Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

தி.மு.க., ராஜ்யசபா, எம்.பி., கனிமொழி பேச்சு: பார்லிமென்டில், 'நீட்' தேர்வை ஆதரித்துநான் பேசியதாக, சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இது, முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. தி.மு.க., தலைவர் கருணாநிதி, ஆரம்பம் முதலே, 'நீட்' தேர்வை எதிர்த்து வந்திருக்கிறார். ஆட்சியில் தி.மு.க., இருந்தவரை, 'நீட்' தேர்வை நடைமுறைப்படுத்த அனுமதிக்க வில்லை என்பதே உண்மை.


'தனியார் கொழிக்கும்போது, பி.எஸ்.என்.எல்.,லும் தனியார் மயமாகி, கொழிப்பதில் என்ன தவறு இருக்கு...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், தமிழக, காங்., தலைவர் திருநாவுக்கரசர் பேச்சு: இந்தியாவில், மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்.,லை, தனியாரிடம் தாரை வார்க்க, மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது, நாட்டு மக்களிடையே, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே, போட்டி காரணமாக,பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள், நாளுக்கு நாள் குறைந்து வருகின்றனர். இந்நிலையில், சேவை மையத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதன் மூலம், அந்நிறுவனத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.


லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி:
முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு, முழு பெரும்பான்மையுடன் இருக்கிறது. அரசியல் காரணங்களுக்காக, அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக, எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. அ.தி.மு.க., வில், பிளவு என்பதே இல்லை; நாங்கள் ஒற்றுமையாகஇருக்கிறோம்.தினகரன் ஆதரவு அறங்தாங்கி, எம்.எல்.ஏ., ரத்தினசபாபதி, 'கிச்சு கிச்சு' பேட்டி:
நீல திமிங்கலம் விளையாட்டில், மாணவர்களும், இளைஞர்களும் சிக்கித் தவிப்பது போல், முதல்வர் பழனிசாமியும், ஓர் ஆதிக்க சக்தியின் பிடியில் மாட்டிக் கொண்டிருக்கிறார். அவரை அதிலிருந்து மீட்க வேண்டும் என்பது தான், எங்கள் எண்ணம். மீண்டும் நாங்கள் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்பது தான், எங்கள் நோக்கமும், விருப்பமும்.
பா.ம.க., தலைவர், ஜி.கே.மணி பேட்டி:
'நீட்' தேர்வுக்காக,தமிழக பாடத்திட்டம் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும்; சி.பி.எஸ்.இ., போன்றபாடத் திட்டத்தை, அமல்படுத்த வேண்டும். அதை, மாணவர்கள் புரிந்து கற்றுக் கொள்ள, நான்கு ஆண்டு அவகாசமும், அதுவரை, 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு, விலக்கும் அளிக்க வேண்டும்.
'எல்லா அரசியல்வாதிகளுமே, நம் மாநில மாணவர்களின் அறிவுத் திறனை குறைத்து மதிப்பிடுகின்றனர். இதில் நீங்களும் விதி விலக்கில்லையோ...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், மனிதநேய ஜனநாயக கட்சி, எம்.எல்.ஏ., தமிமுன் அன்சாரி பேட்டி:'நீட்' விவகாரத்தில் மத்திய அரசு, தமிழகத்தை திட்டமிட்டே வஞ்சித்திருக்கிறது. இத்தகைய பாசிச போக்கு கொண்ட மத்திய அரசிடம், மாநில உரிமைகளை ஒன்றன் கீழ் ஒன்றாக, தமிழக அரசு விட்டுக் கொடுக்கிறது. இதில், எங்களுக்கு உடன்பாடில்லை. 'நீட்' விவகாரத்தில், தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் வகையில், தனித்தன்மையோடு பயணிக்க விரும்புகிறோம். நாங்கள்,யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement