜ.,வின் சதியை முறியடிக்க வேண்டும்.


டவுட் தனபாலு: திராவிடக் கட்சிகள், கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் அளிப்பதில்லை... தங்களைத் தவிர, மற்ற கட்சிகள் வளர்ந்துவிடக் கூடாது என்ற நோக்கம் தான், இதற்குக் காரணம்னு சொல்லித்தானே, மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கினீங்க... இதை மறந்துட்டீங்களா... நீங்க செய்தால் உயரிய நோக்கம்; அடுத்தவர் செய்தால் சதியா என்பது தான், என்னோட, 'டவுட்!'

தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர்:
மத்தியில் உள்ள, பா.ஜ., அரசு அகற்றப்பட வேண்டும். மத்தியில் ராகுல் தலைமையிலும், தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலும் ஆட்சி அமைய வேண்டும். அதற்கு, காங்., துணை நிற்கும்.



டவுட் தனபாலு: 'லோக்சபா தேர்தலில் நீங்க எங்களை ஆதரியுங்கள்; சட்டசபை தேர்தலில் நாங்க ஆதரிக்கிறோம்'னு, தி.மு.க.,வுக்கு கோரிக்கை வைக்குறீங்களா... நிபந்தனை விதிக்குறீங்களா... கடந்த லோக்சபா தேர்தலில், ஒரு மாநிலக் கட்சி அளவுக்கு கூட சாதிக்க முடியாத நீங்க, ராகுலை வைத்து இவ்வளவு பெரிய கனவைக் காண்பது எடுபடுமாங்கறது, 'டவுட்' தான்...!



தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்:
'ஒவ்வொரு இந்தியன் கணக்கிலும், 15 லட்சம் ரூபாய் போடும் அளவுக்கு, வெளிநாடுகளில் கறுப்புப் பணம் பதுக்கப்பட்டு இருக்கிறது. ஆட்சிக்கு வந்தால், அதை வெளிக்கொண்டு வருவேன்' என, மோடி சொன்னதை, திரித்து பேசி வருகின்றனர்.



டவுட் தனபாலு: ரொம்ப லாவகமா பேசுறீங்க... 'தலைக்கு, 15 லட்சம் ரூபாய் போடும் அளவுக்கு பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை, எப்போ மீட்கப் போறீங்க... அதான் ஆட்சிக்கு வந்து, மூணு வருஷம் ஆச்சே... மீதமுள்ள ஆட்சிக்காலத்தில், சொன்னதில் கொஞ்சமும் குறையாத அளவுக்கு மீட்டெடுத்து விடுவீங்களா'ன்னு, யாரும், 'டவுட்' எழுப்பினால், 'நிச்சயமாக'ன்னு உங்களால சொல்ல முடியுமா...!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement