Advertisement

21ம் நூற்றாண்டின் புதிய அபாயம்...

மும்பையில் பெய்த பெருமழை பாதிப்பு, நாசம், அந்த நகர மக்களை அதிக துயருறச் செய்திருக்கிறது. ஒரு சில மணி நேரங்களில், 26 செ.மீ., மழை பெய்து, மக்களை நடுங்க வைப்பது இயல்பு தான். தமிழகத்தில், இம்மாதிரி அனுபவம் நடந்ததைக் கண்டு, இன்னமும் மக்கள், மழை என்றாலேஅஞ்சுகின்றனர். அதனால், வறட்சியை ஏற்கும் மனோபாவம், சிலருக்கு வந்திருக்கிறது. திட்டமற்ற வளர்ச்சி உடைய நகரங்களில், அதிக மழை பெய்தால், இம்மாதிரி அதிக பாதிப்பு ஏற்படும் என்ற கருத்து, இப்போது கூறப்படுகிறது. மும்பை நகரில், 120 ஆண்டுகள் பழமையான கட்டடம் விழுந்து, அதில் பலர் உயிரிழந்ததும், நம் அஜாக்கிரதையின் அடையாளமாகும். 'ஒரேயடியாக, மழை ஊற்றாக பெய்யும் போது, கடலாக தண்ணீர் தேங்குவது அபாயமாகிறது' என, இப்போது சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பருவமழை காலத்தில், பீஹார், உ.பி., போன்ற மாநிலங்களில் பெருகி வரும் கங்கை, யமுனை, அசாமில் பிரம்மபுத்ரா ஆகியவை ஆண்டுதோறும் பயிர்களை அழிப்பதும், அதில் நுாற்றுக்கணக்கான மக்கள் உயிரிழப்பதும் உண்டு. காரணம், அதிக நிலப்பரப்பு நீரில் மூழ்கும் போது, மக்கள் பரிதவிப்பு அதிகமாவதும், நிலச்சரிவு அபாயமும் ஏற்படும். இயல்பாக, மக்கள் அதற்குப்பின் வாழ முற்படுவதும், இந்தியசூழ்நிலையில் உள்ள அம்சமாகும்.
பல மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு, இரண்டு கோடி மக்களை தவிக்க விட்டிருக்கிறது.
மறுபுறம், பருவமழை இயல்பாக பெய்வதை விட குறைவாகி, இன்னமும் வறட்சியில் தவிக்கும், கிராமங்கள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளன. பொதுவாக, இயற்கை சீற்றத்தில் ஏற்படும் இழப்புகள், பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல்அதிகரித்தபடி உள்ளன.
சென்னையில், 2015ம் ஆண்டு வெள்ள பாதிப்பு, காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரில், 2014ல் ஏற்பட்ட பாதிப்பு, பெங்களூரு சந்தித்த மழைத் துயரம் ஆகியவை எல்லாம், ஒரு விஷயத்தை காட்டுகின்றன. அதிக நிதி ஆதாரம் உடைய மாநகராட்சிகள், இத்துயரத்தை சந்திக்கும் அளவுக்கு கட்டடங்கள், தெருக்கள், மற்ற வடிகால் வசதிகளை திட்டமிடாமல், அவை பின்னடைந்திருப்பதும், அதனால், குறைகள் நீடிப்பதையும் காட்டுகின்றன.
மும்பையில் மழை அதிகரிக்கும் போதுதண்டவாளங்கள் மூழ்கி, ரயில் சர்வீஸ் பாதிக்கப்படுகிறது. இதற்கு யார் காரணம்... ரயில்வே துறை என்பதை விட, அப்பகுதிகளில் தண்ணீர் வடிகால் வசதிகள் முறையாக இல்லை. சில ஆண்டுகளாக, இந்திய வானியல் ஆய்வு மையம் முன்கூட்டியே அதிக எச்சரிக்கைகள் தந்த போதும், அதேபோல தேசிய பேரிடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் சுறுசுறுப்படைந்தும், அதிக பயன் காணோம். மாநில அரசுகள் இவ்விஷயம் குறித்து புதிய அணுகுமுறை மேற்கொள்ளாவிட்டால், பெரிய நகரங்களில் ஏற்படும் சீர்குலைவுகளுக்கு தீர்வே கிடையாது. இனி தகவல் தொடர்பு சாதனங்கள் உதவியுடனும், வானிலை தகவல்களை முன்கூட்டியே அறிந்தும், அதற்கேற்ப மக்களை பாதுகாக்க வழிகள் காண, மாநில அரசுகள் மேற்கொள்ளும் முடிவுகள், என்ன என்பதே இந்த நுாற்றாண்டின் சவாலாகும். ஏனெனில், அபாரமாக வளர்ந்த நாடானஅமெரிக்காவில், 'ஹார்வி புயல்' ஏற்படுத்திய பாதிப்பில், நம் இளைஞர்களும் இறந்திருக்கின்றனர்.
அளவு கடந்த சுறுசுறுப்பும், செயலாக்கமும் நிறைந்த அந்த அரசு ஹூஸ்டன் நகர பாதிப்பில், பல கோடி டாலர் இழப்பை சந்தித்திருக்கிறது. கச்சா எண்ணை துரப்பன நிறுவன பாதிப்புகள் அதிகம். அதைவிட அதிக வெள்ளம் பாதித்த அன்று, இரவு நேரத்தில், ஹூஸ்டன் நகரில் உள்ள மக்கள் பாதுகாப்பாக வீடுகளில் தங்க நிர்வாகம் அறிவித்தது. அதற்கு காரணம், இரவு நேரத்தில் இத்துயரத்தை சாதகமாக்கி, வீடுகளை தாக்கி பொருட்களை கொள்ளையர் அபகரித்து விடுவர் என்று கூறியதை கவனித்தால், அபாயத்தின் மற்றொரு முகம் புரியும். அதே சமயம், அங்குள்ள சில மசூதிகளில், வீடுகள் மூழ்கியவர்கள் தங்கி உள்ளனராம். அவர்கள் பக்ரீத் பண்டிகை காலமாக இருந்தாலும், அங்கு தங்கலாம் என, மதத்தலைவர்கள்கூறியுள்ளனர்.
எல்லாவற்றையும் விட சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நவீன வாழ்க்கை முறை, ஏற்படுத்தும் அபாயங்களில் வெள்ளப் பேரழிவு, புதிதாக அரசுகளையும், மக்களையும் சிந்திக்க வைக்கா விட்டால், 21ம் நுாற்றாண்டின் வளர்ச்சி பின் தங்கிவிடும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement