Advertisement

அழிந்துவரும் நதிகள் மாற்றம் உருவாக்க சத்குரு சொல்லும் வழி!

சத்குரு: இன்று நாம் இவ்விதமாய் உருவாகியிருப்பதற்குக் காரணமே நதிகள்தான். மொகஞ்சதாரோ-ஹரப்பா போன்ற பண்டைய நாகரீகங்கள், நதிக்கரையில் பிறந்தன. நதிகள் திசைமாறியபோது அவையும் அழிந்தன.

மக்கள் உடனடித் தீர்வுகளை எதிர்நோக்கி நதிகளை இணைத்து, அதன்வழி கூடுதல் நீரை நிலங்களுக்கு விநியோகிக்க முடியுமென எண்ணுகின்றனர். இது இன்னும் ஆபத்தாகத்தான் முடியும். பெருந்தொகையைச் செலவழித்து சூழலியலுக்கு ஓர் ஆபத்தை இதன்மூலம் உருவாக்குவோம்.

இன்று பல நதிகள் துரிதமாக அழிந்து வருகின்றன. இன்னும் இருபதாண்டுகளில் அவை அருகிப் போக வாய்ப்பிருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 10, 12 நதிகள் முற்றிலும் அழிந்துப்போவதை நான் பார்த்திருக்கிறேன். இன்று, தென்னிந்தியாவின் மிக முக்கிய நதிகளாகிய காவிரி, கிருஷ்ணா, கோதாவரி ஆகியவை ஆண்டின் சில மாதங்களுக்கு கடலில் கலப்பதே இல்லை.

பூமி சூடாவதன் காரணமாக, இருபுறமும் கடல்கள் கொண்ட இந்தியாவின் தென் பிரதேசங்களில் கூடுதலாக மழை பொழிகிறது. கடலோர மாநிலங்களான ஆந்திரா உள்ளிட்ட பகுதிகள் பருவமழைக் காலங்களில் வெள்ளப் பெருக்குக்கு உள்ளாவதைப் பார்க்கிறோம்.

டிசம்பர் மாதத்தில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்திற்குப் பிறகு சென்னைவாசிகள், மழை என்றாலே அஞ்சத் தொடங்கிவிட்டார்கள். இப்போது இரண்டு நாட்கள் மழை பெய்தாலும் மீட்புப் படகுகளை தயார்நிலையில் வைத்துக்கொள்கிறார்கள்.

மழையின்மையால் வரும் பாதிப்பை விடவும், கூடுதல் மழை தென் மாநிலங்களை விரைவில் பாலைவனம் ஆக்கிவிடும். ஏனெனில், அதிகப்படியான மழை, காலப்போக்கில் பூமியை விவசாயத்திற்குத் தகுதி இல்லாததாகச் செய்துவிடும். இந்நிலை, தமிழகத்தின் சில பகுதிகளில் ஏற்கனவே உருவாகத் துவங்கிவிட்டது. ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்படும்போது இருநூறு அடிகளிலேயே தண்ணீர் கிடைத்த நிலை மாறி, இப்போது ஆயிரம் அடிகள் தோண்டினாலும் தண்ணீர் கிடைப்பதில்லை.

ரயில்களிலும் லாரிகளிலும் தண்ணீர் விநியோகித்து இந்த தேசத்தை எத்தனை காலங்களுக்கு நடத்திச் செல்ல இயலும்? நான் எச்சரிக்கை மணி அடிப்பவனாக ஆக விரும்பவில்லை. ஆனால், நதிகளைத் தவறாக நடத்துவதால் ஏற்படும் சிக்கல்களைப் பற்றி அனைவரும் சிந்திக்க வேண்டும். இத்தனை கோடி மக்கள் தொகையை வைத்துக்கொண்டு, நதிகள் வற்றினால் ஒருவரையொருவர் கொன்று ரத்தத்தையா குடிக்க முடியும்?

பனிக் கட்டிகளால் உருவாகும் நதிகளை உடனடியாக மீட்க முடியாது. ஏனெனில், பனிப்பொழிவு என்பது உலகளாவிய விஷயம். ஆனால், வனங்களில் உருவாகும் நதிகளை நம்மால் உயிர்ப்பிக்க முடியும். மக்கள் உடனடித் தீர்வுகளை எதிர்நோக்கி நதிகளை இணைத்து, அதன்மூலம் கூடுதல் நீரை நிலங்களுக்கு விநியோகிக்க முடியுமென எண்ணுகின்றனர். இது இன்னும் ஆபத்தாகத்தான் முடியும். பெருந்தொகையைச் செலவழித்து சூழலியலுக்கு ஆபத்தினை விளைவித்து விடுவோம்.

நதிகளுக்கு என்ன நிகழ்கிறது என்பது பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தி, செய்ய வேண்டியது என்ன என்பதையும் நாம் மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். ஆதாயம் தரும் தீர்வுகளைத் தந்தால்தான் மக்கள் நதிகளைக் காக்க முன்வருவார்கள். மரக்கன்றுகளை வளர்ப்பதில் அடுத்த பத்தாண்டுகளுக்கு 1 லட்சம் பேர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தலாம். இதன்மூலம், நாட்டில் பெருமளவு நிலம் பசுமைப் போர்வைக்குள் வரும்.

பருவமழை தவறாத சூழலை ஏற்படுத்தி, பூமி சிதைவுறுவதைத் தடுக்க முடியும். இது முழுமையான தீர்வாக அமைவதோடு, நதிகளை இணைப்பதற்கு ஆகும் செலவில் 10% மட்டுமே ஆகும்.

நதியின் இரு கரைகளுக்கும் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு மரப்பயிர் விவசாயம் செய்யவேண்டும். அரசு நிலமாக இருந்தால் காடு வளர்க்கவும், தனியார் நிலமாக இருந்தால் மரப்பயிர் செய்யவும் திட்டமிட வேண்டும்.

தேவையான பயிற்சியையும், மானியத்தையும் அரசு வழங்கி ரசாயனக் கலப்பின்றி இயற்கை விவசாய முறையில் மரப்பயிர் செய்ய மக்களை ஊக்குவிக்க வேண்டும். இதன்மூலம், விளைநிலங்கள் முன்பைவிட நல்ல வருவாயை ஈட்டித் தரும்.

அரசாங்கங்கள் நதிகளின் நலனுக்கு உகந்த திட்டங்களை உருவாக்க வேண்டும். ஆந்திரா மற்றும் மத்தியப் பிரதேச அரசுகள் நம் கருத்தை ஏற்று, இதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளன. இதுகுறித்து, மத்திய அரசுக்கு ஈஷா அறக்கட்டளை ஒரு விரிவான திட்டத்தைச் சமர்ப்பிக்கவுள்ளது.

தாங்கள் என்ன செய்தாலும் எதுவும் மாறாது என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டதாலேயே பலரும் தோல்வியைத் தழுவுகிறார்கள். ஆனால், மாற்றத்தை உருவாக்க இதுவே நேரம். பத்தாண்டுகள் தாண்டினால் காலம் கடந்து போய்விடும்.

நமது பொருளாதார வேட்கையால் நதிகளையும் நிலங்களையும் பராமரிக்கத் தவறிவிட்டோம். நம் தலைமுறையிலேயே அவற்றை அழித்து விடக்கூடாது. இந்த ஆண்டு மரம்நட்டு, இரண்டு ஆண்டுகள் பராமரித்து அதன்பின், அடுத்த மரத்தை நட்டுப் பராமரிக்கத் துவங்கினால், இதுவே ஓர் இயக்கமாக மாறிவிடும்.

இதைச் செய்ய முடியுமா… முடியாதா என்பதல்ல கேள்வி; செய்ய விரும்புகிறோமா… இல்லையா என்பதே கேள்வி.

இது போராட்டமல்ல, இது ஆர்ப்பாட்டமல்ல, நம் நதிகள் வற்றி வருவதைப் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் இது. தண்ணீர் குடிக்கும் ஒவ்வொரு மனிதரும் நம் நாட்டின் உயிர்நாடிகளான நதிகளை காக்க செயல்புரிய வேண்டும்.

இதனை நாம் நிகழச் செய்வோம்.

அன்பும் அருளும்,
சத்குரு

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (15)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement