Advertisement

தனிமனித உரிமை விவகாரம்தீர்ப்பு காட்டும் திசை என்ன?

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கேஹர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் முன், ஒன்பது பேர் பெஞ்ச் வழங்கிய தீர்ப்பு சரித்திர முக்கியமானது. தனிநபர் ரகசியம் காப்பது தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துகள் குறித்து வெளியிடப்பட்ட இத்தீர்ப்பு, இது வரை வழங்கப்பட்டதில் வித்தியாசமானது. அரசியல் அமைப்பின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்புகளில், எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இப்போது முடிவு செய்வது எளிதல்ல.
தனி நபருடைய ரகசியம், எப்போது மற்றவர்களுக்கு பாதிப்பாகிறது அல்லது அரசு, மக்களின் கடமைகளை மேம்படுத்தும் திட்டங்களை அல்லது பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை கையாளும் போது, ஏதாவது தனி அமைப்பு, அதை வழக்காக்கினால், அதனால் வரும் சாதக, பாதகம் என்ன என்பது, இன்று முடிந்த முடிவாக சொல்ல முடியாது. தனி நபர் உறவுகள், குடும்ப வாழ்வில் தனிப்பட்ட விஷயங்கள், திருமணம், வாரிசுகள், மனமொத்த, 'செக்ஸ்' விவகாரங்கள், ஒரே பாலின திருமணம் ஆகியவை, சம்பந்தப்பட்ட தனி மனிதரின் விஷயங்கள். இது, அரசியலமைப்பு சட்டம், 21வது பிரிவில் பாதுகாக்க வழி வகுக்க, வலியுறுத்தப்பட்டதாக விளக்கம் தரப்பட்டுள்ளது. அதே சமயம், அடிப்படை சட்ட விதிகளை மீறும் விஷயத்தில், அரசு நடவடிக்கை எடுப்பது, மக்கள் உரிமைகள் ஆகிய விஷயங்கள் மத்திய, மாநில அரசின் சட்டங்களின் படி முடிவெடுக்க வேண்டியது என, தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அக்கோணத்தில் பார்க்கும் போது, சட்டமேதை அம்பேத்கர், அரசியல் சாசன வரையறையின் போது, தனிநபர் ஒருவரின் உரிமை, எவை என, வரையறை செய்வது சிரமம் என கூறியதால், அடிப்படை உரிமைகள் தொடாமல், அப்படியே விடப்பட்டது. இது பற்றி, சட்ட விதி 14 மற்றும் 21ல் விளக்கப்பட்டுள்ளது. அதை இத்தீர்ப்பு பிரதிபலிக்கிறது. தற்போது, மத்திய மற்றும் மாநிலங்களில், தனி நபருடைய உரிமைகள், ஒவ்வொரு விஷயத்திலும் பிரச்னையாகி, அரசு இயந்திரத்தை சமயங்களில் முடக்குகிறது. தற்போது, 'ஆதார்' அடையாள அட்டை குறித்த முடிவு எதுவும் வரவில்லை. ஆதார் குறித்த, ஐந்து நீதிபதிகள் பெஞ்ச் முடிவு கட்டும் போது, பல விளக்கம் மேலும் வரும். ஏழைகளுக்கான சிவில் உரிமைகள், தனிநபர் உரிமை எவை என்பதை சட்டமாக்க, புதிய நடைமுறைகள் கொண்டு வருவதில், இன்றைய மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பெரும் சவாலாகும். ஏனெனில், நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், தன் கருத்தாக, ஒருவரின் மன ரீதியாக ஏற்படும் முரண்பாடுகளை மாநில, மத்திய அரசுகள் கையாளுவதில் தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும் என்பது, இந்த நாட்டின் நெடுங்காலமாக உள்ள கருத்தாகும். அதிலும், மொபைல் போன் மற்றும் அதே மாதிரி சாதனங்களால் சிறுவர்கள் பாதிக்கப்படுவதை அவர் குறிப்பிட்டிருப்பது, நமக்கான எச்சரிக்கை எனலாம். மொத்தத்தில், இத்தீர்ப்பு அரசின் சட்டம் இயற்றல் நடைமுறைகளை மக்களின் ஒட்டு மொத்த நலனின் அடிப்படையில் அமைய உதவும் என்பது நிச்சயம்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement