Advertisement

மோடியின் துணிச்சல் நடவடிக்கை...

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே, பிரதமர் மோடி, அமைச்சரவை மாற்றத்தை நிறைவேற்றி உள்ளார். பொறுப்புகளையும், கடமைகளையும், யார் நிறைவேற்றுகின்றனரோ, அவர்கள், அமைச்சரவையில் அங்கம் வகிக்க அவர்விரும்பியதை, இந்த அமைச்சரவை மாற்றம் காட்டுகிறது. கட்சித் தலைவர் அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ்., தலைமை மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் ஆலோசித்து உருவாக்கிய மாற்றங்கள் இவை. இன்னும், 18 மாதங்கள் மத்தியில், பா.ஜ., ஆட்சி இருக்கும் என்பதும், அதைத் தொடர்ந்து தேர்தல் வரும் போது, அதற்கேற்ப தன் அணி ஆட்சிக் கட்டிலில் இருக்க, அவர் விரும்பியதை, அவரது துணிச்சலான இச்செயல் காட்டுகிறது. ஆகவே, பா.ஜ.,வின் பிரதிநிதிகள் மட்டுமே, இதில் இடம் பெற்றிப்பது, பலரது யூகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

புதிய அமைச்சர்களில், நிர்மலா சீதாராமன், ராணுவ அமைச்சர். தினமும் எல்லையை போய் கவனிக்க வேண்டும் என்பது, இவரது வேலை அல்ல; ராணுவத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மனோகர் பரீக்கரும், அதற்கு பின் ஜெட்லியும் கொண்டு வந்துள்ளனர். மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் ராணுவத்தில், பெண்கள் பங்கு எந்த அளவு எதிர்காலத்தில் அமையும் என்பதற்கு, 'ப்ளூ பிரின்ட்'டை இவர் தயாரிக்கலாம். பிரதமர், கட்சித் தலைவர் அமித் ஷா, மூத்த அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோரின் கருணைப்பார்வை, இவர் மீது தொடர்ந்து இருக்கும் என்பதால், இவர் மேற்கொள்ளும் அணுகுமுறைகள் விமர்சிக்கப்படும். அதே போல, தமிழகம் உட்பட தென்மாநிலஅரசியலில், இவரது பங்கு இனி குறையலாம். அதே போல, சிவசேனா கட்சியால் புறக்கணிக்கப்பட்ட, தொழில்நுட்ப அறிஞர் சுரேஷ் பிரபுவுக்கு, நிர்மலா கவனித்த வர்த்தகம் தரப்பட்டிருக்கிறது. இவர் நிச்சயம் ஏற்றுமதி அதிகரிக்கவும், இந்திய பொருட்களை சந்தைப்படுத்துவதிலும், உலகளவில் திறம்பட செயல்படலாம். அடுத்ததாக, திறனுடைய அமைச்சர் பியுஷ் கோயல், ரயில்வே அமைச்சகத்தை சிறப்பாக கையாளக் கூடும். அதில் உள்ள, 1.3 லட்சம் தொழிலாளர்களை, சுரேஷ் பிரபு கையாண்டதை விட, இவர் சிறப்பாக கையாளுவார். இவருக்கு, சங்கபரிவார் தொழிற்சங்கமான, பாரதீய மஸ்துார் சங்கம் முழு ஆதரவு தரும். நாடு முழுவதும், உடனே, 'புல்லட்' ரயில் திட்டம் அமலாக, பொறுப்புள்ள குடிமக்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த பிரமாண்டமான அமைப்பு லாபம்ஈட்டுவதுடன், செயல்படும் திறனுடன்இருந்தாலொழிய, காலப் போக்கில், இதன்முக்கியத்துவம் குறைந்து விடும். ஆகவே, பியுஷ் கோயலுக்கு இது சவாலாகும். பொன்.ராதாகிருஷ்ணன் எம்.பி., - ஜெட்லியுடன் கூட இணைந்து, நிதித் துறைஇணையமைச்சராக பணியாற்ற வேண்டும். கேரளாவைச் சேர்ந்த, முன்னாள் உயர்அதிகாரி அல்போன்ஸ் மற்றும் முன்னாள் துாதரக அதிகாரி ஹர்தீப் சிங் பூரி ஆகியோர், நிச்சயம் அதிகாரிகளுடன் இணைந்து முறையே, சுற்றுலா மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகியவற்றை அதிகம் செயல்பட வைக்க வாய்ப்புகளை உருவாக்கலாம். இந்த அமைச்சரவை பதவியேற்பில், காங்., சார்பில், குலாம்நபி ஆசாத் மட்டுமே வந்திருக்கிறார். மோடி அரசு நீடித்து நிற்பதை விரும்பாத அக்கட்சி, 2019 லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள, எப்படி இனிச் செயல்படும் என்பதை காண வேண்டும். பா.ஜ.,விலும் மூத்த தலைவரான அத்வானி இவ்விழாவில் பங்கேற்காதது, பரபரப்பான இளைஞர் சக்தி வருவதை ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் வராததை காட்டுகிறது. ஏற்கனவே, அமைச்சர்கள் செயல்திறனை மதிப்பீடு செய்து, சிலரை பதவி நீக்கம் செய்த, பா.ஜ., ஆட்சி, அடுத்த தேர்தலுக்கு ஆதாரமாக முன்கூட்டியே இந்த மாற்றத்தை அமல்படுத்தி இருக்கிறது என்பதே உண்மை. அதிக மாநிலங்களில், பா.ஜ., ஆட்சி தொடர்ந்தாலும், பாமர மக்களின் நலனை, மத்திய அமைச்சர்கள் எந்த அளவு ஊழல் சக்திகள் நிர்வாகத்தில் நுழையாமல் செயலாற்றப்போகின்றனர் என்பது, இனி அதிகமாக கவனிக்கப்படும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement