Advertisement

டீக்கடை பெஞ்ச்

ஊர்க்காவல் படையினரை, 'படுத்தும்' அதிகாரி!

'பழைய நினைவுகள்ல, மூழ்கிட்டாரு பா...'' என, டீயை உறிஞ்சியபடியே, விஷயத்தை ஆரம்பித்தார் அன்வர் பாய்.''யாரை சொல்றீங்க...'' என்றார் அந்தோணிசாமி.''மதுரை சட்ட கல்லுாரியில, கூடுதல் கட்டடங்களை, சட்ட துறை அமைச்சர், சண்முகம் சமீபத்துல திறந்து வச்சார்... விழாவுக்காக, முதல் நாள் சாயந்தரமே, அமைச்சர் மதுரைக்கு வந்துட்டாரு பா...''இந்த கல்லுாரியில தான், அமைச்சரும் படிச்சார்... நட்சத்திர ஓட்டல்ல தங்குனவர், கல்லுாரியில தன் கூட படிச்ச பழைய நண்பர்களை அழைச்சு, கல்லுாரி வாழ்க்கையை பேசிட்டு இருந்தாரு பா...''மறுநாள் விழா முடிஞ்சதும், தான் படிச்ச வகுப்பறை பெஞ்சுல, கொஞ்ச நேரம் உட்கார்ந்து, பழைய நினைவுகளை அசை போட்டார்...''கல்லுாரிக்கு வெளியில, மாணவரா டீ குடிச்ச கடையில, கட்சி நிர்வாகிகளோட சேர்ந்து, டீ குடிச்சுட்டு தான், சென்னைக்கு கிளம்புனாரு பா...'' என, அமைச்சரின் மலரும் நினைவுகளை விளக்கி முடித்தார் அன்வர் பாய்.''எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்னு புலம்பாத குறையா தவிக்காரு வே...'' என, அடுத்த விஷயத்தை ஆரம்பித்தார் அண்ணாச்சி.''யாரு ஓய்...'' என்றார் குப்பண்ணா.''வேலுார்ல, ௧௯௯௧ல இருந்து, ௨௦௧௧ வரை, ௨௦ வருஷங்களா காங்கிரஸ், த.மா.கா., சார்புல, எம்.எல்.ஏ.,வா இருந்தவர் ஞானசேகரன்... ரெண்டு கட்சிகள்லயும், முன்னணி தலைவராகவும் இருந்தாரு வே...''ஆனா, ௨௦௧௧ல, தி.மு.க., கூட்டணியிலயும், ௨௦௧௬ல, மக்கள் நல கூட்டணியிலயும், வேலுார்ல நின்னு தோத்து போயிட்டார்... அப்புறமா, ஜெயலலிதா முன்னிலையில, அ.தி.மு.க.,வுல சேர்ந்தாரு வே...''ஜெயலலிதா இறந்து, அ.தி.மு.க., பல அணிகளா பிரிஞ்சு கிடக்கிறதால, இவரை யாரும் கண்டுக்கலை... இதனால, வழி தவறி வந்துட்டோமோங்கிற விரக்தியில இருக்காரு வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.''ஊர்க்காவல் படை வீரர்களை, வீட்டு வேலைக்கு ஏவறா ஓய்...'' என, கடைசி விஷயத்திற்குள் நுழைந்தார் குப்பண்ணா.''எந்த ஊருலங்க...'' என்றார் அந்தோணிசாமி.''திருவள்ளூர் மாவட்டத்துல, 55 பெண்கள் உட்பட, 275 பேர், ஊர்க்காவல் படையில இருக்கா... இவாளுக்கு, தினமும், நாலு மணி நேரம் தான் வேலை... ஆனா, பெரும்பாலான ஸ்டேஷன்ல, 12 மணி நேரம் வரை வேலை வாங்கறா ஓய்...''சில உயர் அதிகாரிகளின் வீட்டு வேலைகளுக்கும் இவாளை அனுப்பி வச்சுடறா... இங்க இருக்கற ஒரு உயர் அதிகாரி, சமீபத்துல, தன் வீட்டு வேலைக்கு வராத ஊர்க்காவல் படை வீரர்களை கடுமையா திட்டியிருக்கார் ஓய்...''அந்த கடுப்புல, 'எல்லா ஊர்க்காவல் படையினரையும் நல்லா வேலை வாங்குங்க'ன்னு மைக்குல, போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உத்தரவு போட்டிருக்கார்... அதனால, எல்லா ஸ்டேஷன்லயும், ஊர்க்காவல் படை வீரர்களை கசக்கி பிழியறா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.தெருவில் பைக்கில் சென்ற தெரிந்த ஒருவரை நிறுத்திய அந்தோணிசாமி, ''தம்பி, ஸ்டாலின் வீட்டுல என்னை, 'டிராப்' பண்ணிடுங்க...'' என, 'லிப்ட்' கேட்டு செல்ல, நண்பர்கள் அரட்டை தொடர்ந்தது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

  • Giridharan S - Kancheepuram,இந்தியா

    ஞானசேகரனுக்கு சுயமா சிந்திக்க தெரியலே. நீரோடை எங்கிருக்கோ அங்கே போய் தண்ணீர் அள்ளனும். அதைவிட்டுட்டு புலம்பக்கூடாது. அரசியலுக்குன்னு வந்தாச்சு அப்புறம் சூடு சொரணை எல்லாத்தியும் ஏறக்கட்டிடனும்

  • Giridharan S - Kancheepuram,இந்தியா

    வசந்த கால கல்லூரியில் விளையாடிய நினைவலைகள் அமைச்சர் கலக்கிட்டாரப்பா

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement