Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'ஏதாவது குத்தம் சொல்லியே தீர வேண்டும்' என்ற நோக்கில், காங்., மூத்த தலைவர் மணீஷ் திவாரி அறிக்கை: மத்திய அமைச்சரவையில் இருந்து, திறன் மேம்பாட்டு அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, சிறு, குறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா ஆகியோரை நீக்கியதன் மூலம், மத்திய அரசு தன் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளது. பணக்காரர்களுக்காக உழைத்தவர்களுக்கு, அமைச்சரவையில் அந்தஸ்து உயர்த்தப்பட்டு உள்ளது.'பார்த்து பேசுங்க சார்... உங்களை எதிரியா நினைக்கிற, பா.ஜ.,வோடு கூட்டு சேர்ந்து, அரசு அமைத்துள்ள, ஜம்மு - காஷ்மீர் முதல்வர் மெஹபூபா காதில் புகை வந்திடப் போகுது...' என, சொல்லத் தோன்றும் வகையில், தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவர், ஒமர் அப்துல்லா பேட்டி:
மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சராக பதவி வகித்த நிர்மலா சீதாராமனை, பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமித்ததன் மூலம், பாலின சமத்துவத்தை, பிரதமர் மோடி உறுதிப்படுத்தி இருக்கிறார். மத்தியில் பொறுப்பேற்ற, கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, பல்வேறு ஆச்சரியங்களை நிகழ்த்துவதில், பிரதமர் மோடியின் திறன் குறையவில்லை.


தோல்விக்கான காரணத்தை கண்டறிந்த பின்னே, அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்திருக்குங்கற பேருண்மை புரிந்தும், புரியாதது போல், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி பேட்டி:
நாட்டில் வறுமை, வேலையில்லா திண்டாட்டம், கங்கை நதி சுத்திகரிப்பு போன்ற பற்றி எரியும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில், மத்திய அரசு படுதோல்வி அடைந்துள்ளது. லோக்சபா தேர்தலின் போது அளித்த வாக்குறுதி எதையும், பா.ஜ., அரசால் நிறைவேற்ற முடியவில்லை. இந்த தோல்விகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே, அமைச்சரவை விரிவாக்கம் எனும் நாடகத்தை, பா.ஜ., அரங்கேற்றி இருக்கிறது.
'கட்சியை வலுப்படுத்துறோம்ன்னு நீங்க தான் சொல்றீங்க... அதுக்கான அறிகுறி, கொஞ்சம் கூட தென்படலே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி: பா.ஜ.,வுக்கு, தனியாகத்தான் நிற்க வேண்டும் என்ற அவசியம் உள்ளது. ஏனெனில், அதோடு கூட்டணிக்கு யாரும் தயாராக இல்லை. ஆனால், எங்களுக்கு அப்படியில்லை. அதற்காக, காலாகாலத்திற்கும் கூட்டணியில் தான், காங்., சவாரி செய்யுமா என்றால் இல்லை; எங்களை வலுப்படுத்தும் பணியை துவங்கி உள்ளோம்.
'நீங்க சொல்றதுல உண்மை இருந்தாலும், நீங்களுமே பார்த்துப் பேச வேண்டிய சூழல் தானே நிலவுது...நீங்கள், 'கேக்' வெட்டிக் கொண்டாடும் நிலையில் இல்லையே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேச்சு:
'ஊருக்கு உழைச்சாலே, ஏழை உரிமையை மதிச்சாலே, பெருமைகள் தேடி வரும்; தானே பதவிகள் நாடி வரும்' என, எம்.ஜி.ஆர்., பாடினார். ஆனால், இப்போது சிலர், மக்களுக்கு உழைக்காமலேயே, உள்ளே வர நினைக்கின்றனர். 'உத்தரவின்றி உள்ளே வரக்கூடாது' என, ஜெயலலிதா ஆணையிட்ட பின்னும், உள்ளே வர பல சூழ்ச்சிகள் செய்கின்றனர். ஜாதகம் சரியில்லாத சிலர், 'இந்த ஆட்சி நீடிக்காது' என, ஜோசியம் சொல்கின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement