Advertisement

மொபைல் புரட்சியில் மற்றொரு குழப்பம்?

'ஆதார்' அடையாள எண், பெரிய புரட்சியை செய்திருப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்த கருத்து, இன்றைய நிலையில் பாமர மக்களுக்கு புரிந்திருக்கிறதா என்பது கேள்வியாகும். வங்கிக் கணக்குடன், ஆதார் அடையாள எண்ணை இணைப்பதில், 'சமூக புரட்சி' ஏற்பட்டுள்ளதாகவும், அதை, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தீவிரமாக பின்பற்றி வருவதாகவும், அவர் தெரிவித்திருக்கிறார்.

பிரதமர் மோடியின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு, சில விஷயங்களை தெளிவுபடுத்திஇருக்கிறது. கரன்சிகளை குடோன்களில் அல்லது அலமாரிகளில் கட்டுக்கட்டாக அடுக்கியவர்கள் நிலையை பரிதாபமாக்கியது. சமூக விரோத கும்பல், நக்சல் சக்திகள் ஆகியவை, இதனால் முடங்கின என்பதும் நல்ல தகவலாக உள்ளது. வரி கட்டுவோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. பினாமி பரிவர்த்தனை நில விற்பனைகளில் நடந்திருப்பதற்கு அடையாளமாக, ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து வாங்கிய, 10 ஆயிரம் பேர் மீதான வருமான வரி விசாரணை துவங்கியுள்ளது.
அதே சமயம், நாட்டில், 100 கோடி பேருக்கு மேல் மொபைல் போன் வைத்துள்ளனர். இதில், மிகக் குறைந்த வருவாய் பிரிவினர், 'ஜன்தன்' என்ற இந்த அரசின் புதிய வங்கிக் கணக்கு திட்டத்தில் இணைந்திருக்கின்றனர். அவர்கள் வங்கிகளில் வைத்திருக்கும் பணம், 65 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இவர்கள் அனைவரது ஆதார் எண்ணில் உள்ள பெயரும், அப்பெயரில் உள்ள வாசகங்களும், வங்கிக் கணக்கு பெயரில் உள்ள வாசகமும், சரியாக இருப்பது முக்கியம். அப்போது இரண்டும் டிஜிட்டல் நடைமுறையில் எளிதாக இணையும். அந்த முயற்சி தீவிரமாக வங்கிகளில் மேற்கொள்ளப்பட்டாலும், சில சிக்கல்கள் தொடர்கின்றன.
அத்துடன் வங்கிக் கணக்கில் பல்வேறு வகை பென்ஷன்தாரர்கள், இதுவரை தங்களது, 'லைப் சர்டிபிகேட்' என்னும் வாழ்வதற்கான உறுதியை, அந்தந்த வங்கியில், குறிப்பிட்ட விண்ணப்பத்தில் எழுதித் தந்து, அதற்கான நடைமுறைகளை மேற்கொண்டனர். ஆனால், வங்கிகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை தீவிரமானதை அடுத்து, அங்கு விரல்ரேகை பதிவு மூலம் உறுதி செய்யும் நடைமுறை ஏற்பட்டது.

அதிக உடல் உழைப்பாளிகள், வயது முதிர்ந்த வர்கள் விரல்ரேகை அதிகம் அழிந்திருந்தால், அத்திட்டம் அவர்களுக்கு பயன் தராது. இம்மாதிரி பாதிக்கப்பட்ட பலர், தொழிலாளர் வருங்கால வைப்பு அலுவலகத்திற்கு படையெடுத்தனர். அந்த அலுவலகங்கள், 'இ - சர்வீஸ்' செயலாக்கத்தில் சிறப்பாக இருப்பதால், எளிதாக அவர்களது, 'கண்விழி ரேகை' பதிவு செய்து, அவர்களது வாழ்வாதாரத்தை, தாமதம், தடங்கலின்றி உறுதிப்படுத்தியது.

மற்றொரு பிரச்னை, ஆதார் எண்ணை மொபைலுடன் இணைப்பதாகும். இதில் விரல்ரேகை பதிவு கிடைப்பவர்கள், தெருவுக்கு தெரு உள்ள மொபைல் விற்பனை அல்லது பழுது நீக்கும் சர்வீஸ் கடைகளில், எளிதாக சிறிய தொகை கொடுத்து பதிவு செய்கின்றனர். ஆனால், விரல் ரேகை பதிவு கிடைக்காதவர்கள், இதற்கான பிரத்யேக டிஜிட்டல் கருவியில், 10 விரல்களை மாற்றி மாற்றி வைத்தாலும் பயன் வீண். இதற்காக, ஏர்டெல், வோடபோன் போன்ற தலைமை அலுவலகம் வரை அலைபவர்கள் எண்ணிக்கை அதிகம். அங்கும் விரல்ரேகை பதிவு வெற்றி பெறவில்லை என்றதும், மொபைல் வைத்திருப்பவர் கணவர் அல்லது மனைவி அல்லது மகன், மகள் ஆகியோர், அதே சர்வீசை பயன்படுத்தும் பட்சத்தில், அதை ஏற்கின்றனர். விளைவு, சம்பந்தப்பட்டவரின், 'சிம்கார்டு' உரிமையாளர் பெயர் மாறிவிடும். ஆதார் அடையாள எண் இணைப்புக்கான அவகாசம், இந்த விஷயத்தில் இன்னும் நான்கு மாத காலத்திற்கு மேற்கொள்ளலாம். இம்மாதிரி விஷயங்கள் இன்னமும், 'டிஜிட்டல் புரட்சி' முழுமை பெறாததன் அடையாளம் என்பதுடன், பலரை நோகடிக்கவும் செய்யும். தங்களது, வாடிக்கையாளர் எண்ணிக்கை அடிப்படையில், இவர்களது பெரிய கிளைகளில், கருவிழி ரேகைப் பதிவு செய்ய, ஏன் முயலக் கூடாது? அதற்கான முடிவு இன்னமும் வரவில்லை. அது, 100 கோடிக்கும் மேல் மொபைல் வைத்திருப்பவர்கள், 'சைபர் குற்றம்' அல்லது அர்த்தமற்ற அலைக்கழிப்புகளில் இருந்து, பலர் தப்ப உதவும். இந்த விஷயங்களில், அரசியல் கட்சிகள் பரப்புரை ஏதும் இல்லாதது துரதிர்ஷ்டமாகும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement