Advertisement

தினம் அதிகரிக்கும் குழப்பம் தீருமா?

தமிழக அரசு, இந்த மாதத்தில் முழுத்திறனுடன் செயல்பட, வழி பிறக்கும் அறிகுறிகள் தென்படுகின்றன. முன்னாள் முதல்வர், ஜெ., பாரம்பரியத்தில், அ.தி.மு.க., பிரமாண்டமான கட்சியாக மாறியது. அதே சமயம், அக்கட்சியில் உள்ள சட்ட திட்டங்கள், மற்ற தேசிய கட்சிகள் அல்லது இடதுசாரி சிந்தனைக் கட்சிகள் போல அமையவில்லை. தனி மனித அடையாளத்தில் வளர்க்கப்படும் கட்சிகள், இம்மாதிரி அளவுகோல்களை கொண்டிருக்கும்.
சிவசேனா உட்பட பல கட்சிகளில், ஒரு நபரின் முடிவே, கடைசி வரை மக்களை ஈர்க்கும் சக்தியாக அமைந்திருப்பதைக் காணலாம். தமிழகத்தில், அ.தி.மு.க., உருவான போது, முந்தைய முதல்வர் அண்ணாதுரை கருத்தின்படி, 'தம்பி, உன்முகத்தைக் காட்டு' என்று, தேர்தல் நேரத்தில், எம்.ஜி.ஆரை அழைத்ததை நினைவு படுத்திக் கொள்ளலாம். அதே பாணியில், ஜெயலலிதாவும், துணிச்சல் மிக்க பெண்ணாகவும், ஓட்டுகளை அள்ளும் சக்தியாகவும் இருந்தார்.
இன்று அவரது மறைவிற்குப் பின், மூன்றா அல்லது நான்கா என்ற அளவில் எண்ணும் நிலைக்கு கோஷ்டிகள் உள்ளன. அதிலும் சசிகலா குடும்பத்தினர், கட்சியில் இருக்கக் கூடாது என்ற கருத்து வலுவடைந்து, குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது. இன்றைய முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர், சபையில், 'மெஜாரிட்டி'யை நிரூபிக்க வழி இல்லை என, கவர்னர் வித்யாசாகரிடம், தி.மு.க.,வில் துவங்கி தமிழக கட்சிகள் பலவும் வலியுறுத்திஉள்ளன.
ஆனால், அருணாச்சல் அல்லது பீஹார் போல, ஆளும் கூட்டணியில் நேரடி பிளவு காணோம். அதற்கு காரணம், இன்னும் மூன்றரை ஆண்டுகள் ஆட்சியை இழக்க, அ.தி.மு.க., கோஷ்டி அரசியல் தலைவர்கள் விரும்பவில்லை. 'மைனாரிட்டி அரசாக' காட்சி அளிக்கிறது. இந்நிலையில், கவர்னர் தன்னைச் சந்தித்த கட்சிகளின் தலைவர்களிடம், 'அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களிடம் பிளவு குறித்த முகாந்திரம் இல்லை' என, கூறியிருப்பது கவனத்திற்குரியது. ஆளுங்கட்சி, எம்.எல்.ஏ.,க்கள் கோஷ்டியினர், அன்றாடம் பரஸ்பரம் விமர்சித்துக் கொள்வதையும், ஒருவர் மற்றவரின் துரோகத்தை ெவளிப்படுத்துவதையும், கவர்னர் அறிந்திருப்பார். இன்றைய தமிழக அரசியல், ஒரு, 'நெகிழ்வு சூழ்நிலை'யில் இருப்பதை, மத்திய அரசுக்கு எடுத்துக் கூறியிருப்பார். மேலும், 'இரட்டை இலை'யை யார் பெறுவது என்ற பிரச்னை எளிதில் தீராது. ஏனெனில், அது கட்சியின் பொதுக்குழு முடிவு மற்றும் வேறு சில சட்ட அடிப்படைகளை வைத்து எடுக்க வேண்டிய முடிவு. பல விஷயங்களில் தேர்தல் கமிஷன், தனித்துவ முடிவுகளை எடுப்பது, பல சமயங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், மத்தியில் உள்ள, பா.ஜ., அரசு, மோடியின் முகத்தை காட்டி ஜெயிக்கிறது. தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி முகம், மேற்கு வங்கத்தில் மம்தா முகம், ஆந்திராவில் சந்திரபாபு முகம் என்ற ரீதியில் மக்கள் பழக்கப்பட்டு விட்டனர். ஆகவே இன்று, 'இரட்டை இலை' சின்னத்தை தாண்டி, அ.தி.மு.க., கோஷ்டிகளில் இன்றைய நிலையில், எந்த முகம் அடுத்ததாக முன்னிறுத்தப்படும் என்பது, அக்கட்சி சம்பந்தப்பட்ட விஷயம். வேறு விதமாக பார்த்தாலும், இவர்கள் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் பலம், முக்கிய எதிர்க்கட்சியான, தி.மு.க.,வின் பலமான, 89ஐ விட அதிகமாக இன்று இருக்கிறது. ஆகவே, மைனாரிட்டி அரசு ஆளுவதாக விமர்சிக்கலாம். இதை மத்திய உள்துறை நன்கறிந்திருக்கும். இச்சூழ்நிலையில், சட்டபையை கலைப்பது, சுலபமானது அல்ல. அதைவிட, மத்தியில் ஆளும், பா.ஜ., அமைச்சர்களை, அ.தி.மு.க., அமைச்சர்கள் அடிக்கடி ஆலோசிப்பது, ஜெயலலிதா மறைவுக்குப் பின் நடைபெறும் உத்தியாகி விட்டது. தமிழகத்தில், பா.ஜ., பலவீனமாக இருப்பதும், சங்கபரிவார் அமைப்பைச் சார்ந்த சில அறிவுஜீவிகள், மேலிடத்தில் செல்வாக்கு பெற்றிருப்பதும் நிதர்சனம். அவர்களை, அ.தி.மு.க., தலைவர்கள் சந்திப்பது, இன்று தாங்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு விடைகாண வழியாக கருதலாம். 'துக்ளக்' பத்திரிகை நிறுவனர் சோ, ராஜ்யசபா, எம்.பி.,யாக முன்பு தேர்வு செய்யப்பட்டதற்கான காரணம், சங்கபரிவாரின் ஆதரவு தான் என்பதை, அரசியல் வல்லுனர்கள் அறிவர். இன்று, அ.தி.மு.க., சந்திக்கும் குழப்பத்திற்கு விடை, விரைவில் ெவளி வராத பட்சத்தில், நிர்வாக இயந்திரம் தானாகவே பலவீனமாகும் என்பது, ெவளிப்படையான விஷயம்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement