Advertisement

திடீர் பணக்காரர்கள் புழங்கும் கம்பெனிகள்!

பிரதமர் மோடி எடுத்த அதிரடி நடவடிக்கைகளில், கரன்சி செல்லாததாக்கிய நடவடிக்கை அதிகம் விமர்சிக்கப்பட்டதாகும். இது, 2016 நவம்பரில் அறிவிக்கப்பட்ட பின், முந்தைய கரன்சியான, 500 - 1,000 நோட்டுகள், காலக்கெடுவுடன் வங்கிகளில் வந்து குவிந்தன. இன்னமும், ரிசர்வ் வங்கி அதை எண்ணியபடியே இருக்கிறது; எவ்வளவு என்று அறிவிக்கவில்லை. சுதந்திர தின உரையில், பிரதமர், இது குறித்து தெரிவித்த தகவல் நிதி அமைச்சகம் தந்ததாகும்.
ஆனால், அம்மாதிரி ஒரு துணிச்சல் முடிவு என்ன சாதித்திருக்கிறது என்பதை இன்று ஆராயும் போது, ஊழல் குறைய அது முதற்படியாக அமைந்திருக்கிறது. அதிகம் இந்த கரன்சிகளை பார்த்தறியாத மக்கள், இந்த நடவடிக்கை கண்டு அதிரவில்லை. மாறாக, பிரதமர் மோடிக்கு, அடுத்தடுத்த தேர்தல் வெற்றிகளை தந்தனர். வேலைவாய்ப்புகள் பலருக்கு பாதிக்கப்பட்ட போதும், அபாய முடிவுகளை எடுத்து, அதைச் சாதிக்கும் தலைவராகி விட்டார் மோடி.
ஏனெனில், திட்டக் கமிஷனுக்கு பதிலாக, இந்த அரசால் உருவாக்கப்பட்ட, 'நிடி ஆயோக்' அமைப்பின், தலைவராக இருந்த அரவிந்த பனகரியா, அப்பதவியில் இருந்து ெவளியேறிய பின், சில கருத்துக்களை கூறியிருக்கிறார்...ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்டது, கரன்சி மதிப்பைக் குறைத்த நடவடிக்கை என்றும், அது பலன் தந்தது என்றும், அவர் கூறியுள்ளார். அது மட்டும் அல்ல, இப்போது புழக்கத்தில் உள்ள, 2,000 ரூபாயை, பாமர மக்கள் எத்தனை பேர் தினமும் கையாளுகின்றனர் என்பதும், அவர் வாதம் ஆகும். ரியல் எஸ்டேட் தொழிலில் நடந்த, நடக்கும் முறைகேடுகள் மக்களிடம் பேசும் வகையில், இச்செயல் உதவியது. அத்தொழிலில் வரி ஏய்ப்புக்கான வழிகள் ஓரளவு அடைபட்டிருக்கின்றன. அதுமட்டும் அல்ல, இப்போது வரி கட்டும் நபர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. அதே சமயம், பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன் சுமையை கட்டுப்படுத்த, ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகள், வங்கிகள் செயல்பாட்டை வெளிப்படைத் தன்மையுடையதாக மாற்றியிருக்கிறது.
இதைவிட, 'ஷெல் கம்பெனிகள்' என்ற வார்த்தை அடிக்கடி பேசப்படுகிறது. பல அரசியல் தலைவர்கள், பணக்காரர்களின் பணப்பரிவர்த்தனைகள், வரித்துறை நடவடிக்கைகளில் வரும் போது அல்லது வரி கட்டாதவர்கள் சிக்கலில் மாட்டும் போது, அவர்கள் ரகசியமாக சேர்த்த பணம், கோடிகளில் இருப்பது தெரிகிறது. அதை அவர்கள் லெட்டர் பேடு மட்டும் உள்ள அல்லது செயல்படாத சிறிய கம்பெனிகள் பெயரில் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முதல், டில்லி வரை இக்கம்பெனிகள் இருப்பது, இந்திய ஒற்றுமையின் மற்றொரு அடையாளமானது துரதிர்ஷ்டம். பொதுவாக, ஒரு கம்பெனி, சட்டப்படி, ரிஜிஸ்டர் ஆக, அதிக காலம் தேவையில்லை. அதே சமயம், 'செபி' என்ற ஒழுங்குமுறை அமைப்பு, கம்பெனிகள் செயல்பாடுகளை கவனிக்கும் போது, சில சமயங்களில் இம்மாதிரி கம்பெனிகளை தடை செய்வதும் உண்டு. பிரதமர் மோடி அளித்த தகவலில், 37 ஆயிரம் கம்பெனிகள் உள்ளன. ஏற்கனவே வரி விதிப்பு ஆய்வுகளில், சில கம்பெனிகள் பதிவு ரத்து செய்யப்பட்ட போதும், அளவுக்கதிகமாக, 'ஷெல் கம்பெனிகள்' இருப்பது, பொருளாதார பாதிப்பு களை ஏற்படுத்தும் என, அறியப்பட்டிருக்கிறது. இம்மாதிரி கம்பெனிகளை, முறையாக சட்ட ரீதியாக கண்காணித்து, அவை இயங்குவதைத் தடை செய்யும் முயற்சிகளில், 'செபி' ஈடுபட்டு இருக்கிறது. கம்பெனிகள் விவகார அமைச்சகமும், இம்மாதிரி கம்பெனிகளை ஆய்வு செய்து கண்டறிய வேண்டும் என்றாலும், அது குறித்த அதிக தகவல்கள் ெவளிவரவில்லை.
அதே சமயம், 'ஷெல் கம்பெனி' என்ற பெயரை, திடீரென ஒரு நிர்வாகத்திற்கு சூட்டவும், கம்பெனி சட்டத்தில் இடம் இல்லை. இம்மாதிரி கம்பெனிகள் செயல்படாமல் வரி ஏய்ப்பு மோசடிகளில் ஈடுபட்டிருக்கிறதா என்பதை, முறையான விசாரணைகள் இன்றி முடிவு எடுப்பது, வர்த்தகத்தில் இடையூறு செய்வதாக அமையும்.
அதனால், இக்கம்பெனிகள் தொடர்ந்து வரிசெலுத்திய விபரங்கள், அவர்கள் மேற்கொண்டு இருக்கும் வர்த்தக விபரங்கள், எவருக்காவது, பினாமியாக செயல்படாதிருக்கிறதா என்பதற்கான ஆவணங்கள், முதலீடு செய்தவர்கள் பின்னணி ஆகியவை ஆராயப்பட்டு வருகின்றன. முந்தைய ஆட்சிக் காலத்தில், எந்த அணுகுமுறையில், பொருளாதார பாதிப்புகளை அனுமதித்தனர் என்ற கேள்வி, இப்போது சர்ச்சையாக எழுந்திருக்கிறது. திடீர் பணக்காரர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கை, மத்திய அரசுக்கு சவாலா அல்லது கறுப்புப் பணம் எந்த அளவு, இதனால் வெளிவரும் என்பது போகப்போக தெரியும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • spr - chennai,இந்தியா

    "முந்தைய ஆட்சிக் காலத்தில், எந்த அணுகுமுறையில், பொருளாதார பாதிப்புகளை அனுமதித்தனர் என்ற கேள்வி, இப்போது சர்ச்சையாக எழுந்திருக்கிறது. திடீர் பணக்காரர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கை, மத்திய அரசுக்கு சவாலா?" இல்லை இது வரும் தேர்தலில் ஆளும் கட்சிக்கு அதிக நிதியுதவி பெற வழிவகுக்கும் அவ்வளவே எந்த ஆட்சி வந்தாலும் பணக்காரர்களுக்கு பணம் சேர்க்க வாய்ப்பளித்தே ஆக வேண்டும் அது தேவையும் கூட ஆனால் அவர்கள் முறையாக பணம் சேர்க்கிறார்களா அதற்கான வரிப்பணத்தை அரசுக்கு முறையாகாது தருகிறார்களா என்று பார்ப்பதில்தான் வேறுபாடு இருக்க வய்ப்புள்ளது கறுப்புப் பணம், வங்கிக் கணக்கில் வாராத பணம் என்பதெல்லாம் எல்லா காலத்திலும் இருக்கும் அதனை அறவே ஒழிக்க இயலாது ஒழிக்கவும் கூடாது. அது சிறுகுறு வியாபாரிகளை ஏழைகளை மத்திய தர வர்க்கத்து மக்களை பாதிக்கும். அதனைக் கண்காணிப்பதுவும், கட்டுப்படுத்துவதுவும் அவசியம் ஒரு நல்ல அரசு இதனைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்தியா சுதந்திரத்தின் பொருளை உணராத மக்களைக் கொண்ட நாடு அதனால் எந்த ஒரு நடவடிக்கையும் உடனே செயல்படுத்த இயலாது என்பதற்காக திரு மோடி முரட்டுத்தனமாக செயல்படாமல், சற்று நிதானமாக கண்டிப்புடன் செயல்பட வேண்டும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement