Advertisement

டீக்கடை பெஞ்ச்..

தனியார் மருத்துவமனைக்கு, 'ஆள் பிடிக்கும்' அரசு டாக்டர்!

''போன வேகத்துல திரும்ப வந்துட்டாரு வே...'' என, பெஞ்ச் தகவலை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.''யாரை சொல்றீங்க...'' என்றார் அந்தோணிசாமி.''கன்னியாகுமரி மாவட்ட, பி.ஆர்.ஓ.,வா இருந்தவர் காந்தி... இவரை, மே ௧௫ம் தேதி, திருப்பூருக்கு மாத்திட்டு, சென்னையில இருந்து இளவரசின்னு ஒரு பெண்மணியை நியமிச்சாவ வே...''இடையில, என்ன நடந்துச்சுன்னு தெரியலை... காந்தியை மறுபடியும் குமரிக்கே மாத்திட்டு, இளவரசியை, 'வெயிட்டிங்'ல போட்டுட்டாவ வே... ''இந்த மாறுதல் யாருக்கு ஆதரவா நடந்துச்சுன்னு தெரியாம, கலெக்டர் அலுவலக அதிகாரிகள் மண்டையை பிய்ச்சுக்கிடுதாவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.''வி.ஏ.ஓ.,க்களை, 'போட்டு' கொடுத்துடுறாங்க...'' என, அடுத்த தகவலுக்குள் நுழைந்தார் அந்தோணிசாமி.''யாரு பா அது...'' என்றார் அன்வர்பாய்.''வேலுார் மாவட்டத்துல, முதியோர் உதவித்தொகையை முறைப்படுத்த திட்டமிட்டாங்க...''அதாவது, ஒரே குடும்பத்துல, உதவித்தொகை வாங்குற தம்பதி, வாரிசுகள் இருக்கிறவங்க, வீடு, நிலம் இருக்கிறவங்களை எல்லாம் கண்டுபிடிச்சு, அவங்களுக்கு உதவித்தொகையை நிறுத்துறதுக்காக, பட்டியல் தரும்படி, வி.ஏ.ஓ.,க்களிடம் தாசில்தார்கள் கேட்டிருந்தாங்க...''உதவித்தொகை நிறுத்தப்பட்டவங்க, தாசில்தார்களிடம் போய் நியாயம் கேக்குறாங்க... அவங்களோ, 'உங்க ஊர், வி.ஏ.ஓ., தந்த பட்டியலை வச்சு தான் நிறுத்தியிருக்கோம்'னு சொல்லிடுறாங்க...''இதனால உள்ளூர், வி.ஏ.ஓ.,க்களிடம் கிராம மக்கள் தகராறு பண்ணிட்டு இருக்காங்க... அவங்களோ, 'தாசில்தார்கள், நம்மை மாட்டி விடுறாங்களே'ன்னு புலம்பிட்டு இருக்காங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.''தனியார் மருத்துவமனைக்கு தள்ளிட்டு போயிடுறாரு பா...'' என, கடைசி விஷயத்திற்கு தாவினார் அன்வர்பாய்.''யாரு ஓய் அது...'' என்றார் குப்பண்ணா.''பெரம்பலுார் அரசு மருத்துவமனை டாக்டர் ஒருத்தரை தான் சொல்றேன்... இவர், திருச்சியில இருக்கிற ஒரு தனியார் மருத்துவமனையில, 'சேவை' பண்ணிட்டு இருக்காரு பா...''சாலை விபத்துகள்ல கை, கால் முறிஞ்சு, பெரம்பலுார் அரசு மருத்துவமனைக்கு வர்றவங்களிடம், 'இங்க சரியான வசதிகள் இல்லை... அதனால, திருச்சி தனியார் மருத்துவமனைக்கு போயிடுங்க'ன்னு சொல்லி, அனுப்பிடுறாரு பா...''தனியார் மருத்துவமனையில, அவங்களுக்கு இவரே நல்லா சிகிச்சை கொடுக்குறாரு... இதை, அரசு மருத்துவமனை உயர் அதிகாரிகள் ரெண்டு பேரும் கண்டுக்கிறது இல்லை... காரணம், அவங்களை இந்த டாக்டர் நல்லா, 'கவனிச்சு' வச்சிருக்காரு பா...'' என, முடித்தார் அன்வர் பாய்.திடீரென யோசனை வந்தவராக அண்ணாச்சி, ''விவேக் வீட்டு கிரஹப்பிரவேசத்துக்கு பத்திரிகை வந்துச்சா வே...'' என, நண்பர்களிடம் கேட்க, அவர்கள், 'ஆம்' என்பதாக தலையசைத்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (4)

  • Mohan - Chennai,இந்தியா

    மதுரை பழங்காநத்தம்தில் உள்ள ஒரு பிரசவ ஆஸ்பத்திரியில் வரும் கர்ப்ப பெண்களிடம் எவ்வளவு பேசி மனதை புண் படுத்த முடியுமோ அந்த அளவுக்கு புண் படுத்துகிறார்கள்

  • Giridharan S - Kancheepuram,இந்தியா

    பல இடங்களில் மருத்துவர்கள் இது போன்றுதான் செயல்படுகிறார்கள்

  • Giridharan S - Kancheepuram,இந்தியா

    இந்த வட்டாட்சியர்கள் தங்களுக்கு ஒரு கண்ணு போனாலும் பரவாயில்லை நம்ம VAO ரெண்டு கண்ணும் போகணும்னு நினைக்கறிங்க இதில் தப்பு ஒன்னும் இல்லை

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement