Advertisement

'டவுட்' தனபாலு

-சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே: மத்திய அரசு பதவியேற்று மூன்றாண்டுகள் முடிந்த நிலையிலும், பரிசோதனை அடிப்படையில், அமைச்சர்கள் மாற்றப்படுகின்றனர். ஏதாவது அதிசயம் நடக்கும் என, பா.ஜ., காத்திருக்கிறது.


டவுட் தனபாலு: மத்திய அரசு எதைச் செய்தாலும் விமர்சிப்பது என்பதில், நீங்க ரொம்ப உறுதியா இருப்பது தெரியுது... எதிர்பார்த்த அளவு மூன்றாண்டுகளில் எந்த முன்னேற்றமும் இல்லைன்னா, எதற்காக மத்திய அமைச்சரவையில் நீங்க இடம் பெற்றிருக்கீங்க... பா.ஜ., கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டியதுதானே... ஒருவேளை, அமைச்சரவை மாற்றத்தில் உங்க கட்சிக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கும் அதிசயம் நிகழும்னு, காத்திருக்கீங்களோ என்ற, 'டவுட்' எழுதே...!


பத்திரிகை செய்தி: 'கடந்த, 2015-16 நிதியாண்டில் கிடைத்த மொத்த வருவாயில், பெரும்பகுதி, அடையாளம் தெரியாதவர்கள் அளித்த நன்கொடை உள்ளிட்ட வழிகளில் கிடைத்தவை' என, தேசியக் கட்சிகளான, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளன.


டவுட் தனபாலு: ஒளிவுமறைவற்ற ஆட்சியைத் தருவோம்னு சொல்ற கட்சிகள், இந்த விஷயத்தில் மட்டும் ஏன், ரகசியங்களுக்கு இடம் கொடுக்குது... மின்னணு பணப் பரிமாற்றம் குறித்தும், அதன் நன்மை குறித்தும் நீட்டிமுழக்கும் தலைவர்கள், குறைந்தபட்சம் அதை தனது கட்சிகளில் செயல்படுத்தாமல் இருக்கக் காரணம் என்னங்கறதுதான், மக்களின், 'டவுட்'டாக இருக்கு...!


-மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு: விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க, வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் புதிய கொள்கை, விரைவில் அறிவிக்கப்படும்.


டவுட் தனபாலு: நீங்க இப்பத்தான், வர்த்தகத்துறைக்கு பொறுப்பு ஏற்றிருக்கீங்க... இதுவரை நீங்க கவனித்துவந்த ரயில்வே துறையின் வருவாயை, எவ்வளவு உயர்த்தி இருக்கீங்க... இன்று வரை, விவசாயிகள் வருவாயை உயர்த்த, இந்த அரசு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லையா போன்ற, 'டவுட்'களுக்கு என்ன பதில் வெச்சிருக்கீங்க...!-----------

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement