Advertisement

யாருக்கு தான் மனவேதனை இல்லை?

தமிழகத்தில், 'நீட்' தேர்வை எதிர்த்து கடுமையான போராட்டம் நடத்திய, சுமை துாக்கும் கூலித்தொழிலாளியின் மகள் அனிதாவின் அவசரப்பட்ட முடிவு, மிகவும் துயரமான சம்பவம்.
மாணவ மாணவியர் ஜல்லிக்கட்டுக்காக நடத்திய போராட்டம், அதற்கு பின், பல்வேறு விஷயங்களில், அவர்கள், சமூக ஊடகங்களில் ஆட்சியாளர்களை வறுத்தெடுக்கும் நிலை வளர்ந்த இக்காலத்தில், அனிதா ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பதை யூகிக்கக்கூட முடியவில்லை. எல்லாருக்கும் சமமான கல்வி கிடைக்க, தமிழகத்தில் வாய்ப்பை உருவாக்காத போது, எப்படி சமமான போட்டியை மையமாக்கிய, 'நீட்' தேர்வு இருக்கலாம் என்ற அனிதாவின் ஆதங்கம் அர்த்தமுள்ளது. இதை, பெரும்பாலான மாணவர்கள் அல்லது வருமானம் குறைந்த வருவாய் பிரிவினர் காரணமாகக் கூறி, இம்மாதிரி துயர முடிவை எடுத்த சம்பவம் இல்லை.
மாறாக, பொறியியல் பட்டதாரிகள் சிலர் வேறு வழியின்றி, தாங்கள் படித்ததிற்கு சிறிதும் சம்பந்தமில்லாத சிறிய வேலைகளில், குறைந்த சம்பளத்தில் பணியாற்றுவது உள்ளது.
மேலும், மிகக் குறைந்த எண்ணிக்கையில் சிலர், 'லேப் - டாப்' திருட்டு அல்லது சில தொடர் திருட்டுகளில் சிக்கும் போது, நாம் அடிப்படைக் கல்வி தந்து, வளமான சமுதாயத்தை உருவாக்க தவறி விட்டோமோ என, எண்ணத் தோன்றுகிறது.
அனிதாவின் மரணத்தை, இப்போது அரசியலாக்குவதில் அர்த்தம் இல்லை. இச்சம்பவத் தாக்கத்தால், 'ப்ளூ வேல்' அபாயத்தில் தற்கொலை செய்து கொள்ளும் இளைஞர்கள் குறித்த பாதிப்பு அதிகம் விவாதிக்கப்படவில்லை.
ஆனால், இம்மாதிரி விஷயங்களில், அரசு உடனடியாக பொறுப்பேற்க வேண்டும் என்றால், நீட் தேர்வை எதிர்காலத்தில் சமாளிக்க முன்னேற்பாடுகளை, கல்வித் துறை எடுத்த நடவடிக்கைகள் அனிதாவுக்கு தெரிந்ததா, அது குறித்து, அவர் முடிவு என்ன என்பது தெரியவில்லை.
அவரது குடும்பத்தில், நல்ல விஷயஞானம் கைவரப் பெற்றவராக இருந்ததை, அவர் வெளிப்படுத்திய கருத்துக்கள் தெரிவிக்கின்றன.
தவிரவும், அரியலுார் மாவட்டத்தில் சில நடப்புகளை அறிந்தவர்கள், அம்மாவட்ட மக்கள் பின்தங்கியவர்கள் என, கருத முடியாது. ஜாதி, மத பேதம் அதிகமில்லாத மாவட்டம். சிறிய உணவுக்கடைகள் அல்லது மளிகைக் கடைகளின் உரிமையாளர்களில் பலர், பட்டப்படிப்புக்கு மேல் படித்த ஆண், பெண் அதிகம் கொண்ட இடம் என்பது, அங்குள்ள சிறப்பாகும்.
அரசு பணி அல்லது அரசு சலுகைகளுக்காக ஏங்கும் மக்கள் தொகை அதிகம் இல்லாத பகுதி என்பதை பிரதிபலிக்கும் விதமாக, 'அனிதாவும் தன் சகோதரர்களிடம், அதிக மதிப்பெண் எடுத்து, அரசு சலுகையில் மருத்துவம் படிப்பேன்' எனக்கூறிய தகவல் கவனிக்கத்தக்கது.
அனிதா திடீர் மரணத்தை, தமிழகத்தில் எவரும் கொச்சைப்படுத்த முயலமாட்டார்கள். ஆனால், அதிக கல்வி, பயிலும் போது ஏற்றத்தாழ்வுகள் இம்மாதிரியான முடிவை எடுக்கத் துாண்டுகிறதோ என்பதை ஆராய வேண்டும். பிளஸ் 2 படிப்பை முடிக்கும், ஆண், பெண் இருபாலரும், மன அழுத்தத்தில் சிக்காமல் இருக்கின்றனரா, அவர்களுடைய நட்பு வட்டம் எப்படி என்பதை, பெற்றோர், சிறிது கவனம் காட்டினால் ஒழிய இப்பிரச்னை ஓயாது.
அனிதாவின் குடும்பத்திற்கு, இப்போது தாராள நன்கொடை தரும் கட்சிகள், குறைந்தபட்சம், தங்கள் வட்டாரக் கட்சியின் ஆலோசனைப்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும், குறைந்தபட்சம் ஐந்து பேரின் படிப்புச் செலவை ஏற்கலாம் அல்லது தங்களுக்கு வேண்டிய பிரமுகர்களின் கல்லுாரிகளில் பேசி, அவர்களுக்கு, 'சீட்' வாங்கித் தருவதுடன், வங்கிகளில் பேசி, கடனுதவி கிடைக்க தாங்களில் சிலரே சாட்சியாக இருக்கலாம். அம்மாணவர் அல்லது அம்மாணவி படித்து வேலைபார்க்கும் போது, வங்கிக் கடனை கட்ட வழி ஏற்படுத்தலாம்.
அதை விட்டு விட்டு, ஏதாவது ஒரு பிரச்னை எழுந்ததும், மாணவர்களை தெருவில் இறங்கி போராட ஆதரிப்பது, அவர்களை சட்டத்தின்படி செயல்படும் குடிமக்களாக மாற்ற உதவாது. மாறாக, அவர்கள் படிப்பின் மீதான அக்கறை குறைய வழிவகுக்கும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement